இந்த நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 10) செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவரும், சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன், “திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே நல்லிணக்கம் இல்லை என்ற தோற்றத்தை உருவாக்குவதற்கு சிலர் திட்டமிட்டு வதந்திகளை பரப்பி வருகிறார்கள். தேர்தலுக்கு பல மாதங்கள் இருக்கும் நிலையில், சின்னம் குறித்து இப்போதே விவாதம் நடத்துவது திமுக கூட்டணியை பலவீனப்படுத்தும் செயல்” என்று குறிப்பிட்டார்.
திமுக மட்டுமல்ல அதிமுகவும் கூட நிலையான சின்னம் இல்லாத கட்சிகளை தங்களது சின்னத்தில் போட்டியிடச் சொல்வது வழக்கம்தான் என தெரிவித்த அவர், “2006ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் விசிக இருந்தபோது, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும்படி ஜெயலலிதா எங்களைக் கேட்டுக்கொண்டார். அதை தவிர்த்துவிட்டு தனி சின்னத்தில் போட்டியிட்டோம். 9 தொகுதிகளில் இரண்டு தொகுதிகளில் மட்டும்தான் வெற்றிபெற்றோம். 7 தொகுதிகளில் தோல்வியைத் தழுவினோம். இந்த இழப்புதான் அதிமுகவையும், திமுகவையும் கவலைப்படவைக்கிறது” என்றவர்,
நிலையான சின்னம் இல்லாத கட்சிகள் தனிச் சின்னத்தில் போட்டியிடுவது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக போய்விடுகிறது என்பது அக்கட்சிகள் தங்களது சின்னங்களில் போட்டியிடச் சொல்வதற்கு ஒரு காரணம் என விளக்கினார்.
மேலும், “திமுகவும், கூட்டணி கட்சிகள் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும், சுயேச்சை சின்னத்தில் நின்று தொகுதிகளை இழந்துவிடக்கூடாது, அது அக்கட்சிக்கு மட்டுமல்லாமல் கூட்டணிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும், எதிர்க்கட்சிகளுக்கும் சாதகமாகிவிடும் என்பதால் பாதுகாப்பு கருதி தங்கள் சின்னத்தில் போட்டியிடக்கேட்பது வழக்கமானதுதான். நல்லெண்ணத்தின் அடிப்படையில் அவ்வாறு கேட்கிறார்கள் என்றுதான் நாங்கள் புரிந்துகொள்கிறோம். எங்களை குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்றோ ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்றோ எதிர்மறை எண்ணத்தில் பார்க்கவில்லை” என்றும் திருமாவளவன் கூறினார்.
எழில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக