ஞாயிறு, 6 அக்டோபர், 2019

தமிழகத்தில் அரசு மின்சார பேருந்துகள் தனியார்மயம் - ஊழியர்கள் அதிர்ச்சி


தி டைம்ஸ் ஆஃப் இந்தியா: தமிழகத்தில் அறிமுகமாக உள்ள 525 மின்சார பேருந்துகளை தனியார் மயமாக்க அரசு முடிவு செய்துள்ளதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
"இந்தியா முழுவதும் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதாக கூறி, அதைத்தடுக்கும் வகையில் மின்சார பேருந்துகளை இயக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி டெல்லி, அகமதாபாத், மும்பை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 64 நகரங்களில் மொத்தம் 5,595 மின்சார பேருந்துகளை இயக்க மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அனுமதியளித்தது.
இதன் முன்னோட்டமாக சென்னையில் சமீபத்தில் மின்சார பேருந்து அறிமுகம் செய்யப்பட்டு, சோதனை முறையில் தற்போது சென்னையில் இயக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் மத்திய அரசின் முதல்கட்ட ஒதுக்கீட்டில் தமிழகத்தில் 525 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதற்கான டெண்டரை தமிழக சாலை போக்குவரத்து நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில், 'பேருந்து பராமரிப்பு, மின்னேற்ற வசதி, துணை மின்னேற்ற மையங்கள் அமைத்தல் ஆகியவற்றை ஒப்பந்ததாரர்களே மேற்கொள்ள வேண்டும். மேலும் மோட்டார் வாகன வரி, நடத்துநர்களுக்கான செலவுகள், வாகனங்களை கண்காணிக்கும் வசதி உள்ளிட்டவை அரசு போக்குவரத்துக்கழகங்கள் மேற்கொள்ளும். இதற்கான டெண்டர் விளக்கக்கூட்டம் வரும் 10ம் தேதி சென்னை, தரமணியில் உள்ள சாலை போக்குவரத்து நிறுவனத்தில் நடக்கும்' எனக்கூறப்பட்டுள்ளது.
இது போக்குவரத்துக்கழகங்களை தனியார் மயமாக்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கை என்றே பலரும் கருதுகின்றனர்" என்று அந்த செய்தி மேலும் விவரிக்கிறது.

கருத்துகள் இல்லை: