nakkeeran :ஜெயலலிதா, சசிகலா இல்லாமல் கடந்த நான்கு வருடமாக அ.தி.மு.க. இயங்கியது. சசிகலா மீண்டும் அரசியல் அரங்கத்திற்கு வருகிறார். மீண்டும் பழைய அ.தி.மு.க.வாக சசிகலாவுடன் இணைந்து பயணிக்குமா? அல்லது ஒரு புதிய ஓபிஎஸ் தலைமையை அ.தி.மு.க. ஏற்குமா? என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது. திங்கட்கிழமை செயற்குழு தொடர்பாக சனிக்கிழமையே விவாதங்கள் தொடங்கிவிட்டன.அ.தி.மு.க.வின் தலைமைக் கழகத்திற்கு சேர்ந்து வந்த ஓ.பி.எஸ்.சும், இ.பி.எஸ்.சும் செயற்குழுவில் எதைப்பற்றி விவாதிக்கலாம் என அமர்ந்து பேசினார்கள். செயற்குழுவில் இருவருக்கும் ஒத்தகருத்துள்ள தீர்மானங்களை நிறைவேற்றுவது எப்படி என அந்த தீர்மானங்களை எழுதும் பொறுப்பில் உள்ள ரவி பெர்னார்ட்டுடன் விவாதித்தார்கள். ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த விவாதத்திற்கு பிறகு இருவரும் கலைந்து சென்றார்கள்.
மத்தியில் உள்ள பா.ஜ.க., ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., சசிகலா மூவரையும் இணைத்து அ.தி.மு.க.வை கொண்டுசெல்ல விரும்புகிறது. அதற்காக சசிகலாவிடம் ஒரு பெரிய தொகையை தேர்தல் நிதியாக பெற முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் சசிகலா அணியுடன் வெளிப்படையாக எந்தப் பேச்சுவார்த்தைக்கும் பா.ஜ.க. தயாராக இல்லை.
தனி விமானத்தில் டெல்லிக்கு சென்ற டி.டி.வி.தினகரனை வெளிப்படையாக சந்திக்க பாஜக தலைவர்கள் முன்வரவில்லை. மறைமுக நடவடிக்கைகளில் பாஜக சார்பில் ராஜ்நாத் சிங், சசிகலாவுடன் பேசி வருகிறார். அந்த தகவல் தமிழகத்தில் குருமூர்த்தி உட்பட யாருடனும் பகிரப்படவில்லை. இதனால் டெல்லி என்ன நினைக்கிறது என்பது ஒரு பெரிய குழப்பம் இ.பி.எஸ்.சுக்கு இருந்தது.
இந்த குழப்பத்தை தவிர்க்க 26ஆம் தேதி மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்திக்க எடப்பாடி அப்பாயிண்ட்மென்ட் கோரினார். திடீரென்று மதியம் அந்த அப்பாயிண்ட்மென்ட் ஓ.கே. ஆனது. மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்த அந்த சந்திப்பு சசிகலா பற்றி பாஜக என்ன நினைக்கிறது? சசிகலாவிடம் இணைந்து பயணிப்பது அவசியமா? சசிகலாவுடன் இணைந்து பயணித்தால் பொதுமக்கள் மத்தியில் அ.தி.மு.க. மீது ஒரு ஊழல் கறை விழும், ஒட்டுமொத்த கட்சியே சசிகலாவின் ஆதிக்கத்திற்கு வந்துவிடும், கடைசியாக நடைபெற்ற வேலூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பா.ம.க.வுடன் இணைந்து அ.தி.மு.க. வெற்றி கோட்டை நெருங்கியது. அந்த நேரத் தில் பாராளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட முத்தலாக் மசோதாவால் அ.தி.மு.க.வுக்கு எதிராக இஸ்லாமியர்கள் ஒன்றுதிரண்டு வாக்களித்ததால் நூலிழையில் அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பை பறி கொடுத்தது. எனவே இ.பி.எஸ். தலை மையிலான அ.தி.மு.க. முன்பு, ஜெ. தலைமையிலான அ.தி.மு.க.வைப் போல வலுவாகவே உள்ளது. இந்நிலையில் சசிகலா வந்தால் குழப்பம்தான் ஏற்படும். அவர் ஒருவேளை அரசியலுக்கு வந்தால் அவர் எப்படி செயல்படுவார்? அவரை பா.ஜ.க. ஏற்றுக்கொண்டு வழிநடத்தினால் அவருக்கு என்னென்ன தடைகள் விதிக்கப்படும், ஆட்சி அதிகாரத்தில் அவர் தலையிடுவாரா? இல்லை கட்சியோடு ஒதுங்கிப்போவாரா? என ஏகப்பட்ட கேள்விகள் எடப்பாடிக்கு இருந்தது.
அத்துடன் ஓ.பி.எஸ். தரப்பு சசிகலாவுடன் ரகசியமாக இணைந்து செயல்படுகிறது. சசிகலா மீண்டும் அதிமுகவில் இணைக்கப் பட்டால் அவர் எடப்பாடிக்கு எதிரான சக்தியாக மாறுவாரா? அடுத்த தேர்தலில் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி என களம்காண சகிகலா அனுமதிப்பாரா? என்றும் எடப்பாடிக்கு சந்தேகங்கள் இருந்தன. எடப்பாடிக்கு நெருக்கமான அமைச்சரான கே.சி.வீரமணி, சசிகலா என்ற பேச்சுக்கே அ.தி.மு.க.வில் இடமில்லை என வெளிப்படையாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். அதே நாளில் கோவையில் மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்றிருந்த வேலுமணி, திடீரென கோவை ஏர்போர்ட்டுக்கு விரைந்தார். நாமக்கல் மாவட்டத்தில் தனது சொந்த ஊரில் உள்ள அமைச்சர் தங்கமணியும் அவசரமாக புறப்பட்டு கோவை விமான நிலையத்திற்கு விரைந்து வந்தார்.
இருவரும் கோவையில் இருந்து கேரள மாநிலம் கொச்சினுக்கு செல்லும் விமானத்தில் ஏறினார்கள். கொச்சினில் இருந்து டெல்லிக்கு ரகசியமாக பயணம் செய்தார்கள். இருவரும் பியூஷ் கோயலை சந்தித்து பேசினார்கள். அங்கிருந்து 26ம் ஆம் தேதி மாலை சென்னை வந்து சேர்ந்தார்கள். சென்னைக்கு வந்தவுடன் எடப்பாடியை சந்தித்தார்கள்.
நள்ளிரவு வரை டெல்லியில் நடந்த விவாதங்கள் குறித்து அலசப்பட்டன. அத்துடன் செயற்குழுவிலும் அடுத்து நடக்கும் பொதுக்குழுவிலும் என்ன நிலையை எடுப்பது என்பது பற்றி காரசாரமான விவாதங்கள் நடைப்பெற்றது என அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய அவைத் தலைவராக பொன்னையனை எடப்பாடி முன்னிறுத்துகிறார். ஓ.பி.எஸ். பண்ருட்டி ராமச்சந்திரனை கொண்டுவர விரும்புகிறார் என செயற்குழுவில் நடக்கப்போகும் விவாதத்தை பற்றி சொல்கிறது அ.தி.மு.க. வட்டாரம். இதுபற்றி பேசும் மன்னார்குடி வட்டாரங்கள், செயற்குழு பொதுக்குழு இவற்றில் எடப்பாடி என்ன செய்தாலும் அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை. நாங்கள் ஒரு கை பார்க்காமல் விடமாட்டோம் என்கிறார்கள். அதேபோல் எடப்பாடி தரப்பினரும், சசிகலாவை கட்சிக்குள் நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என வெளிப்படையாகவே பேசுகிறார்கள். ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். மோதலைவிட, சசிகலா, எடப்பாடி மோதல் மிக வலுவாக நடைபெறும் என்று அறிகுறிகள் இப்பொழுதே தெரிய ஆரம்பித்துவிட்டன.
nakkeeran
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக