ஞாயிறு, 6 அக்டோபர், 2019

ஸ்டாலினுக்கு எதிராக அமித் ஷாவின் அடுத்த சதி!

மின்னம்பலம் : ஸ்டாலினுக்கு எதிராக அமித் ஷாவின் அடுத்த சதி!ராதாபுரம் சட்டமன்றத் தேர்தலின் மறுவாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் முடிந்துவிட்டாலும், உச்ச நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடையால் அதன் முடிவுகள் மட்டும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், திமுக தலைவர் ஸ்டாலின், ‘இன்பதுரை துன்பதுரையாக மாறிவிட்டார்’ என்றதுடன், மறுவாக்கு எண்ணிக்கையில் திமுகதான் வெற்றிபெற்றதாக மறைமுகமாக தெரிவித்துவிட்டார்.
இந்த நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 6) செய்தியாளர்களை சந்தித்த இன்பதுரை, மறுவாக்கு எண்ணிக்கை விவகாரம் தொடர்பாக விரிவாகப் பேட்டியளித்தார்.
 “கடந்த சில நாட்களாக ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை குறித்து பல்வேறு யூகங்கள் வெளியாகி வருகின்றன. நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், அதுபற்றி ஊடகங்களிடம் பேசவில்லை. தற்போது, பேச வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகியுள்ளேன். 2016 சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் என்னை எதிர்த்துப் போட்டியிட்ட அப்பாவுவிற்கு விழுந்த 203 தபால் வாக்குகள் செல்லாது என அறிவிக்கக் கோரினேன். ஏனெனில், நடுநிலைப் பள்ளி ஆசிரியர் கெஜட் பதிவு பெற்ற அதிகாரி அல்ல. ஆனால், 203 தபால் வாக்குகளில் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் சான்றொப்பம் இடப்பட்டிருந்தது. அதில் பெருவாரியான வாக்குகளில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியரான ஒருவரே சான்றொப்பம் இட்டிருந்தார்.


சென்னை, கோவையில் வேலை பார்ப்பவர்களும், தேர்தல் பணிகளுக்காக வெளியூர்களுக்கு சென்றிருப்பவர்களும் எப்படி ஒரே ஆசிரியரிடம் சான்றொப்பம் பெற்றிருக்க முடியும். அதனால் என்னுடைய கோரிக்கையை ஏற்று சட்ட விதிகளுக்கு உட்பட்டு அதனை தேர்தல் அதிகாரி நிராகரித்தார். நான் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது” என்று தெரிவித்த இன்பதுரை
“இதனை எதிர்த்து அப்பாவு வழக்கு தொடர்ந்தார். உயர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, என்னுடைய தரப்பு வாதத்தை முன்வைத்தேன். இந்தியாவில் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் சான்றொப்பம் இடமுடியுமா என்பதற்கு எந்த வழக்குகளும் முன்னுதாரணம் காட்டுவதற்கு இல்லை. ஆனால், உயர் நீதிமன்றம் எனது வாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதில் தவறும் இல்லை. நான் மறுவாக்கு எண்ணிக்கை கூடாது என்று சொல்லவில்லை.

நடுநிலைப் பள்ளி ஆசிரியர் சான்றொப்பம் இட முடியும் என உயர் நீதிமன்றம் சொல்லியுள்ளது. இருப்பினும் உச்ச நீதிமன்றம் செல்ல எனக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. உச்ச நீதிமன்றம் சொன்ன பிறகுதான் அதனை இறுதி செய்ய முடியும். எனக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தால் மறுவாக்கு எண்ணிக்கை கேலிக்கூத்தாகி விடுமல்லவா. எங்கள் வழக்கில் முகாந்திரம் உள்ளதாக விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிடத் தடை விதித்துள்ளார்” என்றும் குறிப்பிட்டார்.

ஸ்டாலின் விமர்சனத்திற்கு பதில் கூறிய இன்பதுரை, “எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ராதாபுரத்தில் திமுக வெற்றிபெற்றுவிட்டதாக சுற்றிவளைத்துக் கூறியிருக்கிறார். இது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். இதனை உச்ச நீதிமன்றத்தில் தெரிவிப்பேன். சட்டம் தெரியாமல் ஸ்டாலின் பேசிக்கொண்டிருக்கிறார். மேலும், இன்பதுரை துன்பதுரை ஆகிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், இந்த வழக்கின் முடிவில் இன்பதுரை, பேரின்பதுரையாக வெளியே வருவேன்.
கொளத்தூரில் ஸ்டாலின் பெற்ற வெற்றியை எதிர்த்து சைதை துரைசாமி தொடர்ந்த வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வரவுள்ளது. அது நிரூபணமானால் ஸ்டாலின் தண்டனை பெறுவார். 6 வருடங்கள் தேர்தலில் நிற்க முடியாத நிலை ஏற்படும். ஸ்டாலினுக்கு அவரது தந்தை அய்யாதுரை என்று பெயர் வைக்க விரும்பியுள்ளார். கொளத்தூர் வழக்கின் தீர்ப்பு வரும்போது அய்யாதுரை என அழைக்கப்பட வேண்டியவர் அய்யோதுரை என்ற அழைக்கும் நிலைக்கு ஆளாவார்” என்று கடுமையாக விமர்சித்தார்.
மறுவாக்கு எண்ணிக்கை அன்று இறுக்கமான முகத்துடன் ஊடகங்களிடம் எதுவும் பேசாமல் கிளம்பிப் போன இன்பதுரை, இன்று திமுகவின் தலைவரை விமர்சித்து பேட்டியளித்திருக்கிறார். இதற்கு காரணம் உச்ச நீதிமன்றத்தில் இன்பதுரை தொடர்ந்துள்ள வழக்கு மீது அவருக்கு உள்ள நம்பிக்கைதான் என்கிறார்கள் அதிமுகவினர்.
மறுவாக்கு எண்ணிக்கை அன்றே இன்பதுரை தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில், மறுவாக்கு எண்ணிக்கை ஏன் கூடாது என்பதற்கு இரண்டு காரணங்கள் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
அதில் ஒன்று, செல்லாதவை என்று அறிவிக்கப்பட்ட 203 வாக்குகள் பற்றியது. இதுதொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்திருக்கும் வாதத்தைத்தான் இன்பதுரை தனது பேட்டியில் சொன்னார். அத்தோடு, 150 தபால் வாக்குகளில் கையொப்பமிட்ட நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், திமுக வேட்பாளர் அப்பாவுவின் உறவினர் என்ற வாதத்தினையும் கூடுதலாக முன்வைத்திருக்கிறார்கள்.
இன்பதுரை ஊடகங்களில் சொல்லாமல் விட்ட இரண்டாவது காரணம். கெஜட் அதிகாரிகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு வெளிவந்திருக்கிறதாம். அதைத்தான் இரண்டாவது காரணமாக குறிப்பிட்டு மறுவாக்கு எண்ணிக்கையை ரத்துசெய்யக் கோரியுள்ளனர். இதனையடுத்துதான், உச்ச நீதிமன்றத்தின் அருண் மிஸ்ரா, ரவீந்திரபாட் அமர்வு, மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்து வழக்கை அக்டோபர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
நாங்குநேரி, விக்கிரவாண்டி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியிடப்படுவதற்கு ஒரு நாள் முன்பு இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் மேற்குறிப்பிட்ட இரண்டு காரணங்களையும் கூர்மைப்படுத்தி வாதாடி தாங்கள்தான் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையில்தான் இவ்வாறாக பேட்டியளித்திருக்கிறார் இன்பதுரை என்கிறார்கள் அதிமுகவினர்.

ஆனால் திமுக தரப்பினரோ, ‘சான்றொப்பம் இடாமல் தபால் வாக்குகளை பதிவு செய்தால்தான் அவை செல்லாதவை. அப்பாவுவின் உறவினர் என்பதற்காக நடுநிலைப் பள்ளி ஆசிரியர் சான்றொப்பம் இடக்கூடாதா? அதில் ஒன்றும் தவறு இல்லையே. இது சரியான நடைமுறைதான். எனவே, இன்பதுரை தரப்பு உச்ச நீதிமன்றம் சென்றாலும் வழக்கின் வெற்றி என்னவோ எங்களுக்குத்தான்” என்கிறார்கள் மேலும் சட்ட பாயிண்டுகளை அடுக்கியபடி.
ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதி வெற்றியை எதிர்த்து, அவரை எதிர்த்து போட்டியிட்ட சைதை துரைசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்தார். தேர்தல் விதிமுறைகளை மீறி ஸ்டாலின் செயல்பட்டதோடு இல்லாமல், பணத்தையும் அதிகமாக செலவுசெய்தார் என்ற குற்றச்சாட்டுடன் திமுகவினர் வைத்திருந்த தேர்தல் அலுவலக செலவு, பட்டாசு வெடித்த செலவு, வரவேற்பு அளித்த செலவு, விளம்பர செலவு, ஓட்டுக்கு பணம் கொடுத்தது என பெரிய பட்டியலையே அளித்து, அவரின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரினார்.

வழக்கும் தொடர்ந்து நடந்தது. ஸ்டாலின் நேரில் ஆஜராகி வாக்குமூலமும் அளித்தார். தீர்ப்பு, ஸ்டாலினுக்கு சாதகமாக உயர் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றிருக்கிறார் சைதை துரைசாமி. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் என்ன நடந்தது, நடக்கிறது என்பதை எல்லாம் மத்திய உளவுத் துறை கடந்த நான்கு தினங்களாக தீவிரமாக விசாரித்துவந்தது. இந்த வழக்கை விரைவில் விசாரணைக்கு கொண்டுவந்து, ஸ்டாலினுக்கு எதிராக தீர்ப்பை வாங்குவதற்கு உள் துறை அமைச்சரான அமித் ஷா அளவில் ஆர்வம் காட்டப்படுகிறது. காரணம், ஸ்டாலினுக்கு எதிராக தீர்ப்பு வாங்கிவிட்டால் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அவர் போட்டியிட முடியாது என்பதுதான். ஏற்கனவே சில சதி வேலைகளை தொடங்கியிருந்த அமித் ஷாவுக்கு, இது அடுத்த வாய்ப்பாக உள்ளது. மாநில அரசின் உளவுத் துறையும் இவ்வழக்கு தொடர்பாக மேலும் பல தகவல்களை மத்திய உளவுத் துறைக்கு தந்திருக்கிறது.
இந்த வழக்கில் எந்த சிக்கலும் இல்லை. உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத்தான் உச்ச நீதிமன்றம் வழங்கும் என திமுக மூத்த வழக்கறிஞர்கள் ஏற்கனவே ஸ்டாலினிடம் தெரிவித்திருந்தனர். இருந்தபோதும், ஸ்டாலின் மகன் உதயநிதி, சைதை துரைசாமியை சந்திக்க மூன்று மாதங்களுக்கு முன்பு விருப்பம் தெரிவித்திருந்தார். உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் உறுதியாக இருக்கும் சைதை துரைசாமி, சந்திப்பை நாசூக்காக மறுத்துவிட்டாராம்.
இந்த பின்னணியில்தான் இன்று இன்பதுரை, உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கை சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

கருத்துகள் இல்லை: