மின்னம்பலம் : கொரோனா எனும் கொடிய வைரஸ், உலகம் முழுவதும் பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பரிசோதனையைச் செய்துகொள்ள பல்வேறு தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இங்கு ஒவ்வொருவருக்கும் ரூ.4,500 வரையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த நிலையில் தனியார் சோதனை மையங்களில் கட்டணம் செலுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. வழக்கறிஞர் சஷாங்க் தியோ சுதி தாக்கல் செய்த பொதுநல மனுவில், நாடு முழுவதும் கொரோனா பரிசோதனையை இலவசமாக மேற்கொள்ள மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்இந்த மனு ஏப்ரல் 8ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது கொரோனா சோதனையை அனைத்து குடிமக்களுக்கும் இலவசமாக மேற்கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்த உத்தரவை மறு பரிசீலனை செய்யக் கோரி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் எனவும், 107 மில்லியன் ஏழைக் குடும்பங்கள் ஏற்கனவே ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் உள்ளனர். இவர்களுக்கு வேண்டுமானால் இலவசமாகச் சோதனை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
இதையடுத்து, கொரோனா பரிசோதனையை இலவசமாகச் செய்ய வேண்டும் என்று உத்தரவில் சில மாற்றங்களைச் செய்த உச்ச நீதிமன்றம், “ஆயுஷ்மான் திட்டத்தில் உள்ளவர்களுக்கும், வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கும் கொரோனா சோதனை இலவசமாகச் செய்யப்பட வேண்டும். அவர்கள் யார் என்பதை அரசு முடிவு செய்து கொள்ளலாம். இதுதொடர்பாக அரசு இன்னும் ஒரு வாரத்திற்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளது.
-கவிபிரியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக