ஞாயிறு, 6 அக்டோபர், 2019

இந்தியா-வங்காளதேசம் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து .. பிரதமர் மோடி-ஷேக் ஹசினா பேச்சுவார்த்தை:

பிரதமர் மோடி-ஷேக் ஹசினா பேச்சுவார்த்தை: இந்தியா-வங்காளதேசம் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து தினதந்தி : இந்தியா வந்துள்ள வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
புதுடெல்லி, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா 4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
அவர் நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் இருநாட்டு தொடர்புகளை மேம்படுத்துவது என இருதரப்பிலும் அப்போது விருப்பம் தெரிவிக்கப்பட்டது. இந்த சந்திப்புக்குப்பின் இரு நாடுகளின் சார்பில் விரிவான அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில், இந்தியாவின் முக்கியமான அண்டை நாடான வங்காளதேசத்துடனான உறவுகளுக்கு அதிக முன்னுரிமை கொடுப்பதாக கூறியிருந்த பிரதமர் மோடி, இருநாடுகளுக்கு இடையே வளர்ந்து வரும் ஒத்துழைப்பு நடவடிக்கைகள் உலகிற்கு ஒரு சரியான முன்மாதிரியாக விளங்குவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.


பிரதமர் மோடி மற்றும் ஷேக் ஹசினா இடையேயான பேச்சுவார்த்தையின் முடிவில் இரு நாடுகளுக்கும் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

குறிப்பாக வங்காளதேசத்தின் சட்டோகிராம், மோங்லா துறைமுகங்களை பயன்படுத்துவதற்கான நிலையான இயக்க முறைமை, திரிபுராவில் குடிநீர் வினியோகத்துக்கு வங்காளதேசத்தின் பெனி நதியில் இருந்து தண்ணீர் திறந்து விடுதல் போன்றவை தொடர்பாக ஒப்பந்தங்கள் போடப்பட்டன.

மேலும் ஐதராபாத் மற்றும் டாக்கா பல்கலைக்கழகங்களுக்கு இடையே ஒத்துழைப்பு, இளைஞர் நலன் ஒத்துழைப்பு, கடலோர கண்காணிப்பு போன்றவை தொடர்பான ஒப்பந்தங்களும் கையெழுத்தாயின.

இந்த நிகழ்ச்சியின்போது இரு நாட்டு பிரதமர்களும் இணைந்து 3 திட்டங்களை தொடங்கி வைத்தனர்.

அந்தவகையில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு வங்காளதேசத்தில் இருந்து கியாஸ் இறக்குமதி செய்யும் திட்டம், டாக்காவில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் வளாகத்தில் விவேகானந்த பவன் திறப்பு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் திறப்பு ஆகிய திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.

பிரதமர் மோடி மற்றும் ஷேக் ஹசினா இடையேயான சந்திப்பு தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் பாராட்டு தெரிவித்து உள்ளது. இதுகுறித்து அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் டுவிட்டரில் கூறுகையில், ‘இந்தியா-வங்காளதேசம் இடையே மேம்பட்டு வரும் உறவுகளின் அனைத்து அம்சங்கள் குறித்தும் பிரதமர் மோடியும், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவும் சிறப்பாக விவாதித்தனர். இருநாட்டு உறவில் புதிய உச்சம் தொடப்பட்டு உள்ளது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

பிரதமர் மோடியுடனான சந்திப்பை தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை ஷேக் ஹசினா சந்தித்து பேசினார்.

முன்னதாக அவர் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரையும் சந்தித்தார்

கருத்துகள் இல்லை: