ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

கிராமங்களில் உருவாகும் திடீர் திண்ணை கடைகள்!

கிராமங்களில் உருவாகும் திடீர் திண்ணை கடைகள்!மின்னம்பலம : கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வருமான இழப்பை ஈடுகட்ட ராமநாதபுர மாவட்டக் கிராமங்களில் உற்பத்தியான காய்கறிகள் உள்ளிட்டவைகளை விற்பனை செய்ய திடீர் திண்ணை கடைகள் உருவாகி உள்ளன.
ஊரடங்கு உத்தரவு மூலம் கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஊரடங்கு உத்தரவு மக்களைக் காப்பதற்காக எடுக்கப்பட்டுள்ளது என்பதால் அனைவரும் வாழ்வாதாரம் இழந்தாலும் தங்களை தாங்களே தற்காத்து கொள்ள ஒத்துழைத்து வருகின்றனர்.


சாதாரண நாட்களில் கிராமங்களில் விளையும் காய்கறிகள் உள்ளிட்டவைகளை நகர்பகுதிகளுக்குச் சென்று சாலையோரங்களில் பரப்பி விற்பனை செய்பவர்களே அதிகம். இவ்வாறு விற்பனை செய்யும் பணத்தில் கிடைக்கும் லாபத்தை வைத்தே கிராமங்களில் இன்றளவும் தங்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றியும், சேமிப்பாகவும் வைத்து வருகின்றனர். தற்போது கிராமவாசிகளை இந்த ஊரடங்கு உத்தரவு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தங்கள் வீடுகளின் பின்னால், தோட்டங்களில் விளையும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவைகளை நகர்பகுதிக்குக் கொண்டு வந்து விற்பனை செய்ய வாகன வசதி இல்லாததால் இதுபோன்ற விற்பனையாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
இவர்களுக்கு தற்போது கைகொடுத்துள்ளது அவர்களின் வீட்டுத் திண்ணை, வாசல்தான். ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கிராமங்களில் தற்போது திடீர் திண்ணை கடைகள் பரவலாகத் தொடங்கப்பட்டுள்ளன. தங்களிடம் விளையும் காய்கறிகள் உள்ளிட்டவைகளை ஊருக்குள்ளும், அருகில் உள்ள கிராமங்களுக்கும் கூடைகளில் எடுத்து சென்று அதிகாலையிலேயே விற்பனையைத் தொடங்கி விடுகின்றனர். இதன்பின்னர் மீதம் உள்ளவைகளை தங்களின் வீடுகளின் திண்ணையிலும், வாசலிலும் வைத்து அந்த வழியாக செல்பவர்கள், தெரிந்தவர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். மொத்தமாக விற்பனை செய்ய முடியாவிட்டாலும் திண்ணை கடைகளின் மூலம் விளைபொருட்கள் வீணாகாமல் விற்பனையாவதோடு, அதன்மூலம் வருமான இழப்பை சரிகட்ட வருமானம் கிடைப்பதால் கிராம மக்கள், விவசாயிகள் ஓரளவு நிம்மதி அடைந்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: