செவ்வாய், 8 அக்டோபர், 2019

முதல்வர் எடப்பாடி பழனிசாமி : ஓட்டுக்கு பணம் தர தி.மு.க., திட்டம்.. ஆந்திரா ஆளுநர் தமிழிசையிடம் ஆதங்கம்!

dmk,admk,EPS,முதல்வர், பழனிசாமி,குற்றச்சாட்டுதினமலர் : சென்னை : ''இடைத்தேர்தலில், வாக்காளர்களுக்கு, தி.மு.க., பணம் கொடுக்க திட்டமிட்டுள்ளது,'' என, முதல்வர் இ.பி.எஸ்., குற்றம் சாட்டினார்.
சென்னை, சாலிகிராமத்தில் உள்ள, தன் வீட்டிற்கு, தெலுங்கானா கவர்னர் தமிழிசை வந்துள்ளார். அவரை, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது, தமிழிசைக்கு பூங்கொத்து மற்றும் சால்வை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தார். தமிழிசையும், சால்வை மற்றும் மரக்கன்றை, முதல்வருக்கு பரிசாக வழங்கினார்.
பின், முதல்வர் அளித்த பேட்டி: தமிழகத்தை சேர்ந்த தமிழிசையை, தெலுங்கானா மாநில கவர்னராக நியமித்ததற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளின் இடைத்தேர்தலில், மக்கள் ஆதரவுடன், அ.தி.மு.க., வெற்றி பெறும். வேலுார் தொகுதி லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வினர் பணம் கொடுத்தனர். வருமான வரித் துறையினர், தி.மு.க.,வினருக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்து, பணம் பறிமுதல் செய்தனர். அதேபோல், தற்போது நடக்கும், இரு தொகுதிகளின் இடைத்தேர்தலிலும், தி.மு.க., பணம் கொடுக்க திட்டமிட்டுள்ளது.


சிவகங்கை மாவட்டம், கீழடியில், அருங்காட்சியகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. காவிரியில், மேகதாது அணை கட்ட, கர்நாடகாவுக்கு அனுமதி தரக் கூடாது என, மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தமிழக அரசின் முயற்சியால் தான், அதற்கு, மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 'டெங்கு' காய்ச்சலை கட்டுப்படுத்த, உள்ளாட்சி மற்றும் சுகாதார துறை சார்பில், பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொது மக்கள், காய்ச்சல் வந்ததும், அரசு மருத்துவமனைக்கு சென்று, ரத்த பரிசோதனை செய்து, உரிய சிகிச்சை பெற வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்

கருத்துகள் இல்லை: