புதன், 18 செப்டம்பர், 2019

குடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்து அழிப்பு .. திமுக இளைஞரணி


tamil.indianexpress.com :  DMK Youths destroyed Hindi letters at Gudiyattam:
 குடியாத்தம் ரயில் நிலையத்தில் பெயர்ப்பலகையில் எழுதப்பட்டுள்ள இந்தி எழுத்துகளை திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு இளைஞர்கள் கருப்பு மைகொண்டு அழித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தி மொழி தினத்தை முன்னிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில், “நாடு முழுவதும் ஒரே மொழி இருக்க வேண்டியது அவசியம். அதுவே உலகில் இந்தியாவின் அடையாளமாக இருக்க வேண்டும். ஒரு மொழி, மொத்த நாட்டையும் ஒற்றுமையாக வைக்க முடியும் என்றால், அது அதிகம் பேசப்படும் இந்தி மொழியால்தான் முடியும்.” என்று பதிவிட்டார்.
இதற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் திமுக காங்கிரஸ், இடது சாரிகள், விசிக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்தி திணிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி மொழியில் எழுதப்பட்டுள்ள எழுத்துகளை திமுகவின் தகவல்தொடர்பு பிரிவு இளைஞர்கள் கருப்பு மை கொண்டு அழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் மத்திய அரசை கண்டித்து தமிழனை எதிர்க்காதே, தமிழை காப்போம் என்ற பதாகைகளை ஏந்தி இந்தியை திணிக்காதே என்று முழக்கமிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 22 இளைஞர்களையும் போலீசார் கைது செய்தனர்.
திமுகவின் தகவல்தொடர்பு பிரிவு இளைஞர்கள் குடியாத்தம் ரயில் நிலையத்தில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகளை கருப்பு மைகொண்டு அழித்து நடத்திய போராட்டம், 1963 – 65-ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் திமுக தொண்டர்கள் ரயில் நிலையங்களில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகளை தார்ப்பூசி அழித்த போராட்டத்தை நினைவுபடுத்துவதாக இருந்தது. இதனால், அந்த காலகட்டத்தை சேர்ந்தவர்களுக்கு வரலாறு திரும்புகிறதோ என்று கருத வைத்துள்ளது

கருத்துகள் இல்லை: