வெள்ளி, 11 அக்டோபர், 2019

சகோதரிகள் நகரம்: மோடி - ஜி ஜின்பிங்குக்கு சென்னையின் நினைவூட்டல்!

சகோதரிகள் நகரம்: மோடி - ஜி ஜின்பிங்குக்கு சென்னையின் நினைவூட்டல்!பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகிய இரு தலைவர்களையும் வரவேற்க அவசர அவசரமாக இந்தச் சென்னையான என்னை தடபுடலாகத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன். எங்கெங்கு காணினும் ஓவியங்கள், நீதிபதிகள் சொன்ன மாதிரி சுத்தமான சென்னை, நீதிமன்ற ஆணைக்கேற்ப பேனர்கள், போக்குவரத்து மாற்றம் என்ற பெயரில் கொஞ்சம் புழுக்கத்தைச் சூடிக்கொண்டாலும் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் இரு முக்கியமான நாட்கள் என்னை நோக்கி குவிக்கப்படுகின்றன என்ற திருப்தியோடும் சின்ன கர்வத்தோடும் இரு பெரும் தலைவர்களையும் வரவேற்கிறேன்.
நீங்கள் இந்தச் சென்னையில் தங்கிப்பேசுவதற்கு ஆயிரம் விஷயங்கள் உள்ளன. ஆயிரமாயிரம் விவகாரங்கள் உள்ளன. அதேநேரம் இந்தச் சென்னை உங்களிடம் பேசுவதற்கு ஒரே ஒரு முக்கியமான விவகாரத்தை ஞாபகம் வைத்திருக்கிறேன்.< 2015ஆம் ஆண்டு மோடி அவர்கள் பிரதமரான ஓராண்டுக்குள் தனது முதல் சீனப் பயணத்தை நிகழ்த்தினார். அவரது சீனப் பயணத்துக்கு முன்பே மத்திய அரசின் சார்பில் ஒரு குழு, பாஜக சார்பில் ஒரு குழு என இரு குழுக்கள் சீனாவுக்குச் சென்று இந்தச் சந்திப்பின் முக்கியத்துவம் என்ன என்பது குறித்த ஆலோசனைகளிலும் ஆயத்தங்களிலும் ஈடுபட்டன.

இந்த முக்கியமான குழுவில் பாஜகவின் தேசிய இளைஞரணி துணைத் தலைவரான தமிழகத்தைச் சேர்ந்த ஏ.பி.முருகானந்தம் இடம்பெற்றார்.
சீனாவின் பொருளாதாரப் பலத்தைத் தென்னிந்தியாவில் எப்படி ஆக்கபூர்வமாக எதிரொலிப்பது என்பது குறித்த ஆலோசனைகளையும், பிரதமர் மோடியின் சீன பயணத்தின்போது முன்னெடுக்க வேண்டிய செயல் திட்டங்களையும் இந்த ஆயத்த பயணத்தின்போது நிகழ்த்தியதாக அவர் தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் பயணத்துக்கு முன்னதாக நடத்தப்பட்ட இந்த ஆயத்த பயணத்தின் விளைவாக நானும் அதாவது, இப்போது உங்களை வரவேற்கும் இந்தச் சென்னையும் மக்கள் சீனக் குடியரசின் மத்திய அரசால் நேரடியாக நிர்வகிக்கப்படும் சாங் குயிங் மாநகரமும் சகோதரிகள் நகரங்களாக ஒப்பந்தம் செய்துகொள்ள முடிவெடுக்கப்பட்டது.
இந்த நிலையில் பிரதமர் மோடி 2015 மே மாதம் சீனா புறப்பட்டுச் சென்றார். அந்தப் பயணத்தின் இன்ப இணைப்பாக அப்போதைய நமது சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமியும் சீனாவுக்குச் சென்றார். அங்கே என்னையும் அதாவது இந்தச் சென்னையையும் சாங் குயிங் நகரையும் சகோதரி நகரங்களாக அறிவிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் சென்னை - சாங் குயிங் நகரங்களுக்கு இடையே சுற்றுலா, உட்கட்டமைப்பு, தொழில்நுட்ப ரீதியான பரஸ்பர ஒத்துழைப்புகளும், பரிமாற்றங்களும், பொருளாதார முன்னேற்றங்களும் எட்டப்படும் என்பதுதான் இந்த சகோதரி நகரங்கள் என்ற ஒப்பந்தத்தின் உள்ளார்ந்த நோக்கம்.
இந்த ஒப்பந்தத்தை அடுத்து சென்னையில் லேப்டாப் தொழிற்சாலை வரப்போகிறது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கப் போகிறது, இரு நகரங்களின் சார்பிலும் பரஸ்பரம் பொருளாதார ஒப்பந்தங்கள் தொடர்ந்து கையெழுத்தாக உள்ளன என்றெல்லாம் என் இளைஞர்கள் ஏங்கி கிடந்தார்கள்.

நான்கு ஆண்டுகளாக இந்தக் கனவு கனவாகவே இருக்கிறது. இப்போது பிரதமர் மோடியும் சீன அதிபரும் இன்று சென்னைக்கு வருகிறீர்கள். இந்தச் சகோதரிகள் நகரம் ஒப்பந்தம் என்னவானது? அது எப்போது நடைமுறைப்படுத்தப்படும்? அதன்மூலம் சென்னையின் பொருளாதார தாகம் எப்போது தணிக்கப்படும்? இது குறித்தெல்லாம் உங்கள் இருவரின் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டியது அன்னையாகிய இந்தச் சென்னையின் கடமை.
தலைவர்களே இந்தச் சென்னையின் சகோதர சகோதரிகள் உங்களை அன்போடு வரவேற்கிறார்கள். அதேநேரம் சென்னையும் சாங் குயிங் நகரமும் சகோதரிகள் நகரங்களாக அறிவிக்கப்பட்ட ஒப்பந்தம் மீண்டும் உயிர்பெற வேண்டும், செயல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் உங்களுக்கு நினைவுபடுத்த வேண்டியது இந்தச் சென்னை மாநகரத்தின் கடமை அல்லவா?
- சென்னையின் சார்பில் ஆரா

கருத்துகள் இல்லை: