மின்னம்பலம் : கொரோனா வைரஸ் மருத்துவர்களையும் விட்டுவைக்காத நிலையில், தற்போது டெங்கு காய்ச்சலுக்கு மருத்துவர் ஒருவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், சிறுமுகை அருகிலுள்ள ரேயன் நகரை சேர்ந்தவர் வாசுதேவன். எல்.ஐ.சி முகவராக இருக்கிறார். இவருடைய மகன் ஜெயமோகன். வயது 30. 2007 ஆம் ஆண்டு +2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்தவர். பின்னர் மருத்துவம் படிக்க விரும்பிய இவர் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் படிப்பை முடித்தார்
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவராக தேர்வு பெற்றார். நீலகிரி மாவட்டத்தில் இவருக்கு பணி ஒதுக்கப்பட்டது. முதலில் நீலகிரியில் பணியாற்றிய இவர் தற்போது, சத்திய மங்கலம் அருகில் உள்ள தெங்கு மறாட்டா என்ற மலைக் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
மற்ற மருத்துவர்கள் போல பகுதி நேரம் அரசு வேலையும், மீதி நேரம் சொந்த வேலையும் பார்க்க விரும்பாத ஜெயமோகன் முழு நேரமும் தெங்குமறாட்டாவிலேயே தங்கி அங்குள்ள பழங்குடி மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தின் வருவாய் எல்லையில் தான் தெங்குமறாட்டா கிராமம் உள்ளது. நான்கு பக்கமும் காடுகளால் சூழப்பட்ட இந்த ஊருக்கு செல்ல ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்துதான் சாலை வசதி உள்ளது
நாள் ஒன்றுக்கு இரண்டு பேருந்துகள் இரண்டு நடை மட்டுமே இந்த ஊருக்குச் செல்கின்றன. பேருந்து நிற்கும் இடத்திலிருந்து மாயாறு ஆற்றைக் கடந்து தான் ஊருக்குச் செல்லமுடியும். பாலம் இல்லாத இந்த ஆற்றை மழைக் காலங்களில் கடந்து போக முடியாது
கடந்த 10, ஆம் தேதி மாலை வீட்டுக்குத் திரும்பிய மருத்துவர் ஜெயமோகனுக்கு லேசான காய்ச்சல் இருந்துள்ளது. இதையடுத்து, ஏப்ரல் 11ஆம் தேதி கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கொரோனா காய்ச்சல் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ரத்த மாதிரிகளை மருத்துவர்கள் ஆய்வு செய்தனர். சோதனையில், டெங்கு காய்ச்சல் என்று தெரியவந்தது. அதற்கான மருத்துவச் சிகிச்சைகளை அளித்து வந்த நிலையில், இன்று (ஏப்ரல் 15) அதிகாலை இரண்டு மணிக்கு மருத்துவர் ஜெயமோகன் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்அவருடைய உடல் சிறுமுகை கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. மகன் இறந்த செய்தி அறிந்த அவருடைய அம்மாவும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உறவினர்களால் காப்பாற்றப்பட்ட அவர் தற்போது காரமடை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அரசு கல்லூரியில் படித்து, அரசு மருத்துவராக பணியில் சேர்ந்த ஜெயமோகன் எளிய நிலையில் உள்ள மக்களுக்குத் தான் மருத்துவம் பார்ப்பேன் என்ற கொள்கையோடு இருந்துள்ளார்.
எந்த அடிப்படை வசதியும் இல்லாத மலைக்கிராமமான தெங்குமறாட்டாவில் பணியாற்றி வந்துள்ளார். மக்களுக்காக மருத்துவம் பார்த்த ஜெயமோகனின் மரணம் அக்கிராம மக்கள் உட்படப் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
-சிவசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக