சனி, 18 ஏப்ரல், 2020

இன்று. ஜெயகாந்தனின் மூன்றாமாண்டு நினைவு நாள்.


இன்று. ஜே.கே.வின் மூன்றாமாண்டு நினைவு நாள்...
ஒரு பிரபலமான எழுத்தாளரோடு பேசிக்கொண்டிருக்கையில், அவர் சொன்னார்:
‘‘ஜெயகாந்தன் ஊரில் எழுத்தாளனாக இல்லாமல் வெறுமனே கூலிவேலை பார்த்திருந்தாலும் இப்படியேதான் இருந்திருப்பார்’’
‘‘எப்படி?’’
‘‘அறச்சீற்றம் கொண்டவனாக, தன்னெதிரே நடக்கும் சமூக அநீதிக்கு எட்டி அடிப்பவனாக, அடிக்கடி முரண்படுபவனாக’’ அவர் பேசிக் கொண்டேப் போனார். நான் இடையே நின்று கொண்டேன்.
இது ஒரு மனிதனின் இயல்பு, தான் எதுவாய் ஆனபோதும், எந்தப் பூச்சையும் தன்மேல் பூசிக் கொள்ளாமல் அப்படியே இருப்பது. அப்படித்தான் தன் வாழ்வின் இறுதி நாள் வரை ஜே.கே. இருந்ததாகத் தோன்றுகிறது.
கடந்த எட்டாண்டுகளாக எந்த மனிதர்களிடமும் பௌதீக தொடுதல்கூட இன்றி இருந்தார் அவர். ஆனாலும் தமிழ் வாசகர்களும், எழுத்தாளர்களும் தங்கள் உரையாடல்களில், விவாதங்களில், எழுத்தில், அவரைத் தொடாமல் இருந்ததில்லை.

முப்பது வருடங்களாக எழுதாமல் இருந்த ஒரு படைப்பாளியை இவர்கள் ஏன் இவ்வளவு நேசித்தார்கள் அல்லது விமர்சித்தார்கள் என்பதற்கான விடை ஒன்றுதான். அவர் எழுதின காலத்தில் அவர் எழுத்து, மற்ற எவர் எழுதியதைவிடவும் தனித்துவம் மிக்கது. பிரபஞ்சன் வார்த்தையில் சொல்வதானால், மூடுண்ட தமிழ் சமூகத்தை வெளிக் கொணர அவர் எழுத்துக்கள் எத்தனை வேதி வினை ஆற்றியுள்ளன என்பது, தொடர்ந்து அவரை வாசித்து வந்த ஒரு வாசகனால் எளிதில் கண்டு கொள்ள முடியும்.
நான் பத்தாம் வகுப்பு முடிந்து விடுமுறையில் ஊர் சுற்றியபோது தான் முதன் முதலில் ராணி முத்துவில் வெளிவந்த அவரின் ‘ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும்’ படித்தேன்.
இத்தனை வருட வாழ்வின் உன்னதமும், சலிப்பும், கசப்பும் கடந்த பின்னும் அந்த இன்ஸ்பெக்டரும், அந்த பாலியல் தொழிலாளியும் என்னுள் இருக்கிறார்கள். அவர்களின் அர்த்தம் பொதித்த உரையாடலைக் கடக்க முடியாதவனாக இருக்கிறேன்.
இது ஜே.கே. எழுத்தின் மிகப்பெரிய வெற்றிதான்.
இப்போதும் கூட ஹென்றி என் ஆதர்சம்தான். அவனைப் போல சுதந்திரமாக, அவனைப் போல பற்றற்றவனாக, அவனைப் போல மனிதர்களை நேசிப்பவனாக, லௌகீகத்தை உதறுபவனாக வாழவேண்டும் என்ற தவிப்பு எப்போதும் இருக்கிறது.
சாரங்கனுக்கு வாய்த்தது போல அறிவு ஜீவிப் பெண்களின் உரையாடல்களுக்கு மனம் ஏங்கித் தவித்தது உண்டு. நாம் சந்திக்கிற பெண்கள் உப்பு மிளகாய் புளியைத் தாண்டி சீரியல், நகை, ப்ளாட், கார் வரை வந்திருக்கலாம். ஆனால் சாரங்கனுக்குக் கிடைத்த ஸ்நேகிதி நவீன ஓவியம், இசை என நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே பேசுபவளாக இருந்திருக்கிறார்.
இருக்கலாம். அவர் தன் படைப்பின் மௌனத்தை உடைத்துக் கொண்டு சத்தம் போட்டு பேசியிருக்கலாம்.
அந்த காலத்திற்கு அத்தனை சத்தம் தேவையென அவர் உறுதியாக நம்பினதே அதன் காரணம்.
தமிழ் எழுத்தாளனின் உருவத்தை நினைவுறுத்தும் போது தோன்றிய ஒரு பரிதாபகரமான தோற்றத்தை அவர் தனி ஒருவனாகத் தகர்ந்தெறிந்திருக்கிறார். எழுத்தாளன் என்று நம்முன் தோன்றும் ஒரு உருவத்திற்கு ஒரு கம்பீரத்தைத் தந்தவர் ஜெயகாந்தன்தான்.
அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர். ஒரு மேடையில் பேசிக் கொண்டிருக்கையில், கால்மேல் கால் போட்டு ஜே.கே. உட்கார்ந்திருக்கும் ஒரு கறுப்பு வெள்ளைப் புகைப்படம் இன்றளவும் தனித்துவமானதும், பிரசித்தி பெற்றதுமாகும். அப்புகைப்படத்தை முதன்முதலில் பார்த்த சுந்தர ராமசாமி,
‘‘ஒரு வரியும் எழுதாமல் போனாலும் கூட இவன்தான் என் ஆதர்சம். ஒரு எழுத்தாளன் பொது சமூகத்தில் எப்படி இருக்க வேண்டும் என்ற என் அந்தரங்க கனவை மெய்ப்பித்தவன்’’ என பரவசப்பட்டிருக்கிறார்.
சென்னையில் நடந்த இலக்கிய சங்கமத்தில் அவரை மேடையில் வைத்துக் கொண்டு, அவருடைய படைப்புகள் குறித்து ஒரு ஆய்வரங்கம் நடைபெற்றது.
எஸ்.ராமகிருஷ்ணன், சா.கந்தசாமி, கே.சுப்ரமணியன், நான் அதில் பங்கெடுத்தேன். என் கட்டுரையில், ஜெய ஜெய சங்கராவிலிருந்துதான் ஜெயகாந்தனின் வீழ்ச்சி ஆரம்பிக்கிறது. அதன்பிறகு அவர் விழுந்த பள்ளம் மிக ஆழமானது. கடைசிவரை அதிலிருந்து அவர் எழுந்து வரவே முடியவில்லை என பேசிவிட்டு அவரைப் பார்த்தேன்.
தன் கண்ணாடி மூலம் ஊடுருவி என்னைப் பார்த்தார். அப்பார்வையை எதிர்கொள்ள எனக்கும் திராணியிருந்தது. அன்று மதிய உணவிற்காக இருவரும் இரு சாப்பாட்டு தட்டுகளோடு வரிசையில் நின்றபோது, தன் பின்னால் நின்ற சா.கந்தசாமியிடம் வழக்கமான உரத்தக் குரலில் சொன்னார்,
‘‘எழுதி முடித்த படைப்புகள் மீது என்ன விமர்சனம் வந்தாலும் ஏற்றுக் கொள்ளலாம். ஏன் எழுதலை என்ற அபத்தத்தைதான் தாங்க முடியலை’’ என்று பெருங்குரலெடுத்து சிரித்தது இன்னும் கேட்கிறது.
அவர் எழுத்துக்களை தங்கள் தனிப்பட்ட வாழ்விற்குக் கொடுக்கப்பட்ட முன்னுரைகள் என எடுத்துக் கொண்டு வாழும் பலரைத் தனிப்பட்ட முறையில் நானறிவேன். சென்னை புத்தகக் கண்காட்சியில் நிகழ்ந்த ஒரு கேள்வி பதில் நிகழ்வில், சேலத்திலிருந்து வந்திருந்த அவர் வாசகர் ஒருவர் பேசினார்...
" ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ படித்து அந்த லாரி ஓட்டுநர் சின்னதுரை மாதிரியே லாரி ஓட்டப் போனவன் நான். இன்று அறுபது லாரிகளுக்கு ஓனர். ஒரு நன்றி சொல்லிவிட்டு போகலாமுன்னு
தான் வந்தேன் அய்யா, ‘‘நன்றி’’ "
அவ்வளவுதான். அது படைத்தவனின் ஒரு நிமிடப் பெருமிதம். அதைக் கடைசி வரை கட்டிக்காத்தவர் ஜே.கே. அதற்கு மேல் அதில் போக என்ன இருக்கிறது?
தான் நோய்வாய்ப்படுவதற்கு முந்தைய ஐந்து வருடங்கள் என்னோடு மிக நெருக்கமான தோழமையோடு இருந்தார்.
நாங்கள் அழைத்த போதெல்லாம் காரணம் கேட்காமல் வந்தார். கூட்டங்கள் இல்லாமல், பேசச் சொல்லாமல் எங்களுடனே இருப்பதற்காக மட்டும் பலமுறை திருவண்ணாமலைக்குத் தன் பெரும் நண்பர்களோடு வந்தார். கலையாத சபை இரண்டு மூன்று நாட்கள் நீடித்ததுண்டு. அப்பேச்சுகளை உடனிருந்து கவனித்திருக்கிறேன். பெரும்பாலும் அவர் பேச, மற்றவர்கள் கேட்டுக் கொள்பவர்களாக இருந்தார்கள்.
தனக்குப் பின் எழுத வந்தவர்களின் எழுத்துக்களைப் பற்றி அவர்கள் விவாதித்ததில்லை. அதில் பெரும்பாலோருக்கு அதில் பரிச்சயம் இல்லை. இருந்தவர்கள் இவர் முன் எப்படி பேசுவது என மௌனம் காத்தார்கள்.
பெரும்பாலும் பழைய நினைவுகள், கட்சி, வாழ்வு, ஜீவா, பாலதண்டாயுதம், ஆர்.கே.கண்ணன், பாவலர் வரதராசன் என புகை மாதிரி சுழன்று சுழன்று அந்த அறையை நிரப்பியது அவர்கள் சொற்கள்.
ஒரு கட்டத்தில் எழுதியதை நிறுத்தினது போலவே வாசிப்பதையும் நிறுத்திக் கொண்டார். எந்தக் காலத்திலேயும் எந்தப் படைப்பாளிகளின் எழுத்துக் குறித்தும் கருத்து சொன்னதில்லை. ஆனால் சபையில், கூட்டங்களில், தனிப் பேச்சில் தனக்கு சரியெனப் பட்டதை சொல்லத் தயங்கினதில்லை. அதன் மூலம் தான் எதிர்கொண்ட எதிர்வினைகளைப் பற்றி பெரிதாய் அலட்டிக் கொண்டதில்லை. கேட்பதை விட பேசுவதில் ஆர்வமுற்றிருந்தார்.
தன் ஜீவிதத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் ஒரு கம்யூனிஸ்டாக வாழ முயல்பவன் என்றே தன்னைப் பற்றிய அந்தரங்க மதிப்பீடாய் வைத்திருந்தார். காங்கிரஸ் கரைப்போட்டத் துண்டு அவர் உடல்மீது படியாமல் விலகியே கிடந்ததாகத்தான் அவரை மதிப்பிட முடிகிறது.
தன் புனைவிற்கும், புனைவில்லாத எழுத்திற்குமென பிரத்யேக மொழியை ஜே.கே. எப்போதும் தேர்ந்தெடுத்தது இல்லை. ஆனால் அவருடைய உரைக்கென யாராலும் நெருங்கமுடியாத, பாவனைப் போலொரு மொழி அவருக்கு வாய்த்திருந்தது. அது பாவனையல்ல. நிஜம் தன் இளமைக் காலங்களில் ஊர், ஊராய் அலைந்துத் திரிந்து மேடைகளில் மார்க்சிய உரைகேட்டு தான் ஸ்வீகரித்துக் கொண்ட கவித்துவமான உரைநடை தன் மேடை பேச்சின் போது எங்கிருந்தோ வந்து ஒரு பெரும் பறவையின் சிறகடிப்போடு அவரிடம் படிந்து கொள்ளும்.
“ஜாதி, மத இனக் கலவரங்களில் மாறி மாறி மக்கள் கொல்லப்படுவதை விட பூகம்பம், நிலநடுக்கம், கடல் சீற்றத்தால் கூட்டம் கூட்டமாக எம்மக்கள் செத்தொழிவதில் எனக்குச் சம்மதமே” என்ற ஒரு பிரகடனத்தில் ஒரு படைப்பாளிக்குரிய ஆதங்கத்தையும், அவன் இச்சமூகத்தின் மீது வைத்திருந்த பேரன்பும் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
தமிழ்ச் சமூகத்தின் மேன்மைக் குறித்து ஒரு பெருங்கனவு அவருக்கிருந்தது. குறிப்பாக தனி மனித சுதந்திரம், அவர் படைத்த பெண்களின் வெளி அதை நமக்கு உணர்த்தியது. ‘‘அந்தரங்கம் புனிதமானது’’ கதையில் அந்த போராசிரியருக்கான வெளி நம் எல்லோருக்கும் தேவைப்பட்டது. குடும்பம் என்ற மூடலில் நாம் எல்லாவற்றையும் பறிகொடுத்துவிடத் தேவையில்லை என்பதை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே நமக்குத் தன் படைப்பால் எச்சரித்துள்ளார்.
ஜே.கே. மறைந்தார் என்ற செய்தி கேட்டவுடன் அதையும் ஒரு கொண்டாடத்தின் நீட்சியாகவே என்னால் உணரமுடிந்தது.
இனி நண்பர்கள் இல்லாமல், சபை இல்லாமல், தனித்திருப்பாரே அதை தாங்குவாரா என நினைத்துக் கொண்டேன்.
அன்று சுட்டெரிக்கும் வெயிலில் பெசன்ட் நகர் மயானத்தை அடைந்தோம். ஒரு மேடை மீது பச்சை மூங்கிலால் அவசரமாக செய்யப்பட்ட ஒரு பாடையில் அவரைப் படுக்க வைத்திருந்தார்கள். நெற்றியில் விபூதியும், வழிந்த வாய்க்கரிசியுமாய் அவரைப் பார்க்க முடியாமல் முகம் திரும்பிக் கொண்டேன். நாற்பதாண்டுகளுக்கு மேல் தமிழ் சமூகத்தில் எத்தனை பெரிய அசைவுகளை உருவாக்கியவர்!
இப்படி கிடத்தப்பட்டுள்ளாரே என மனம் விம்மியது. எல்லோருக்கும் இதுதான் என நாம் அறியாததல்ல. ஆனாலும் நாற்பதாண்டுகளுக்கு மேல் தன் எழுத்தாலும், பேச்சாலும சுழன்ற ஒரு சூறாவளியை மரணம் இப்படி வீழ்த்திப்படுக்கவைத்துவிட்டதே என பெரும் ஆதங்கம் எழுந்தது.
நெற்றி நிறைய விபூதி பூசி, வழியும் வாய்க்கரிசியோடு, சகல சடங்குகளையும் அவர்மீது திணித்ததை ஏனோ ஏற்கமுடியவில்லை.
இன்னும் நிதானமாக, கௌரவமாக, தமிழ்நாடெங்கும் பரவிக்கிடந்த அவர் வாசகர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் வந்து அவர் உடலைத் தொட்டு அஞ்சலிசெலுத்த நாம் இடம் தந்திருக்க வேண்டும். ஜே.கே. எப்போது தன் குடும்பத்து மனுஷனாய் இருந்திருக்கிறார்? அவர் எப்போதும் நண்பர்களுக்கானவர், எதிர்பார்த்தபடியே அரசு அவர் மரணத்தையும் புறக்கணித்து, தன் அநாகரிகத்தை சுடுகாட்டிலும் நிலை நாட்டியது.
“செத்தவருக்கு சொந்தக்காரங்களைத் தவிர மத்தவங்க கீழ எறங்கிடுங்க” என இறுதிச் சடங்கை நடத்தினவர் சொன்னபோது, துக்கம் மேலிட நான் முணுமுணுத்தேன்...
“செத்தவனுக்கு நாங்கதாண்டா சொந்தக்காரங்க”
எங்களை இடித்துத் தள்ளிக் கொண்டு ஒரு நடுத்தரவயதுப் பெண் மேடையை நோக்கி ஓடினார். அவள் புரண்டு அழ, அந்தச் சூழல் முற்றிலும் அனுமதி மறுத்தது. ஆனாலும் அப்பெண் எல்லாவற்றையும் மீறினாள், ஜே.கே.வின் எழுத்துக்களைப் போல.
(ஏப்ரல் 8 ,2016 அன்று ஜெயகாந்தன் பற்றி பவா.செல்லதுரை எழுதியது)

கருத்துகள் இல்லை: