வியாழன், 16 ஏப்ரல், 2020

பணக்காரர்கள் இறக்குமதி செய்த கொரோனா: முதல்வர்!


பணக்காரர்கள் இறக்குமதி செய்த கொரோனா: முதல்வர்! minnambalam : சென்னை தலைமைச் செயலகத்தில், ஊரடங்கு அமலில் இருப்பது தொடர்பாகவும், கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாகவும், இன்று (ஏப்ரல் 16) மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “ ஏப்ரல் 11ஆம் தேதி நடந்த ஆலோசனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்த வேண்டும் என்ற கருத்தை பிரதமர் முன்வைத்தார். அதன்படி, மருத்துவ வல்லுநர்கள், மத்திய சுகாதாரத் துறை, உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட கருத்தின் அடிப்படையிலேயே இந்த நோய் தடுப்பு பணிகள் விரைந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்த வைரஸ் தொற்று தடுப்பு பணிகளுக்காக மருத்துவ உபகரணங்கள் வாங்க ஜனவரி 31ஆம் தேதியே ஆணை பிறப்பிக்கப்பட்டது. மருந்துகள் வாங்க பிப்ரவரி முதல் வாரத்தில் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதற்காக 146 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஜனவரி 23ஆம் தேதி முதலே விமான நிலையங்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மார்ச் 7ஆம் தேதி தான் தமிழகத்தில் முதல் தொற்று கண்டறியப்பட்டது.
திருச்சி, கோவை ,மதுரை மற்றும் பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட வசதிகள் மார்ச் 15ஆம் தேதி தொடங்கப்பட்டன. அன்றைய தினமே பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில், திரையரங்குகள், மால்கள் மூடவும் உத்தரவிடப்பட்டது. பள்ளிகளும் மூடப்பட்டன.
மார்ச் 16ஆம் தேதி முதல் மாநில எல்லைகளில் சோதனைகள் தொடங்கப்பட்டன. மார்ச் 23ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மத்திய அரசு உத்தரவு பிறப்பித்ததற்கு முன்னரே மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதுவரை என்னுடைய தலைமையில் 12 முறை ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன. மூன்று முறை மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனைகள் நடைபெற்றன. பிரதமர் இருமுறை மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
மார்ச் மாத இறுதியில் 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்கள், 1500 ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோரை மருத்துவ பணியில் தமிழக அரசு ஈடுபடுத்தியது. 334 சுகாதார ஆய்வாளர்கள், 2715 சுகாதார பணியாளர்கள் ஏப்ரல் 13ஆம் தேதி நியமிக்கப்பட்டனர். இது மட்டுமின்றி நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறதா, மருத்துவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறதா என்பதை கண்டறிய 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் மொத்தம் 3,371 வென்டிலேட்டர்கள் உள்ளன. 65 லட்சம் மூன்று மடிப்பு முகக் கவசங்கள் உள்ளன. 3 லட்சம் என் 95 முகக் கவசங்கள் உள்ளன. 2 லட்சம் பிபிஇ முழு உடல் பாதுகாப்பு கவசங்கள் உள்ளன. டாட்டா நிறுவனம் வழங்கிய பிசிஆர் கருவிகள் உட்பட 1.95 லட்சம் பிசிஆர் கருவிகள் உள்ளன. இதில் 68,000 கருவிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் பரிசோதனைக்காக வழங்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2571 வென்டிலேட்டர்கள், 35 ஆயிரம் பிசிஆர் கருவிகள் , 5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்க கொள்முதல் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஆனால் இப்போதுதான் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கின்றனர். அது தவறு. ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்துக்கு என்னென்ன தேவை என்ற கோரிக்கைகளையும் பிரதமரிடம் முன்வைத்துள்ளோம். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
ஆய்வகங்கள், மருத்துவமனைகள், படுக்கைவசதிகள்
தனியார் ஆய்வகங்கள் 10 உட்பட மொத்தம் 27 ஆய்வகங்கள் தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு நாளொன்றுக்கு 5590 பரிசோதனைகள் மேற்கொள்ளலாம். 22 அரசு மருத்துவமனைகளில் இந்த வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தனிமைப்படுத்தப்பட்ட வசதிகள் கொண்ட அரசு மருத்துவமனைகளின் எண்ணிக்கை 101. தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கை 154. மொத்தம் 29 ஆயிரத்து 74 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளும், 2521 தீவிர சிகிச்சை படுக்கை பிரிவுகளும் உள்ளன.
விலை ஏற்றமா?
காய்கறிகளின் விலை உயர்ந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் கூறுவது முற்றிலும் தவறானது. கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.20, இம்மாதம் ரூ.15. பெரிய வெங்காயம் ரூ.25க்கு விற்கப்படுகின்றது, உருளைக்கிழங்கு ரூ.25க்கு விற்கப்படுகிறது. கேரட் ரூ.40, பீன்ஸ் ரூ.25, கத்தரிக்காய் ரூ.20க்கு விற்பனையாகிறது. எனவே காய்கறிகளின் விலை குறைக்கப்பட்டிருக்கின்றது.
அது போன்று அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து இருப்பதாக கூறுகின்றனர். ஆனால் அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக வெளிமாநிலங்களில் இருந்து, வேளாண் துறை மூலமாக 500 மெட்ரிக் டன் துவரம் பருப்பு, 500 மெட்ரிக் டன் உளுத்தம் பருப்பு, 250 மெட்ரிக் டன் கடலை பருப்பு, பொட்டுக்கடலை 250 மெட்ரிக் டன், மிளகு 100 மெட்ரிக் டன், சீரகம் 100 மெட்ரிக் டன், கடுகு 100 மெட்ரிக் டன், வெந்தயம் 100 மெட்ரிக் டன், பூண்டு 250 மெட்ரிக் டன் உள்ளிட்ட பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருகிறது. விலை உயர்வு இருக்கக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காவல்துறை நடவடிக்கை
144 தடையை மீறியதால் இதுவரை 1 லட்சத்து 94 ஆயிரத்து 995 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 8 ஆயிரத்து 139. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 827. 89 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
ரேபிட் கிட்
நமக்கு வரவேண்டிய கருவிகள் வேறு நாட்டுக்கு சென்று விட்டது. சீனாவிடமிருந்து வாங்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். குறுகிய காலத்தில் கருவிகளை அனுப்பி வைப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.
கூடுதல் நிதி கிடைக்குமா?
மாநில பேரிடர் நிதிக்கு 510 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது. தேசிய சுகாதார இயக்கம் 312 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. தொடர்ந்து தமிழகத்துக்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என்று காணொலி காட்சி மூலம் பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நோயிலும் அரசியல்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்துவது எதிர்க்கட்சிகளுக்கு பிடிக்கவில்லை. புயல், சுனாமி என எது வந்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குறை சொல்லிக் கொண்டே தான் இருப்பார்.
மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துககு தேவையான நிதியை பெற்று தர வேண்டியது திமுக எம்.பி.க்கள் தான். மத்திய அரசிடமிருந்து தேவையானவற்றை தமிழகத்துக்கு பெறுவதற்காகத்தான் மக்கள் அவர்களுக்கு வாக்களித்து அனுப்பியிருக்கிறார்கள். ஆனால் திமுக எம்.பி.க்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?. நோயிலும் கூட அரசியல் செய்து வருவது வருத்தமாக இருக்கிறது. தமிழகத்தில் தான் இதுபோன்ற சூழ்நிலை இருக்கிறது.
வெளிநாடுகளுக்கு சென்று திரும்பிய பணக்காரர்கள் தான் கொரோனாவை இறக்குமதி செய்துள்ளனர். ஏழைகளுக்கு எந்த நோயும் இல்லை. தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று உருவாகவில்லை.இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் தமிழக அரசை குற்றம்சாட்டி வந்தன. குறிப்பாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கும், முதல்வருக்கும் இடையே அறிக்கைபோர் நடந்து வந்தது. இந்நிலையில் நோயிலும் அரசியல் செய்வதாக முதல்வர் விமர்சித்துள்ளார்.
-கவிபிரியா

கருத்துகள் இல்லை: