
எனது மகள் உங்களுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை செய்து கொண்டு இருக்கிறார் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்திய விஜயதசமி விழாவில் தெரிவித்துள்ளார் ஹெச்சிஎல் நிறுவன, தலைவரான ஷிவ் நாடார்.
விஜயதசமி நாளில், ஆர்எஸ்எஸ் சார்பில் நாக்பூரில் விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த வருடம் இந்த விழா வழக்கத்தைவிட கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
நாக்பூர் ரேஷிம்பாக் மைதானத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் பங்கேற்று ஷிவ் நாடார் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதை பாருங்கள்:
அரசு மட்டுமே நமது நாட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் என்று நினைத்துக்கொண்டு இருக்கக்கூடாது. தனியார் நிறுவனங்கள், நாட்டின் குடிமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்புமே நாட்டின் உயர்வுக்காக இணைந்து செயல்பட வேண்டும். அனைவரிடமும் இருந்து சமமான பங்களிப்பு வரவேண்டும்.
சிக்ஷா (கல்வி) என்று நாங்கள் நடத்திவரும் அமைப்பின் மூலமாக, நடத்திய ஒரு கணக்கெடுப்பில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் 5 வயதுக்குட்பட்ட, 46 சதவீதம் குழந்தைகள் தீவிரமான, சத்து குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக வயதுக்கேற்ற மூளை வளர்ச்சி இல்லாமல், கல்வி கற்றலில் திறமை குறைவாக இருப்பதை கண்டு உள்ளோம்.
எனது மகள்தான் சிக்ஷா ப்ராஜெக்ட் செய்துவருகிறார். அவர் செய்யும் ஒரு விஷயம் உங்களுக்கு பிடிக்காது. பள்ளிகளில் உள்ள மாணவ மாணவிகளுக்கு சிக்கன் சாப்பிடுவதற்கு அவர் வற்புறுத்துகிறார். இதன்மூலமாக அந்த குழந்தைகளின் புரதச்சத்து தேவையை பூர்த்தி செய்கிறார். பொதுவாக மேற்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள குழந்தைகள் உயரத்தில் குறைந்தவர்களாக உள்ளனர். இவர்களுக்கு கூடுதலாக சத்துக்கள் தேவைப்படுகிறது, இந்த பிராந்தியத்தில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் அரிசி உணவு சாப்பிடுவதில்லை, ரொட்டிகள் மட்டுமே சாப்பிடுகிறார்கள். எங்களது குழு நடத்திய ஆய்வின் போது விவசாயத்தை நம்பியுள்ள குடும்பங்களுக்கு, மாதத்துக்கு சராசரியாக 6,400 ரூபாய் வருமானம் வருவது தெரிய வந்தது. 5 பேர் கொண்ட ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு 1,300 ரூபாய்க்கும் கீழே தான் மாதத்திற்கு செலவிட முடியும் என்றால், அவர்கள் உட்கொள்ளக் கூடிய சத்துக்களின் அளவை நீங்களே நினைத்து பார்த்துக் கொள்ளலாம். தீயவற்றை அழிக்க வேண்டும்</ தசரா என்பது நமக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள தீயவற்றை நீக்குவதை குறிக்கிறது. ராவணனை, ராமர் வெற்றிகண்ட தினமாகவும், அதர்மத்தை, தர்மம் வென்ற தினமாகவும், தீயவற்றை நல்லது வெற்றி பெற்ற தினமாகவும் கொண்டாடப்படுகிறது. தீயவற்றை நல்லது அழித்து விட்டது என்றால், அது முழுமையாக முடிந்து விட்டதாக சொல்லி விட முடியாது. அது ஒரு தொடர் போராட்டம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஷிவ் நாடார் மட்டும் கிடையாது, விப்ரோ தலைவர் அசிம் பிரேம்ஜியும், நேற்றைய ஆர்எஸ்எஸ் துவக்க தின நிகழ்வில் பங்கேற்றார். அவர் ஆர்எஸ்எஸ் நிறுவனர் கேபி ஹெட்கேவார் மற்றும் இரண்டாவது தலைவரான எம்.எஸ்.கோல்வால்கர் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார். கடந்த மாதம், 14ம் தேதி, தொழிலதிபர் ராகுல் பஜாஜ், ஹெட்கேவார் சிலைக்கு அஞ்சலி செலுத்தியிருந்தார். ரத்தன் டாட்டா, கடந்த 5 மாதங்களில் 2 முறை, ஆர்எஸ்எஸ் தலைமையகம் வந்துள்ளார். தொழிலதிபர்கள் பலரும் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் நெருக்கத்தை வளர்த்து வருவது கவனிக்கத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக