திங்கள், 16 செப்டம்பர், 2019

நான் நிரந்தர தளபதி; வைகோ, நிரந்தரப் போர்வாள்!' - ம.தி.மு.க மேடையில் ஸ்டாலின்

vikatan.com - ராம் பிரசாத் `அண்ணாதான் நம்முடைய முகம்; நம்முடைய முகவரி அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்' என ம.தி.மு.க மேடையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் உரையாற்றினார்.
திராவிட இயக்கத்தின் முன்னோடி பேரறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்த நாளையொட்டி ம.தி.மு.க சார்பில் மாநாடு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ திடலில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், ``இந்த விழாவில் நான் பங்கேற்றது எனக்குப் பெருமை, சிறப்பு, மகிழ்ச்சி மட்டுமல்ல என்னுடைய வாழ்நாளில் எனக்குக் கிடைத்த பெருமையாக நான் கருதுகிறேன். அண்ணாதான் நம்முடைய முகம் நம்முடைய முகவரி அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். இந்த மேடையில் வைகோவுடன் இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். காரணம் ம.தி.மு.க மாநாட்டில் நான் கலந்துகொள்வது இதுவே முதல் முறை. நீர் அடித்து நீர்விலகாது என்பதுபோல் நாம் இருக்கிறோம். தமிழர், திராவிடம், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகிய சொற்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தும். அதனால்தான் ம.தி.மு.க மேடையில் ஸ்டாலினும் தி.மு.க மேடையில் வைகோவும் இருக்கிறோம்.





திராவிட முன்னேற்றக் கழகத்தில் எப்படி இந்த ஸ்டாலின் நிரந்தர தளபதியோ அதுபோல் ம.தி.மு.க-வில் அண்ணன் வைகோ நிரந்தரப் போர்வாள். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வைகோ கோபாலபுரத்துக்கு வந்தார். கருணாநிதி உடல்நலிவுற்று ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தபோது வைகோ, அவரை சந்திப்பதற்காக இல்லத்துக்கு வந்தார். இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். கருணாநிதி, வைகோவை அடையாளம் கண்டுகொண்டார். வைகோவின் முகத்தை மறந்திருந்தாலும் அவரது கறுப்புத்துண்டை மறந்திருக்க மாட்டார். கருணாநிதி புன்முறுவல் பூத்தார். வைகோ கண்கலங்கினார். கருணாநிதி, கரத்தை வைகோ பற்றுகிறார். என்னுடைய கரத்தையும் அவர் பிடித்தார்.






MK Stalin, Vaiko






MK Stalin, Vaiko
உங்களுக்கு எப்படி நான் பக்கபலமாக இருந்தேனோ அதுபோல் தம்பிக்கு, அதாவது எனக்கு பக்கபலமாக இருப்பேன் என்று கருணாநிதியிடம் வைகோ அன்று கூறினார். கலைஞருக்கு அளித்த வாக்குறுதிப்படி எனக்கு பக்கபலமாக இருக்கிறார். எனக்கு என்றால் இந்த ஸ்டாலினுக்கு அல்ல; திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பக்கபலமாக இருக்கிறார்” என்று ஸ்டாலின் பேசினார்

கருத்துகள் இல்லை: