திங்கள், 13 ஏப்ரல், 2020

சடலம் மூலம் வைரஸ் பரவுமா? மக்கள் போராட்டம்!

சடலம் மூலம் வைரஸ் பரவுமா? மக்கள் போராட்டம்! மின்னம்பலம் : கொரோனா தொற்று மக்களிடையே ஏற்படுத்தியிருக்கும் பீதி சென்னை அம்பத்தூர் பகுதியில் இன்று (ஏப்ரல் 13) போராட்டமாகவே வெடித்திருக்கிறது.
ஆந்திராவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் சென்னையில் எலும்பு முறிவு நிபுணராக பணியாற்றி வருகிறார். கடந்த பத்து நாட்களுக்கு முன் அவருக்கு காய்ச்சல் அதிகமாக ஏற்படவே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டது. அவர் மட்டுமல்லாமல் அவர் மனைவி, குடும்பத்தினர் என மூவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது. நேற்று இரவு அந்த மருத்துவர் மரணமடைந்துவிட்டார். 60 வயதான அவரது உடலை சுகாதாரத்துறை அதிகாரிகளின் அறிவுரைப்படி, தனியார் மருத்துவமனைப் பணியாளர்கள் அம்பத்தூர் மின் மயானத்துக்கு ஆம்புலன்ஸில் எடுத்துச் சென்றனர். அப்போது அங்கிருந்த மயான ஊழியர்கள், ‘எங்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லை. எனவே இந்த உடலை நாங்கள் தகனம் செய்யமாட்டோம்’ என்று கூறினார்கள். அதற்குள் அம்பத்தூர் மின் மயானம் அமைந்திருந்த பகுதியில் குடியிருப்பவர்கள், ‘கொரோனாவால் உயிரிழந்தவரை இந்த பகுதியில் தகனம் செய்யக் கூடாது’ என்று திடீரென எதிர்ப்பு தெரிவித்தனர்.

இவரை இங்கே எரித்தால் கொரோனா தொற்று பரவக் கூடும் என்று அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.
இன்று காலையில இருந்து மதியம் வரை அவர்களுடன் போராடிப் பார்த்த மருத்துவமனை மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் அந்த டாக்டரின் உடலை மீண்டும் ஆம்புலன்ஸில் ஏற்றி வைத்துக் கொண்டு போலீசுக்கு போன் போட்டிருக்கிறார்கள். சில நிமிடங்களில் அங்கே அம்பத்தூர் போலீஸார் வந்தனர். மாநகராட்சி அதிகாரிகளுக்கும், சுகாதார அதிகாரிகளுக்கும் தகவல் சொல்லப்பட்டது. போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட அக்கம்பக்கத்தினரிடம், ‘கொரோனாவால் ஒருவர் இறந்துவிட்டால் அந்த உடல் மூலமாக தொற்று பரவாது’ என்று கூறியும் பொதுமக்கள் கூட்டமாக கூடி எதிர்ப்பு தெரிவித்தனர்.கலைந்து செல்லவும் மறுத்தனர். இதன் காரணமாக உடலை ஆம்புலன்ஸில் இருந்தபடியே திருவேற்காடு மயானத்துக்குக் கொண்டு சென்றார்கள் சுகாதாரத்துறை ஊழியர்கள்.
“இறந்து போன மருத்துவர் ஆந்திராவின் நெல்லூரைச் சேர்ந்தவர். கொரோனா வைரஸ் காரணமாக ஏற்படும் மரணங்களில், சடலங்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படாது என்றாலும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தான் மயானத்துக்கு அனுப்பப்படும். கொரோனா தாக்கி உயிரிழந்த அவரின் உடலை தகனம் செய்ய முழு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. ஆனால் மக்களின் பீதியை களைய முடியவில்லை. மேலும் 144 உத்தரவை மீறி சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் எப்படி கூடினார்கள் என்றும் புரியவில்லை. மக்களிடையே விழிப்புணர்வு அதிகரிப்பதற்கு பதில் பீதி அதிகரித்திருப்பதையே இது காட்டுகிறது. தமிழகத்தில் இது தொடர்பான விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும்” என்கிறார்கள் சுகாதாரப் பணியாளர்கள்.
-வேந்தன்

கருத்துகள் இல்லை: