வியாழன், 10 அக்டோபர், 2019

நீதிமன்றத்தில் மயங்கி விழுத்த நிர்மலா தேவி .... ஸ்ரீ வில்லிபுத்தூர்


 மாலைமலர் : கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராக வந்த நிர்மலாதேவி கோர்ட்டில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் அந்த கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் மதுரையைச் சேர்ந்த உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனசில மாதங்களுக்கு பின்னர் 3 பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. இவர்கள் வழக்கு தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஆஜராகி வருகின்றனர்.
ஒவ்வொரு முறையும் கோர்ட்டில் ஆஜராக வரும் நிர்மலாதேவி தனிமையில் பேசுவதும், வினோதமாக நடந்து கொள்வதும் என பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இதற்காக அவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டது.
நிர்மலாதேவி உள்பட 3 பேரும் வழக்கு விசாரணைக்காக இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டுக்கு வந்தனர்.

அப்போது கோர்ட்டு வளாகத்தில் அமர்ந்திருந்த நிர்மலாதேவி திடீரென மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் தண்ணீர் தெளித்து அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர்.


இதைத்தொடர்ந்து மாஜிஸ்திரேட்டு பரிமளா முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்தார்.

அப்போது நிர்மலாதேவி உள்பட 3 பேரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தனர்.

அதைத்தொடர்ந்து வழக்கை வருகிற 23-ந் தேதிக்கு ஒத்திவைத்த மாஜிஸ்திரேட்டு அன்றைய நாளில் 3 பேரும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

முன்னதாக நிர்மலாதேவி உள்பட 3 பேர் மீதும் 8 பிரிவுகளில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

வழக்கு விசாரணை முடிந்தபின் வெளியே வந்த நிர்மலாதேவி சோர்வுடன் காணப்பட்டார். இதையடுத்து ஆம்புலன்சு மூலம் அவரை அங்கிருந்தவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கருத்துகள் இல்லை: