வெள்ளி, 17 ஏப்ரல், 2020

5 லட்சம் சீன பரிசோதனை கருவிகள் இந்தியா வந்தன: 2 நாளில் தமிழகத்துக்கு வர வாய்ப்பு

தினகரன் : புதுடெல்லி: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. தற்போது வைரஸ் பரவலில் அமெரிக்கா முதலிடத்திலும், இத்தாலி இரண்டாவது இடத்திலும் உள்ளன. முதன் முதலில் வைரஸ் பரவிய சீனாவின் வுகான் நகரில், இரண்டு மாத ஊரடங்கு உத்தரவுக்கு பின்னர் இயல்புநிலை திரும்பி, அங்கு மீண்டும் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடங்கி உள்ளது
ஆனால், இன்னமும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களால், அங்கு வைரஸ் பரவல் இருந்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால், பெரிய அளவில் இல்லை. சீனாவில் வைரஸ் வேகமாக பரவியபோது, அங்கு மருந்து, கையுறை, முகக்கவசம், முழு உடல் பாதுகாப்பு உடைகள் போன்றவற்றுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது.


இதையடுத்து, இந்தியாவின் சார்பில் உடனடியாக ஏற்றுமதி தடை நீக்கப்பட்டு அந்நாட்டுக்கு இவை சரக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு நன்றிக்கடனாக சமீபத்தில் சீனா, ஒரு லட்சம் முழு உடல் பாதுகாப்பு உடைகளை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது இந்நிலையில், தற்போது இந்தியாவில் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க அதிவிரைவு பரிசோதனை கருவிகள் (ரேபிட் டெஸ்ட் கிட்) சீனாவிடம் ஆர்டர் கொடுக்கப்பட்டன. இதன்படி சீனாவின்  காங்க்சோ நகரில் இருந்து5 லட்சம் டெஸ்ட் கிட்டுகளை சரக்கு விமானம் மூலம் சீனா நேற்று காலை அனுப்பியது. இந்த சரக்கு விமானம் நேற்று மாலை டெல்லி வந்து சேர்ந்தது.  இந்த ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை தமிழகம் அதிகளவில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இதனால், இவை 2 நாளில் தமிழகத்துக்கு வந்து சேர வாய்ப்பு உள்ளது.

எப்படி அனுப்பப்படும்?
சீனாவின் ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் முதலில் பரிசோதனை செய்வார்கள். அது உரிய தரத்துடன் இருந்தால், அதை நாட்டில் பயன்படுத்த அனுமதி அளிப்பார்கள். அதைத் தொடர்ந்து, அவை டெல்லியில் உள்ள தேசிய மலேரியா ஆய்வு நிறுவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும். அங்கிருந்து தேவைப்படும் மாநிலங்களுக்கு பிரித்து, சரக்கு விமானம் மூலம் அனுப்பப்படும்.

கருத்துகள் இல்லை: