ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

BBC : இந்தி திணிப்பு: உள்துறை அமைச்சருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சீறிய பேரறிஞர் அண்ணா!

அண்ணாத்துறை‘இந்தி அச்சுறுத்தலை எதிர்ப்போம்’ எனும் பொருளை மையப்படுத்தி மாநிலங்களவையில் தமிழக முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரை ஆற்றிய உரையின் சுருக்கம். இந்திய அரசமைப்புச் சட்ட ஏற்பாட்டின்படி இந்திய நாட்டின் ஆட்சி மொழியாக இந்தியை உயர்த்தி ஆங்கிலத்துக்கு விடைகொடுக்க இந்திய அரசு முடிவெடுத்த சூழலில் 1963 மே மாதம் அண்ணா ஆற்றிய உரை இது.ஜனநாயகம் என்பது பெரும்பான்மை எண்ணிக்கை அடிப்படையிலான ஆட்சி மட்டும் அல்ல; சிறுபான்மை மக்களின் உரிமைகள், உணர்ச்சிகள் ஆகியவையும் புனிதம் என்று கருதி, அவற்றைக் காப்பதற்குப் பெயர்தான் ஜனநாயகம்.
இந்தி ஆட்சி மொழியாவதை எதிர்த்து உணர்ச்சிப்பூர்வமாக தெரிவிக்கபடும் எதிர்ப்பை இந்த மசோதா கணக்கிலேயே எடுத்துக்கொள்ளவில்லை. இந்த எதிர்ப்பு இந்தியாவின் ஏதோ ஒரு சிறு பகுதியிலிருந்து வரவில்லை. தென்னிந்திய மாநிலங்கள் அனைத்திலிருந்தும் வருகிறது.
என்னுடைய நண்பர் பூபேஷ் குப்தா (கம்யூனிஸ்ட் கட்சி) இன்றைக்கு என்று பார்த்து ஆங்கிலத்தை விரட்டியடித்தே தீர வேண்டுமென்று முடிவெடுத்துவிட்டார். எனவே, ஆங்கிலத்துக்கு எதிராகக் கடுமையாக ஆங்கிலத்திலேயே பேசிவிட்டார்.

‘இந்தியா ஒற்றை நாடல்ல’

இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவாக ஒரு மொழி வேண்டும் என்று பலரும் பல விதங்களில் வாதாடினர். அது ஏற்கப்பட்டால் இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் ஒன்றைத்தான் பொதுமொழியாக ஏற்க வேண்டும். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.
கட்டுரையின் தொகுப்புஇந்தியா ‘ஒற்றை நாடு’ என்று ஏற்றுக்கொள்வோமானால், இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், இந்தியா ‘கூட்டாட்சி நாடு’ இந்தியச் சமூகம் பன்மைத்துவம் கொண்டது. ஆகையால் ஒரே ஒரு மொழியைப் பொதுமொழியாக ஏற்பது ஏனைய மொழி பேசுவோருக்கெல்லாம் அநீதி இழைப்பது போன்றதாகிவிடும். அது மட்டுமல்ல சமூகத்தின் பெரும் பகுதி மக்களால் அம்மொழியைப் படிக்க முடியாமல் குறைகள் ஏற்படும்.



இந்தியா ஒரே நாடல்ல. இந்தியா பல்வேறு இனக் குழுக்களையும் மொழிக் குடும்பங்களையும் கொண்ட நாடு. இதனாலேயே இந்தியாவை ‘துணை கண்டம்’ என்று அழைக்கிறோம். இதனால்தான், ஒரே மொழியை இந்தியாவின் ஆட்சிமொழியாக நம்மால் ஏற்க முடியவில்லை.
தேசிய கீதமான ‘ஜனகண மன’ பாடலும், தேசத் தாய் வாழ்த்தாக பாடப்படும் ‘வந்தே மாதரம்’ பாடலும் இந்தியில் இயற்றப்பட்டவை அல்ல.

‘உள்துறை அமைச்சருக்கு எதிராக முழங்கிய அண்ணா’

இந்தி மொழி முன்னேறிவிட்டது என்று உள்துறை அமைச்சர் (லால்பகதூர் சாஸ்திரி) எவ்வளவுதான் பேசினாலும் இந்தியின் நிலை இதுதான். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான மொழி என்னுடையதாக இருக்கும் போது, அதை பொது மொழியாக என்னால் ஏற்கச் செய்ய முடியாத நிலையில், “நன்றாக முன்னேறிவிட்டது; இந்தியைப் பொது மொழியாக வைத்துக்கொள்ளலாம்” என்று உள்துறை அமைச்சர் பேசுவதால் எனக்கு ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்வது எப்படி?

‘திமுகவால் மட்டும் எழுப்பப்பட்டது அல்ல’

இந்தியை ஆட்சி மொழியாகத் திணிப்பது இந்தி பேசும் மாநிலங்களுக்கு திட்டவட்டமான, நிரந்திரமான சாதகமாக அமையும், இதைத்தான் ஒரிசாவை சேர்ந்த பி. தாஸ், டாக்டர் சுப்புராயன் போன்றோர் இந்திட அரசியல் நிர்ணய சபையிலேயே கூறினர்.

கட்டுரையின் தொகுப்பு

படத்தின் காப்புரிமை Rsdebate.nic.in
மாநிலங்களவையில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டபோது, எனது நண்பர் அவினாசிலிங்கம் செட்டியார் தனது எச்சரிக்கைக் குரலை எழுப்பினார். ஆகையால், இந்த எதிர்ப்பு திமுகவால் மட்டுமே எழுப்பட்டது என எண்ணாதீர்கள். இந்த பிரச்சனையில் திமுக சிறிய பங்கை மட்டுமே வகிக்கிறது.
(இந்தி அச்சுறுத்தலை எதிர்ப்போம் என்ற பொருளில் அண்ணா பேசிய நீண்ட உரையின் சிறிய பாகம் மட்டும்தான் இது)
ஒற்றுமையா ஒற்றைத் தன்மையா எனும் பொருளில் அண்ணா நாடாளுமன்றத்தில் பேசியதன் சிறிய பாகத்தை இங்கே பகிர்கிறோம்.

‘ஒரு பகுதியினர் மொழி’

இந்தியாவில் 100க்கு 40 பேர் இந்தி பேசுவதால், இந்திதான் இந்தியாவின் ஆட்சி மொழி என அவர்கள் கூறுகிறார்கள். இந்தியாவில் 40 சதவீதம் அல்ல; 20 சதவீதம் பேர் இந்தி பேசுபவர்களாக இருந்து, அந்த 20 சதவீத மக்களும் இந்தியா முழுவதும் பரவலாக இருந்தால், இந்தியைப் பொதுமொழியாகவோ அல்லது ஆட்சி மொழியாகவோ கொண்டு வருவதில் ஓரளவு அர்த்தமிருக்க முடியும். ஆனால், ஒரு வாதத்திற்கு இவர்கள் கூறும் 40 சதவீத கணக்கை எடுத்துக் கொண்டால் கூட, இந்த எண்ணிக்கை உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், பிகார் மற்றும் ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களில் அடங்கிவிடுகிறது. ‘உயர்தனிச் செம்மொழியான தமிழ் மொழி என்னுடைய தாய் மொழி என்ற பெருமிதம் எனக்கு இருக்கிறது. எங்கள் உயிருடன், வாழ்வுடன் கலந்த மொழி தமிழ் மொழி, அந்த தமிழ் மொழி மற்றெதற்கும் தாழாத வகையில் ஆட்சி மொழி என்ற தகுதி தரப்படும்வரை நான் அமைதி பெறமாட்டேன், திருப்தி அடைய மாட்டேன்.


நான் தமிழுக்காக வாதாடுகிறேன். அதற்காக இந்திக்காக வாதாடுபவர்களின் தாய்மொழிப் பற்றை நான் மறுக்கவில்லை. அவர்கள் இந்திக்காகப் பாடுபடட்டும்.
தொகுப்பு: மு. நியாஸ் அகமது, பிபிசி தமிழ்

கருத்துகள் இல்லை: