வெள்ளி, 17 ஏப்ரல், 2020

வளையல்காரரும் , மிட்டாய்காரரும், ஐஸ்காரரும் இப்போதெல்லாம் எங்கள் தெருவிற்கு வருவதேயில்லை.

சுமதி விஜயகுமார் : பாட்டி எப்போதும் இது போன்ற வளையல்காரரிடம் தான் வளையல் வாங்குவார். இன்னமும் நியாபகம் இருக்கிறது. எங்கள் தெரு
வழியாக சென்றுகொண்டிருந்த வளையல்காரரை அழைத்து வளையல்களை காட்ட சொல்லுவார். வளையல்காரர் தன் கையில் இருக்கும் பெட்டியை திறப்பார். இப்போதிருக்கும் fancy storeகளுடன் ஒப்பிட்டால் மிக மிக குறைந்த அளவே வளையல்கள் இருக்கும். 90% கண்ணாடி வளையல்கள் தான் இருக்கும். பல வண்ணங்களில். பாட்டி ஒருமுறை கூட கண்ணாடி வளையல் வாங்கி பார்த்ததில்லை. இருபுறமும் மஞ்சள், நடுவில் சிகப்பு கலந்த பிளாஸ்டிக் வளையலைத்தான் வாங்குவார்கள். ஒருவேளை வேலை செய்ய கண்ணாடி வளையல் சரிவராது என்று தவிர்த்திருக்கலாம்.
ஒவ்வொரு முறையும் வளையல்காரர் தன் பெட்டியை திறக்கும் போதும், எவ்வளவு பிடித்த விளையாட்டை விளையாடி கொண்டிருந்தாலும் அதை விட்டுவிட்டு பாட்டியின் அருகே அமர்ந்துகொள்வேன். வளையல்களை காண. அவர் பெட்டியை திறக்கும் போது கிடைக்கும் அந்த எதிர்பார்ப்பு இது வரை வேறு எந்த கடைகளிலும் கிடைத்ததில்லை.ஏனோ நான் வளையல்காரரிடம் வளையல் வாங்கியதேயில்லை. அம்மா எனக்கு கடைகளில் தான் வாங்கி கொடுப்பார். ஆசையாக இருந்த போதிலும் அம்மாவிடம் வளையல்காரரிடம் வாங்கி கொடுங்கள் என்று கேட்டதில்லை.ஒரு வேளை கேட்டிருந்தால் வாங்கி கொடுத்திருந்திருப்பார்களோ என்னவோ.

வளையல்காரருக்கு அடுத்து ஜவ்வு மிட்டைக்காரருக்காக விளையாட்டை நிறுத்துவோம். தூரத்தில் ஒரு நீண்ட காம்பில் பிளாஸ்டிகால் சுற்றிய பொம்மையை பார்த்ததும் வீட்டிற்குள் ஓடி விடுவோம். காசு வாங்க. எவ்வளவு என்று நினைவில் இல்லை. ஆனால் ஒவ்வொரு பொம்மைக்கும் ஒவ்வொரு விலை. வாத்து, மயில், கை கடிகாரம் என்று அந்த கம்பின் உச்சியில் இருக்கும் ஜவ்வு மிட்டாயை செய்து கொடுப்பார். கை கடிகாரம் செய்தி அதை கையில் ஒட்டி விடுவார். என்ன பொம்மை செய்தலும் கொசுறாக கொஞ்சமாக ஜவ்வு மிட்டாயை கன்னத்தில் ஒட்டி விடுவார். கூட்டத்தை பொறுத்து அவரின் பொம்மையின் வடிவம் நேர்த்தி பெரும். நிறைய குழந்தைகள் இருந்தால் பொம்மை பார்க்க சுமாராகத்தான் இருக்கும். ஒருவர் மட்டும் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் மிக நேர்த்தியாக செய்து கொடுப்பார். அவர் சென்றதும் , யாருடைய மிட்டாய் மிக அழகாக இருக்கிறது என்று பஞ்சாயத்து நடக்கும்அடுத்தது ஐஸ் வண்டி.இப்பொது போல் அல்ல. அவரிடம் மூன்றே மூன்று வகைகள் தான் கிடைக்கும். ஆரஞ்சு, சேமியா , பால் ஐஸ். நான் எப்போதும் பால் ஐஸ் தான் வாங்குவேன். அதுதான் முடியும் வரை அதே சுவையுடன் இருக்கும். ஆரஞ்சு , சேமியா ஐஸ் வாங்கினால் உறிந்தே அதன் சுவையை எடுத்த பின்னர் வெறும் ஐஸ் மட்டும் தான் இருக்கும். இதை தவிர பக்கத்து கடை அண்ணன் கடை எப்போதும் திறந்திருக்கும். தேன்மிட்டாய் , தேங்கா மிட்டாய், கல்கோனா, nutrine பச்சை நிற wrapper மிட்டாய் , கயிறில் இணைத்த மிட்டாய் , குழல் அப்பளம் , இலந்த வடை, வெண்ணை பிஸ்கட் , உப்பு பிஸ்கட் , மேரி பிஸ்கட் கிடைக்கும்.
நினைத்த பொழுதெல்லாம் வாங்கி விட முடியாது. காசு இருக்காது. வீட்டில் நாலணா எட்டணா வாங்குவதெல்லம் பெரிய காரியம். ஒரு முறை நான் ஒரு முறை அண்ணன் என்று மாற்றி மாற்றி வாங்குவோம். ஒவ்வொரு நாள் ஒவ்வொருவரிடம். அம்மா , பாட்டி , சித்தப்பா தான் கொடுப்பார்கள். அப்பாவும் தாத்தாவும் strict. தினமும் எல்லாம் வாங்க முடியாது. விடுமுறை நாட்களில் தான் வாங்க விடுவார்கள். அத்திப்பூத்தாற்போல் எப்போதாவது பள்ளி நாட்களில் காசு கிடைக்கும். Sophia school, RC school அந்த வீதியிலே இருப்பதால் , பள்ளி நாட்களில் காலை மாலையில் அண்ணன் கடையில் கூட்டம் அள்ளும்.
வளையல்காரரை கடைசியாக வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசத்தில் பார்த்தது. அதை படிக்கும் பொழுதுதான் நான் நேரில் பார்த்த வளையல்காரர் என்ன கஷ்டத்தில் இருந்திருப்பார் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. அதை நினைக்கும் போதெல்லாம், பாட்டி அந்த வளையல்களுக்கு பேரம் பேசாமல் வாங்கி இருக்கலாமோ என்று தோன்றும்.
வளையல்காரரும் , மிட்டாய்காரரும், ஐஸ்காரரும் இப்போதெல்லாம் எங்கள் தெருவிற்கு வருவதேயில்லை. பக்கத்து அண்ணன் கடை மட்டும் இன்னமும் இருக்கிறது. எப்போது சென்றாலும் அண்ணன் சிரித்த முகமாக 'சுமதி , எப்படிம்மா இருக்க ' என்று கேட்பார். இப்போதெல்லாம் கவினுக்கும் செழியனுக்கும் choclate ,chips கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

கருத்துகள் இல்லை: