வெள்ளி, 20 செப்டம்பர், 2019

மத்திய அமைச்சர் முடியை இழுத்து தள்ளிய மாணவர்கள்.. மேற்கு வங்கத்தில் ராஜ மரியாதை வீடியோ


மத்திய அமைச்சர் முடியை இழுத்து தள்ளிய மாணவர்கள்!மின்னம்பலம் :
ஜாதவ்புர் பல்கலைக்கழகத்துக்கு உரையாற்றச் சென்ற மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோவுக்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். மாணவர்கள் தன் முடியை இழுத்து தள்ளியதாக மத்திய அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் பருவநிலை மாற்றம் துறை இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோ, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்புர் பல்கலைக்கழகத்துக்கு ஏபிவிபி அமைப்பு மாணவர்களால் ஏற்படுத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள நேற்று சென்றிருந்தார். அவர் வருவதற்கு முன்பாகவே கறுப்புக் கொடி காட்டி நுழைவாயிலில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர் வந்த பிறகும் பாபுல் சுப்ரியோ திரும்பிப் போக வேண்டும் என்று முழக்கமிட்டு இருக்கின்றனர்.

இதனால் அவர் ஒரு மணி நேரத்துக்கும் மேல் தாமதமாகவே பல்கலைக்கழகத்துக்குள் சென்றிருக்கிறார். இந்திய மாணவர் சங்கம் மற்றும் அனைத்திந்திய மாணவர் கூட்டமைப்பு உள்ளிட்ட மாணவர் அமைப்பினர் மத்திய அமைச்சருக்குக் கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மாணவர்களைத் தடுத்து அமைச்சருக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். இதன் பிறகே அவர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவில் அரசு நிர்வாகம் என்ற தலைப்பில் பாபுல் சுப்ரியோ உரையாற்றினார். நிகழ்ச்சி முடிந்து அவர் திரும்பிச் செல்லும்போதும் மாணவர்கள் அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் கூறும்போது, நான் இங்கு அரசியல் செய்ய வரவில்லை. மாணவர்கள் இதுபோன்று நடந்து கொண்டது எனக்கு வருத்தமாக உள்ளது. அவர்கள் என்னுடைய தலைமுடியை இழுத்து தள்ளினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சிலர் தங்களை வெளிப்படையாக நக்சல்கள் என்றும் கூறிக்கொண்டனர் என்று தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து போலீஸ் படையுடன் பல்கலைக்கு வந்த மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தங்கர், விசாரணை நடத்தினார். அமைச்சருக்கு எதிராகத் தகாத முறையில் நடந்துகொண்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பல்கலை துணைவேந்தருக்கு உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: