வியாழன், 16 ஏப்ரல், 2020

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5,000: அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5,000: அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்!மின்னம்பலம் : கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் வழங்க வேண்டுமென அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்புப் பணிகளில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க இன்று (ஏப்ரல் 16) திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்த இக்கூட்டத்தில், திமுக தோழமை கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
முடிவில் வீடியோ வாயிலாக பேசிய ஸ்டாலின், “அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும். கொரோனா பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம், ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். மருத்துவ உபகரணங்கள் வாங்குவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க வேண்டும். அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் சிறப்பு நிவாரணமாக ரூ.5,000 வழங்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்” என்று தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் புதிய செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டதாக தெரிவித்த ஸ்டாலின், “அண்ணா அறிவாலயத்தில் நடக்க இருந்த அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு தடை விதித்தனர். எனினும், இதனை நாங்கள் அரசியல் ரீதியாகப் பார்க்காமல், மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு வீடியோ கான்பரன்சிங் மூலமாக நடத்தியுள்ளோம்” என்று விளக்கினார்.
துணை முதல்வர் நேற்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு அதிகாரிகள் கலந்துகொண்டதாகவும், அமைச்சர் சி.வி.சண்முகமும் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளதாகவும் குறிப்பிட்ட ஸ்டாலின் , “11 பேர் கூடும் ஒரு கூட்டத்திற்கு தடை விதித்தவர்கள், துணை முதல்வரும், அமைச்சர் நடத்திய கூட்டத்தை ஏன் தடுக்கவில்லை. அரசியல் நோக்கத்தோடு அரசு செயல்பட்டு வருகிறது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை” என்றும் விமர்சித்தார்.
தங்களுடைய கோரிக்கைகளை முடிந்த அளவு செயல்படுத்த வேண்டுமெனவும், அலட்சியப்படுத்தினால் மீண்டும் ஒரு முறை அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
எழில்

கருத்துகள் இல்லை: