சனி, 18 ஏப்ரல், 2020

கொரோனா இறப்பு இழப்பீட்டு தொகை .. ஸ்டாலின் கூற்று சரியா? ஒரு பொருளாதார ஆலோசகரின் ...

Karthikeyan Fastura : கொரோனா இறப்புக்கு அரசு கொடுக்க வேண்டிய
இழப்பீட்டுத் தொகை பற்றிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சமீபத்திய அறிக்கை பெரும் விவாதத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.
ஒரு பொருளாதார ஆலோசகராக எனது பார்வையில் இதில் எந்த பிழையும் இருப்பதாக தெரியவில்லை. கொரோனாவை பொருத்தவரை மக்கள் மீது உள்ள தவறுகளை விட அரசாங்கத்தின் தவறுகள் அதிகமாகவும் முதன்மையாகவும் உள்ளது.
ஒரு அரசாங்கம் இப்படியான ஒரு வைரல் ஃபீவர் உலகமெங்கும் பரவி வருகிறது என்று அறியும்போது விமான நிலையங்களில் துறைமுகங்களில் தேசத்தின் எல்லைகளில் உள்ள சாவடிகளில் மக்களின் போக்குவரத்தை குறைத்து இருக்க வேண்டும். அல்லது சிறிது காலத்திற்கு முற்றிலுமாக போக்குவரத்தை இன்று செய்ததைப் போல தடை செய்திருக்க வேண்டும். மேலும் அங்கேயே ஒரு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்து கண்காணிக்க வேண்டும்.

இதை செய்வதற்கு பெரிய செலவுகளும் இழப்புகளோ இருக்கப்போவதில்லை. சீனாவில் ஒரு மாநிலத்தையே ஊரடங்கு கொண்டு வந்த செய்தி வந்தபிறகும் சென்னையில் சீன மக்கள் குறிப்பாக யுஹான் மாநிலத்திலிருந்து வந்தவர்கள் திருப்பி அனுப்பப்படாமல் அனுமதிக்கப்பட்டனர். இதெல்லாம் அரசாங்கத்தின் தவறுகள். இதற்கு மத்திய அரசும் மாநில அரசும் முழுப்பொறுப்பு.
டெர்ம் இன்சுரன்ஸ்ல் குறைந்தபட்ச காப்பீடாக 50 லட்சம் உள்ளது. சராசரி காப்பீடாக ஒரு கோடி ரூபாய் உள்ளது. ஒரு குடும்பத்தலைவர் இறக்கும்போது அவரது குடும்பம் பொருளாதார சிக்கலை எதிர்கொள்ளக் கூடாது என்பதற்காக அவரது ஆண்டு வருமானத்தைவிட 20 மடங்கு காப்பீடு செய்து கொள்ள முடியும் என்பதுதான் டெர்ம் இன்சுரன்ஸ்.
இதைத்தான் எதிர்க்கட்சித் தலைவர் மக்களின் சார்பாக அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கிறார். உண்மையிலேயே ஒரு உயிரிழப்பிற்கு அவரது குடும்பம் பெற வேண்டிய நியாயமான தொகை இது. இதை கேலி செய்வதற்கு எதுவுமில்லை.
ஒரு எதிர்க்கட்சித் தலைவர் இந்த அளவுக்கு கேட்டால் தான் அதில் Negotiate செய்து கால்வாசி அல்லது 10% ஆவது கிடைக்கும். அதைத்தான் அவர் செய்திருக்கிறார். அரசாங்கத்திற்கு இப்படியான அழுத்தத்தை கொடுக்கும் போதுதான் அரசாங்கமும் இதை கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கைகளை எடுக்கும்.
இன்று நாம் பார்க்கும் போலீஸ் மற்றும் தீயணைப்புப் படை என்பது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மீது விழுந்த அழுத்தத்தினால் உருவாக்கியவை. பின்பு அதை அரசாங்கங்கள் தங்கள் பொறுப்பில் எடுத்துக் கொண்டனர்.
நியாயமாக இந்தக் கோரிக்கையை மத்திய அரசில் எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் வைத்திருக்க வேண்டும். முதலாளித்துவத்தை நாம் கற்று வரும் வெளிநாடுகள் இந்த நேரத்தில் மக்களுக்கு கொடுத்து வரும் சலுகைகள், இனாம்கள் முன்னால் நாம் எடுத்து வரும் நடவடிக்கைகள் ஒன்றுமே இல்லை.
கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் 0.002% சதவீதம் மட்டுமே இருக்கிறது. அதில் உயிரிழந்த ஒரு சதவீதம் 0.00006% என்ற அளவில்தான் இருக்கிறது. இனிவரும் காலங்களில் தமிழ்நாடு முழுக்க குரானா தீவிரமாக பரவினால் கூட 70,000 பேர் பாதிக்கப்படுவார்கள். அதில் 3% இழக்கக்கூடும் என்றால்கூட 2100 பேர் வருவார்கள். இவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்தால்கூட 2100 கோடி தான் செலவாகும். இது தமிழ்நாட்டு Tasmac வருமானத்தில் 5% மட்டுமே.
இருந்தபோதும் இப்போது உள்ள சூழ்நிலையில் இதுபோன்ற ஒரு அறிக்கையை அரசும் கொடுத்துவிட முடியாது. கொரோனா உயிரிழப்பில் குடும்பத்திற்கு வருமானத்தைக் கொண்டு வரும் குடும்பத் தலைவர் என்றால் அவருக்கு 10 லட்சம் ரூபாயும், மற்றவர்களுக்கு 5 லட்சம் ரூபாயும் வழங்கலாம்.
குறைந்தபட்சம் சுகாதாரப் பணியாளர்களாக இந்த வைரஸ் போரில் முன்னின்று மக்களுக்காக போராடிக் கொண்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், கடைநிலை ஊழியர்கள் இறந்தால் ஒரு கோடி ரூபாய் அவசியம் அவரது குடும்பத்திற்கு இழப்பீடாக கொடுக்க வேண்டும். அவர்களுக்கு விளக்கேற்றுவதும், கை தட்டுவதும், மணி ஆட்டுவதும் வெறும் நாடகமே. மறுபுறம் இந்தப் போராட்டத்தில் மக்களுக்காக உயிர்விட்ட மகனின் இறந்த உடலைக் கூட பெற்ற தாய் பார்க்கமுடியாமல் செய்யும் ஊர் மக்களைக் கொண்ட அவலமான நாடு இது
மணிமண்டபம் கட்டி இந்தப் போராட்டத்தை பற்றிய வரலாற்றை பதிவு செய்து அதில் பங்கு கொண்ட அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கு காலாகாலத்திற்கும் நன்றி செலுத்த வேண்டும்

கருத்துகள் இல்லை: