வெள்ளி, 11 அக்டோபர், 2019

மலேசியா 2 எம்பிக்கள் கைது ...இலங்கை தூதரகத்தை தாக்க திட்டம்? – புலிகளுடன் தொடர்பா?

வீரகேசரி : விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் பேரில் மலேசியாவில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏழு பேரை அந்நாட்டுக் காவல்துறை கைது செய்துள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்புக்கு மலேசியாவில் தடை நீடித்து வருவதாகவும் மலேசிய காவல்துறை சுட்டிக்காட்டி உள்ளது.
இந்தக் கைது நடவடிக்கை தொடர்பாக வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய மலேசிய காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் தலைமை துணை ஆணையர் டத்தோ அயோப் கான், கைதான ஏழு பேரும் பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டதாக, நிதி திரட்டியதாக காவல்துறை நம்புவதாகத் தெரிவித்தார். மேலும், கைதானவர்களில் ஒருவர் கோலாலம்பூரில் உள்ள இலங்கை தூதரகத்தை தாக்க திட்டமிட்டிருந்ததாகவும் அவர் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டார். கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இலங்கை துணைத்தூதர் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களும் தற்போது கைதாகி இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.> “கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் சந்தேக நபர்களைக் கண்காணித்து வந்தோம். அதன் தொடர்ச்சியாகவே சம்பந்தப்பட்டவர்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
“நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் தான் முதலில் கைது செய்யப்பட்டார். விடுதலைப் புலிகள் சிலரை கவுரவிக்கும் விதமாக மலாக்கா மாநிலத்தில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் குணசேகரன் கலந்து கொண்டுள்ளார். அந்நிகழ்வில் உரையாற்றியதுடன், அந்த அமைப்புடன் தொடர்புள்ள துண்டுப் பிரசுரங்களையும் அவர் விநியோகித்ததாக நம்புகிறோம்,” என்றார் அயோப் கான்.
கைதான மற்றொரு சட்டமன்ற உறுப்பினரான சாமிநாதன் மலாக்காவைச் சேர்ந்தவர். குணசேகரன் மீது சுமத்தப்பட்டுள்ள அதே குற்றச்சாட்டுகளை தான் இவரும் எதிர்கொண்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் துணைத் தூதர் தாக்கப்பட்டதில் தொடர்புடைய 28 வயதான ஆடவர் ஓருவரும் தற்போது போலீசில் சிக்கியுள்ளார்.
காப்பீட்டு முகவர், வாடகைக் கார் ஓட்டுநர் கைது
கோலாலம்பூரைச் சேர்ந்த 28 வயதான காப்பீட்டு முகவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர் கோலாலம்பூரில் இயங்கி வரும் இலங்கை தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாக டத்தோ அயோப் கான் தெரிவித்தார்.
“விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவாக ரகசியக் கூட்டங்களை நடத்தி அந்த அமைப்புக்காக பிரசாரம் செய்த டாக்சி ஒட்டுநரையும் தடுத்து வைத்துள்ளோம். 37 வயதான அந்த ஆடவருக்கும் இலங்கை துணைத் தூதர் கோலாலம்பூரில் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புள்ளது.
“கைது நடவடிக்கையின் போது நடத்தப்பட்ட சோதனையில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவான பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள், அமைப்பின் கொடி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
“கைதானவர்களுடன் இணைந்து செயல்பட்டவர்கள் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. எனவே மேலும் சிலர் கைதாக வாய்ப்புள்ளது. பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்கும் யாரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது,” என டத்தோ அயோப் கான் எச்சரிக்கை விடுத்தார்.
கைது நடவடிக்கையை இனப் பிரச்சினையாக மாற்ற வேண்டாம்: போலீஸ் எச்சரிக்கை
இனம் சார்ந்து இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக எழுந்துள்ள புகாரை அவர் திட்டவட்டமாக மறுத்தார். பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் உண்மையாகவே பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களை மட்டுமே கைது செய்வதாக அவர் தெளிவுபடுத்தினார்.
“கடந்த சில ஆண்டுகளில் 284 ஜெமா இஸ்லாமியா அமைப்பினரும், ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தைச் சேர்ந்த 512 பேரும், விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் 25 பேரும் கைதாகி உள்ளனர்.
“சட்டத்தை மீறும் எவர் மீதும் காவல்துறை கடும் நடவடிக்கைகள் எடுக்கும். குறிப்பாக பயங்கரவாத தொடர்பு இருப்பவர்கள் நிச்சயம் கைது செய்யப்படுவார்கள்,” என்று அயோப் கான் குறிப்பிட்டார்.
விடுதலைப்புலிகள் அமைப்பு மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு என்று குறிப்பிட்ட அவர், இத்தகைய இயக்கங்கள் நன்கு வளர்ச்சி காண்பதற்குள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றார்.
புலிகள் அமைப்புக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க முயன்ற நான்கு பேர் அண்மையில் ஐரோப்பாவில் கைது செய்யப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
மலேசிய காவல்துறையினர் கைது நடவடிக்கையை இனப் பிரச்சினையாக மாற்ற நினைப்பது தவறு என்று குறிப்பிட்ட அவர், கடந்த காலங்களில் இதர பயங்கரவாத அமைப்பினர் கைது செய்யப்பட்டபோது ஏன் எந்தவொரு அரசியல் பிரமுகரும் குரல் எழுப்பவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
விடுதலைப்புலிகளை கௌரவிக்கும் விதமாக நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதை காவல்துறை கண்காணிக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இனிமேல் எத்தகைய எச்சரிக்கையும் விடுக்கப்படாது என்றார்.
“பயங்கரவாத அமைப்பு என்று தெளிவாக வரையறுக்கப்பட்ட ஒரு குழுவை ஆதரிப்பதில் அப்படியென்ன நன்மை இருக்க முடியும்?,” என்றும் டத்தோ அயோப் கான் கேள்வி எழுப்பினார்.
என்னைக் கைது செய்யட்டும் – பினாங்கு ராமசாமி சவால்!
இதற்கிடையே விடுதைலப்புலிகள் அமைப்புடன் தமக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி காவல்துறை கைது நடவடிக்கையில் ஈடுபட்டால், அதை எதிர்கொள்ள தாம் தயாராக இருப்பதாக பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி தெரிவித்துள்ளார்.
_109186301_fbe40e39-7f24-4c3a-9295-1ec1974257c8 மலேசியாவில் இலங்கை தூதரகத்தை தாக்க திட்டம்: 2 சட்டமன்ற உறுப்பினர்கள் கைது - புலிகளுடன் தொடர்பா? மலேசியாவில் இலங்கை தூதரகத்தை தாக்க திட்டம்: 2 சட்டமன்ற உறுப்பினர்கள் கைது - புலிகளுடன் தொடர்பா? 109186301 fbe40e39 7f24 4c3a 9295 1ec1974257c8மத போதகர் ஜாகிர் நாயக்கின் ஆதரவாளர்கள் தம்மை தீவிரவாதி என முத்திரை குத்த முயற்சிப்பதாக பிபிசி தமிழிடம் அவர் குறிப்பிட்டார்.
“என்னைக் கைது செய்யப் போவதாக கேள்விப்படுகிறேன். அது தான் முடிவு என்றால் அவர்கள் அதைச் செய்யட்டும். நான் ஒன்றும் தேடப்படும் குற்றவாளியாக அடைக்கலம் தேடி இந்நாட்டிற்கு வரவில்லை,” என்று ராமசாமி தெரிவித்தார்.
மத போதகர் ஜாகிர் நாயக் ஆதரவாளர்களின் அழுத்தம் காரணமாகவே இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டிய அவர், தமது பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் ஜாகிர் நாயக்கும், அவரது சிஷ்யர்களும் செயல்படுவதாகக் கூறினார்.
“இந்த நோக்கத்துடன் தான் பத்தாண்டுகளுக்கு முன்பு அமைதியை நிலைநிறுத்துவதற்காக இலங்கைக்குச் சென்று வந்தது தொடர்பான பழைய புகைப்படங்களை அவர்கள் மீண்டும் பயன்படுத்துகிறார்கள். ஜாகிர் நாயக்கை நாடு கடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருக்கிறேன். அதனால் எனக்கு தீவிரவாத முத்திரை குத்த விரும்புகிறார்கள்,” என்றார் பேராசிரியர் ராமசாமி.

கருத்துகள் இல்லை: