திங்கள், 13 ஏப்ரல், 2020

உச்ச அநீதி மன்றம் : அரசு அளிக்கும் விவரங்களை மட்டுமே மீடியாக்கள் வெளியிட வேண்டும்

thamizhidhayam.com : அரசு அளிக்கும் விவரங்களை மட்டுமே மீடியாக்கள் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதன்மூலம், பொதுமக்களின் கருத்துகள் மீது ஏகபோக கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக பல்வேறு மாநிலங்களில் இருந்து நடைபயணமாகவே கோடிக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல நேர்ந்தது. அப்போது அவர்கள் அனுபவித்த கொடுமைகளைக் கண்டு சகிக்காமல், தொழிலாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக உச்சநீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது,
குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தங்குமிடம் மற்றும் அடிப்படை வசதிகளை வழங்குமாறு அரசாங்க அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை அளிக்கும்படி அந்த மனுவில் கோரப்பட்டது.
ஆனால், மார்ச் 31, 2020 அன்று, மனுவுக்கு தொடர்பே இல்லாமல், அச்சு, மின்னணு மற்றும் சமூக ஊடகங்கள் தொற்று நோய் தொடர்பாக அரசு அளிக்கும் தகவல்களை மட்டுமே வெளியிட வேண்டும் என்று ஒரு தெளிவற்ற உத்தரவை பிறப்பித்தது.

தன்னிச்சையான மற்றும் கடுமையான பாய்ச்சலை மீடியாக்கள் மீது உச்சநீதிமன்றம் மேற்கொண்டது. இதன்மூலம் பத்திரிகை சுதந்திரம் குறித்து உச்சநீதிமன்றம் சிறிதும் அக்கறை காட்டவில்லை என்பது மட்டுமல்லாமல், அரசு நடவடிக்கைகள் மீதான விமர்சனங்களைத் தடுத்து நிறுத்துவதற்கும், பொதுமக்களின் கருத்துகளை கட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு அனுமதி அளித்துள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் கஷ்டங்களை தீர்க்கக் கோரும் பொதுநல மனுவுக்கு பதிலளித்த மத்திய அரசின் அறிக்கை 39 பக்கங்கள் கொண்டதாக இருந்தது. அந்த அறிக்கையில் மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவால் தொழிலாளர்கள் புலம்பெயர வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றும், மூன்று மாதங்கள் இந்த ஊரடங்கு தொடரும் என்ற பீதிதரும் செய்திகளால்தான் தொழிலாளர்கள் வெளியேறினார்கள் என்றும் அந்த அறிக்கையில் அரசு கூறியது.
மக்களின் சந்தேகங்களை தீர்க்க வசதியாக தினமும் அரசு அறிக்கை வெளியிட வேண்டும் என்றும், அரசு அளிக்கும் தகவல்களை மட்டுமே ஊடகங்கள் வெளியிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி, தொற்றுநோய் குறித்த விவாதத்தில் தலையிட விரும்பவில்லை என்றும் கூறிவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தெளிவற்றது. அதுமட்டுமின்றி, இந்த உத்தரவுக்கு சட்டத்தில் எந்த அடிப்படையும் இல்லை. பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தின் அடிப்படை உரிமையை நீதித்துறை தீர்ப்பால் கட்டுப்படுத்த முடியாது என்று சட்டவல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: