சனி, 18 ஏப்ரல், 2020

ஊரடங்கு சென்னையில் 79 சதவிகிதம் குறைந்த குற்றங்கள்!

 மின்னம்பலம் :  கொரோனாவின் முதல் ஊரடங்கு காலத்தில் சென்னை
நகரத்தில் கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் பெரிய அளவில் குறைந்துள்ளதாக சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 25-மார்ச் 25ஆம் தேதி வரையிலான காலகட்டத்தை ஒப்பிடும்போது, முதல் ஊரடங்கு காலகட்டமான மார்ச் 25-ஏப்ரல் 15 வரை 79 சதவிகிதம் குற்றங்கள் குறைந்துள்ளன.
முதல் ஊரடங்கு காலத்தில் ஐந்து கொலைகள், ஒரு வழிப்பறி, 4 கொள்ளை சம்பவம், 12 வீட்டை உடைத்து திருடியது, பிக்பாக்கெட் உள்ளிட்ட 49 சாதாரண திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதே சமயம் பிப்ரவரி-மார்ச் காலகட்டத்தில் 9 கொலைகள், 1 வழிப்பறி, 16 கொள்ளை சம்பவம், 29 வீட்டை உடைத்து திருடுதல், 263 சாதாரண திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அதேபோல போக்குவரத்து தொடர்பான வழக்குகளும் குறைந்தே காணப்படுகின்றன. மார்ச் 25-ஏப்ரல் 15 காலகட்டத்தில் 13 பேர் விபத்தில் மரணமடைந்தனர், 17 பேர் படுகாயமடைந்தனர். 53 பேர் சாதாரண காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதே சமயம் பிப்ரவரி 25-மார்ச் 25 காலகட்டத்தில் 54 பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். 93 பேர் படுகாயமடைந்தனர், 297 பேருக்கு சாதாரண காயங்கள் ஏற்பட்டது.
இரு காலகட்டத்தையும் ஆராயும்போது ஊரடங்கு காலத்தில் கொலை சம்பவம் 44 சதவிகிதம் குறைந்துள்ளது. அதேபோல கொள்ளை சம்பவம் 75 சதவிகிதம், வீடு உடைத்து திருடும் சம்பவம் 59 சதவிகிதமும், திருட்டு சம்பவம் 81 சதவிகிதம் குறைந்திருக்கிறது.அதேபோல விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை 75 சதவிகிதமும், படுகாயமடைவோர் எண்ணிக்கை 82 சதவிகிதமும் குறைந்துள்ளது.
ஊரடங்கால் கடுமையான குற்றவாளிகளும், திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவோர் வீட்டிலேயே இருப்பதால் குற்ற சம்பவங்கள் பெருமளவில் குறைந்துள்ளன. அதேபோல சாலைகளில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை பெரும்பாலும் குறைந்துவிட்டதால் விபத்தும் குறைந்துள்ளது.
எழில்

கருத்துகள் இல்லை: