செவ்வாய், 8 அக்டோபர், 2019

மும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்ட தடை


தினமலர் :  புதுடில்லி : 'மும்பை, ஆரே காலனி பகுதியில், மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனுக்கான வாகன நிறுத்துமிடம் அமைக்க, மரங்களை வெட்டக் கூடாது' என, உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
போராட்டம்மஹாராஷ்டிர மாநிலத்தில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. தலைநகர் மும்பையில், ஆரே காலனி என்ற பகுதி உள்ளது. இங்கு, 3,000க்கும் அதிகமான மரங்கள் உள்ளன. இந்த மரங்களை வெட்டி விட்டு, மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனுக்கான, வாகன நிறுத்துமிடம் அமைக்க, மஹாராஷ்டி அரசு முடிவு செய்தது. இதையடுத்து, மரங்களை வெட்டும் பணியில், மும்பை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இதை எதிர்த்து, ஏராளமான மக்கள், தன்னார்வ அமைப்பினர், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


'ஆரே காலனி, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட வனப் பகுதி இல்லை என்றாலும், மரங்கள் அதிகம் இருப்பதால், அது, வனப் பகுதி தான். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய அரசு, மரங்களை வெட்டுவதை ஏற்க முடியாது' என கூறி, போராட்டம் நடத்தினர். உத்தரவுஇது தொடர்பான வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், மரங்களை வெட்ட தடை விதிக்க மறுத்து, 4ம் தேதி உத்தரவிட்டது.

இதையடுத்து, மரங்களை வெட்டும் பணி, முழு வீச்சில் துவங்கியது. ரிஷவ் ரஞ்சன் என்ற சட்டக்கல்லுாரி மாணவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயிடம், பொதுநல மனு தாக்கல் செய்தார். தற்போது, தசரா பண்டிக்காக உச்ச நீதிமன்றத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்காக சிறப்பு அமர்வை, தலைமை நீதிபதி அமைத்தார். நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு, இந்த வழக்கை விசாரித்தது.

இரு தரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:மும்பை ஆரே காலனி யில் மரங்களை வெட்டுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. இதற்காக போராட்டம் நடத்தியவர்களை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, போராட்டம் நடத்திய அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். சுற்றுச் சூழல் மீது, நீதிமன்றத்துக்கும் அக்கறை உள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை, வரும், 21க்கு ஒத்தி வைக்கப்படுகிறது. அதுவரை, மரங்களை வெட்டக் கூடாது.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

24 பேர் விடுதலைஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, மும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி, கைதான, 24 பேர், நேற்று விடுவிக்கப்பட்டனர். மேலும், ஆரே காலனியில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவும் தளர்த்தப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: