வியாழன், 19 நவம்பர், 2015

அம்மா டாஸ்மாக்குதாய்ன்...அம்மா உப்பு அம்மா சிமெண்டு அல்லாத்தையும் விட..தெறி..தெறி....

மூடு டாஸ்மாக்கை ! – கோமளவல்லியை அச்சுறுத்தும் கலகக்குரல் ! தோழர் கோவனின் கைதுக்கு எதிராகத் தமிழக அளவிலும் தேசிய அளவிலும் எழுந்த எதிர்ப்பைக் கண்டு ஆத்திரம் அடைந்தவர்கள் அ.தி.மு.க.வினர் மட்டுமல்ல; அவர்களைக் காட்டிலும் பார்ப்பன பாரதிய ஜனதா கும்பலும், அவர்களுடைய ஊடகத்துறை கைக்கூலிகளும், முன்னாள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளும்தான் ஆத்திரம் அடைந்திருக்கிறார்கள். கருத்துரிமையை ஆதரிக்கிறோம், அதே நேரத்தில் வன்முறையைப் பரப்புவதை ஏற்கவியலாது; ரசனைக்குறைவான வரிகளை ஏற்கவியலாது என்று விதவிதமாக இவர்கள் மழுப்புகிறார்கள். ஜனநாயகவாதிகளைப் போல நடிக்கிறார்கள்.
04-police-serviceதொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற ஒரு முன்னாள் போலீசு அதிகாரி, “நம்ம ஊரில் டாஸ்மாக்கு கிடையாது, அடிச்சு தூக்குன்னு எழுதியிருப்பதால் இது தேசத்துரோக குற்றம்தான்” என்று பேசினார். சாராயக்கடையும் தேசமும் ஒன்றே என்பது அவரது விளக்கம். கடைகளைத் தூக்குவதற்கு இவர்கள் கூறும் வழி என்ன? கடைகளை அகற்றுவதற்காக ஆயிரக்கணக்கான போராட்டங்கள் நடந்திருக்கின்றன. எண்ணற்ற தீர்ப்புகள் வந்துள்ளன.

நெடுஞ்சாலை ஓரத்தில் டாஸ்மாக் கடை வைக்க கூடாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நெடுஞ்சாலை பக்கமாக இருக்கிற கதவை மூடிவிட்டு பின்புறமாக விற்கிறார்கள். டாஸ்மாக் விவகாரத்தில் மட்டுமல்ல, மொத்தத்தில் 21,000 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தமிழக அரசுக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரிக்கப்படாமல் கிடக்கின்றன. எனவேதான், கோர்ட்டை நம்பிப் பயனில்லை என்று செல்போன் கோபுரத்தில் ஏறினார் சசி பெருமாள்.
சாராயக்கடையாக இருக்கட்டும். ஆற்றுமணல் கொள்ளையாக இருக்கட்டும், எல்லாவற்றிலுமே மக்கள் நலத்தைப் பாதுகாப்பதாக உத்திரவாதம் கொடுத்திருக்கிற அரசுதான் கொள்ளையை முன்னின்று நடத்துகிறது. தமிழ்நாட்டு மக்கள் ஒரு ஆக்கிரமிப்புப் படையிடம் சிக்கிய நிலையில் இருக்கிறார்கள். மக்கள் யாரும் புது கோரிக்கை வைக்கவில்லை. எங்கள் ஆற்றை விட்டு விடுங்கள், சாராயக்கடையை மட்டும் எடுத்துவிடுங்கள், நாங்கள் பிழைத்துக் கொள்கிறோம் என்று கெஞ்சுகிறார்கள். ரவுடியிடம் கிரிமினல்களிடம் கெஞ்சுவதைப் போல மக்கள் அரசிடம் கெஞ்சுகிறார்கள். கெஞ்சிப்பயனில்லை என்பதால்தான், குடி கெடுக்கும் அரசிடம் கெஞ்சாதே என்று சொல்கிறோம்.
டாஸ்மாக் கலாச்சாரம்
டாஸ்மாக் கலாச்சாரம் : ஜெயாவிற்கும் அவரது அரசுக்கும் வருமானம், தமிழகத்திற்குப் பெரும் கேடு!
கலிங்கப்பட்டியில் கடையை அடித்து மூடினார்கள். ஊராட்சி மன்றமே வேண்டாம் என்று தீர்மானம் போட்டிருக்கிறது. ஆனால், அதை மீறி கலெக்டர் கடையைத் திறக்கிறார். கலிங்கப்பட்டி ஊராட்சித் தலைவர், கடைக்கு இடைக்காலத் தடை கேட்டு உயர்நீதி மன்றத்துக்கு ஓடுகிறார். உங்கள் ஊரில் கடை வேண்டாம் என்று சொல்வதற்கு நீங்கள் எதற்காக கோர்ட்டுக்குப் போக வேண்டும்? இதற்குக்கூட மக்களுக்கு அதிகாரம் இல்லையா? மக்கள் அதிகாரத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டால் ஒழிய, ஒரு சாராயக் கடையைக் கூட மூட முடியாது என்கிறோம்.
இது மக்கள் அதிகாரத்தின் கொள்கை பிரகடனம் மட்டுமல்ல, போலீசு சொல்வது போல தீவிரவாத அரசியலும் அல்ல. மனுப் போட்டு எத்தனை இடங்களில் ஆற்று மணல் கொள்ளையை நிறுத்தியிருக்கிறீர்கள் என்று மக்களிடமே கேட்டுப் பாருங்கள். எந்த இடத்திலும் மனுப்போட்டு மன்றாடி எதுவும் நடக்கவில்லை. மக்களுடைய அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்வது ஒன்றுதான் வழி என்று சொல்லுகிறோம். இது எங்களுடைய விருப்பம் அல்ல, சாத்தியமான வழி இது மட்டும்தான் என்று சொல்கிறோம்.
பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள், இந்த அம்மாவைக் கடுமையாகத் தாக்கி பாட்டு எழுதி விட்டார்கள். அதனால்தான் கோபப்பட்டு 124-ஏ போட்டுவிட்டார்கள் என்று. அது உண்மை இல்லை. இந்த அம்மாவை தரக்குறைவாக, சாக்கடை போன்று பேசிய நாஞ்சில் சம்பத் முதல் வளர்மதி வரை பலருக்கும் பதவி கொடுத்து அமர வைத்திருக்கிறார்கள். ஏனென்றால், அம்மாவுக்கும் அவர்களுக்கும் கொள்கை ஒற்றுமை இருக்கிறது. டாஸ்மாக்கை அரசு நடத்தினாலும், சரக்கு மிடாஸ் உள்ளிட்ட சாராயக் கம்பெனிகளிடமிருந்து வருகிறது. பார்களில் நடக்கும் கள்ளச்சாராய விற்பனையில் அ.தி.மு.க. ஆட்கள் காசு பார்க்கிறார்கள். போலீசு நிலையம் முதல் வருவாய்த்துறை அதிகாரிகள் வரை இந்த அரசு அமைப்பின் மீது டாஸ்மாக் பணமழை பெகிறது. எனவே, டாஸ்மாக்கை தூக்குவது அரசையே தூக்குவதுதானே என்று எண்ணித்தான் 124-ஏ போட்டிருக்கிறார்கள்.
மக்கள் அதிகாரம் பற்றி நாம் கூறும்போது, நேர்மையான அதிகாரிகளே இல்லையா, அவர்கள் மூலமாக சட்டப்பூர்வமான முறையிலே சாதிக்க முடியாதா என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
நேர்மையான அதிகாரி சகாயம் சுடுகாட்டில் படுக்க வேண்டிய நிலைமை. அடுத்து டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா, அவருடைய தோழி டி.எஸ்.பி மகேசுவரி, அப்புறம் முத்துக்குமாரசாமி. இன்னும் மர்மமான முறையில் கொல்லப்பட்ட எண்ணற்ற அதிகாரிகள். நேர்மையாளர்களுக்கு நேரும் கதி இதுதான்!
திருப்பூர் கல்பனா
2006-ல் திருமணமாகி, 2014-ல் தனது கணவன் ஆறுமுகத்தை குடிக்கும், அதனால் ஏற்பட்ட கடனுக்கும், அவமானத்திற்கும் பறிகொடுத்துவிட்டு, மூன்று சின்னஞ்சிறு பெண் குழந்தைகளோடு வாழ்க்கை போராட்டம் நடத்திவரும் திருப்பூரைச் சேர்ந்த கல்பனா
இது மக்கள் விரோத அரசு மட்டுமல்ல, தோற்றுப்போன அரசு. டாஸ்மாக்கை மூடினால் கள்ளச்சாராயம் பெருகும், ரவுடியிசம் பெருகும். போலீசால் தடுக்க முடியாது என்று ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார் நத்தம் விசுவநாதன். அதனால்தான் சொல்கிறோம். சாராயத்துக்கு கூறப்படும் நீதியைத் திருட்டுக்கும் பொருத்தலாமே! பிக்பாக்கெட், சங்கிலிப்பறிப்பு, பீரோ புல்லிங்கை தடுக்க முடியவில்லை. எனவே, இவற்றை அரசாங்கமே முறையாகச் செய்கிறோம் என்பார்களா? இதற்குப் பெயர் அரசாங்கமா? இது ஆள அருகதையற்ற அரசு.
எனவேதான் நீ ஒதுங்கு, மக்கள் பார்த்துக்கொள்வார்கள் என்கிறோம். மேலப்பாளையூரிலோ, அல்லது மற்ற இடங்களிலோ எங்கே மக்கள் அணிதிரண்டு நிற்கிறார்களோ, அங்க நல்ல சாராயமும் விக்க முடியாது. கள்ள சாராயமும் விக்க முடியாது.
பாடலின் சொற்குற்றம் பற்றி ஆராச்சி செய்பவர்கள் பாடலின் பொருள் பற்றி என்ன சொல்லுகிறார்கள்? மிகப்பெரிய சீரழிவுக்கு, தமிழ்நாட்டின் எதிர்காலத் தலைமுறை தள்ளப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி இந்த அரசாங்கம் என்ன சொல்கிறது? டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்கள் மிகத்தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த போது டாஸ்மாக்கையெல்லாம் மூட முடியாது என்று அறிவித்தார் அமைச்சர். அந்த அமைச்சருக்கு பெயர், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர். அரசாங்கத்தின் கொள்கை மதுவிலக்குதானாம், கடையின் பெயர்ப்பலகையில் மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு என்று எழுதிப் போட்டிருப்பதால் அதுதான் அவர்கள் கொள்கையாம். சொல்கிறார்கள்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் பா.ம.க வழக்கறிஞர் பாலு, கடைகளின் விற்பனை நேரத்தையாவது குறைப்பதற்கு உத்தரவிடுங்கள் என்று ஒரு மனுதாக்கல் செய்தபோது, சாராயம் விற்பது என்பது அரசாங்கத்தின் கொள்கை முடிவு. அதில் தலையிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்றது உயர் நீதிமன்றம்.
ஜெயா-சசி கும்பல்
ஜெயா-சசி கும்பலின் ‘தவ வாழ்க்கை’
இப்படி மோசடிப் பேச்சு பேசுகின்ற, தமிழ்ச்சமூகத்தையே நாசமாக்கிய குற்றவாளிகள், பாடலை, பாடலை எழுதியவர்களை, வெளியிட்டவர்களைக் கூண்டிலேற்றி, இந்த வார்த்தை சரியில்லை, அந்த வார்த்தை சரியில்லை என்று பிரித்து ஆராய்கிறார்கள்.
ம.க.இ.க.வின் பாடல் ஒலிப்பேழைகள் 12 வந்திருக்கின்றன. தென்மாவட்டங்களில் கடுமையான சாதிவெறி கலவரங்கள் நடைபெற்ற போது, அவற்றுக்கெதிராக மேடையில் நின்று முழங்கியிருக்கிறார்கள் இதே கலைக்குழுவினர். மதவெறிக்கு எதிராக நேருக்கு நேர் நின்று கோவையில், ராமேசுவரத்தில் கலைநிகழ்ச்சி நடத்தியிருக்கிறார்கள்.
எது மக்களுக்கு சொல்லப்பட வேண்டிய விசயமோ அதைச் சொல்லுகிறோம். என்ன மொழியில், உணர்ச்சியில் அதனைச் சொல்வது என்பது எப்படித் தீர்மானிக்கப்படுகிறது? டாஸ்மாக் எதிர்ப்புப் பாடல்களை எடுத்துக் கொள்ளுங்கள். குடிசைப் பகுதிகளில் பெண்கள் வெளிப்படுத்தும் கோபத்தை உள்வாங்கிக் கொண்டு மக்கள் மொழியில் எழுதுகிறோம். தவறு என்றால் மக்களே நிராகரித்துவிடுவார்கள்.
உங்க அம்மாவை இழிவுபடுத்தி பேசினா சும்மா விடுவீங்களா?ன்னு தொலைக்காட்சி விவாதத்தில் ஒரு அ.தி.மு.க. மகளிர் அணித் தலைவி கேட்டார். எங்கம்மா இப்படி சாராயம் வித்தால் வீட்டை விட்டு துரத்தி விடுவோம் என்பதுதான் இதற்குப் பதில். அடுப்பு வைத்து காச்சினால்தான் சாராயமா? மிடாஸ் ஆலையில் பாலர் வைத்து காச்சினால் அது சாராயம் இல்லையா? திட்டம் போட்டு விற்பனையை அதிகரிக்கும் ஜெயாவை ஊற்றிக் கொடுத்ததாகச் சொல்வதில் என்ன தவறு?
அம்மா உப்பு என்கிறீர்களே, அம்மா டாஸ்மாக்குனு சொல்ல வேண்டியதுதானே என்று விஜயகாந்த் மனைவி கேட்கவில்லையா? நான் உத்தரவிட்டுள்ளேன், என்னுடைய அரசு என்றுதான் எப்போதும் பேசுகிறார் ஜெயலலிதா. சாராயம் விற்கும் அரசு யாருடையது? அது மட்டும் நத்தம் விசுவநாதனுடைய அரசா?
ஜெயா-சசி கும்பல் கொள்ளை
1991-96 ஆட்சிக் காலத்தில் ஜெயா-சசி அடித்த கொள்ளைக்கு அவரது வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட இந்த தங்க-வைர நகைகள் சான்று என்றால், தற்பொழுது ஊத்திக் கொடுப்பதன் மூலம் அடிக்கும் கொள்ளைக்குச் சான்று சென்னை வேளச்சேரியில் அக்கும்பல் கைப்பற்றியிருக்கு்ம 11 சொகுசு திரையரங்குகள்.
இந்தப் பாடல் எழுப்புகின்ற மையக் கருத்தைப் பற்றி விவாதிப்பதைத் தவிர்த்து விட்டு, ஒருமையில் பேசியிருக்கிறீர்கள், உத்தமி, உல்லாசம்னு சொல்லியிருக்கீங்க என்கிறார்கள்.
வளர்ப்பு மகன் திருமணத்தை நாடே காறி உமிழ்ந்ததே, அது உல்லாசம் இல்லையா? 2000 செருப்பு, 3000 புடவை உல்லாசமில்லையா? தங்க நகையும் ஒட்டியாணமும் பூட்டிக்கொண்டு நிற்கிறார்களே, அது உல்லாசமில்லையா? வேறு என்ன வார்த்தைகளால் இதை சொல்வது? நீ வாழவச்ச தெய்வமுனு கூவலைன்னா கொன்னுருவான்னு எழுதியிருப்பதில், ர் விகுதி இல்லாததுதான் பிரச்சினையா? அதில் சொல்லியிருக்கும் கருத்து உண்மையா இல்லையா? அமைச்சர்களைக் கேட்டுப்பாருங்கள்.
பெண் என்பதால் என்னை இழிவுபடுத்திவிட்டார்கள் என்று பேசுவதும், அதை முன்னிறுத்துவதும் ஜெயா நடத்தும் அரசியலில் ஒரு உத்தி. ஒரு பெண்ணென்றும் பாராமல் என் முடியை பிடித்து இழுத்துவிட்டார்கள் என்று ஒரு நாடகத்தை தி.மு.க. ஆட்சியின் போது அரங்கேற்றினார்கள்.
அந்த நாடகத்தில் ஒரு கதாபாத்திரமாக இருந்த திருநாவுக்கரசர் அதை அம்பலமாக்கியிருக்கிறார். அப்புறம் சென்னா ரெட்டியைப் பற்றி இதே போல குற்றம் சாட்டி அறிக்கை விட்டார் ஜெ.
அதே நேரத்தில் ராஜீவ் காந்திக்கு சோனியா விசுவாசமா இல்லை, எம்.ஜி.ஆரை அவங்க மனைவி ஜானகி விஷம் வச்சு கொன்னாங்க, போலீசால் பாலியல் வன்முறைக்கு ஆளான அந்தியூர் விஜயா காசுக்காக பொய் சொல்பவர் என்று நாக்கில் நரம்பில்லாமல் என்ன வேண்டுமானாலும் பேசக்கூடிய நபர்தான் ஜெ.
சிவகங்கையில நடந்தது என்ன? அந்த சிறுமிக்கு நடந்த கொடுமைக்கு காரணமான குற்றவாளிகளில் முதன்மையானவர்கள் போலீசு அதிகாரிகள். ஒருவர்கூட இதுவரை கைது செயப்படவில்லை. அந்தச் சிறுமிக்கு இந்த பெண் முதல்வர் வழங்கியிருக்கும் நீதி என்ன?
குடிகாரப் புருசன் உயிரோட இருந்தால் மனைவியின் நடத்தையை அன்றாடம் சந்தேகித்து நீ என்ன உத்தமியா என்று கேட்கிறான். செத்து விட்டால் இளம் கைம்பெண்களின் நடத்தையை சமூகம் ஆராச்சி செய்கிறது. இப்படி இலட்சக்கணக்கான பெண்களுடைய சுயமரியாதையை இழிவுபடுத்தியிருப்பது ஜெயாவின் ஆட்சி. அதனைக் கேள்விக்குள்ளாக்கினால், பெண் முதல்வரை இழிவுபடுத்தி விட்டதாகத் திசை திருப்புகிறார்கள்.
இது ஒரு தந்திரம். பா.ஜ.க. கையாளுகிற தந்திரம். குஜராத்தில் முசுலீம்களை ஏன் வேட்டையாடினீர்கள் என்று கேட்டால், நீ அல்உம்மாவை ஆதரிக்கிறியா? எங்க ஆளை அந்த ஊர்ல கொன்னாங்களே, அதை ஆதரிக்கிறியான்னு கேட்பார்கள். இல்லை. நாங்க அல் உம்மாவை ஆதரிக்கவில்லை. பின்லேடனை ஆதரிக்கவில்லை. தாவூத் இப்ராஹிம்மை ஆதரிக்கவில்லை என்று நீங்கள் தன்னிலை விளக்கம் தருவீர்கள். உங்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி, தன்னிலை விளக்கம் கொடுக்கிற நிலைக்கு ஆளாக்குவது என்பது ஒரு பாசிஸ்டு விவாத உத்தி. அதே உத்தியைத்தான் இவர்கள் கையாளுகிறார்கள். அதற்கு நாம் பலியாக வேண்டுமா என்பதுதான் நமது கேள்வி.
பாடலை வரிவரியாகப் பிரித்து ஆராய்ந்தும், அதிலிருந்துதேசவிரோத குற்றத்துக்கு எந்த ஆதாரத்தையும் அவர்களால் காட்ட முடியவில்லை. கடைசியாக விசயத்துக்கு வந்துவிட்டனர். வினவு இணைய தளமும், அது சார்ந்திருக்கும் ம.க.இ.க. உள்ளிட்ட அமைப்புகளும் இந்த அரசமைப்புக்கு எதிரானவை என்றும், அவர்கள் மீது முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீசும், பாரதிய ஜனதாவும் ஒரே குரலில் ஊடகங்களில் பேசுகின்றனர்.

மக்கள் எங்களை ஏற்பதற்குக் காரணம் எங்கள் செயல்பாடு மட்டும் அல்ல. அந்தப் பெருமையெல்லாம் உங்களையே சேரும். டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை உங்களுடைய மாவட்ட ஆட்சியர்கள் மக்களுடைய குரலுக்கு செவிசாய்த்திருந்தால், ஒருவேளை இந்த அரசாங்கம் கடைகளை மூடி பெண்களின் கண்ணீரைத் துடைக்க முன்வந்திருந்தால், இந்தப் பாட்டு உங்களை அச்சுறுத்தும் நிலை ஏற்பட்டிருக்காது அல்லவா?
இவர்கள் ஒரு சிறு குழு என்று சொல்கிறீர்கள். ஆனால், இந்த சிறு குழுவைப் பார்த்து அஞ்சுகிறீர்கள். ஏனென்றால், பாடல் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் மக்கள் மத்தியில் பரவுகிறது.
இதை எல்லாக் கட்சியினரும் ஆதரித்துப் பேசுகிறார்கள். கட்சி அரசியலே தெரியாத மக்களும் பெண்களும் பேசுகிறார்கள். ஏன்? தாங்கள் சொல்ல நினைத்ததை இந்தப் பாடல் சொல்கிறது என்று எங்களில் அவர்களை அடையாளம் காணுகிறார்கள். அது உங்களை அச்சுறுத்துகிறது. இன்று டாஸ்மாக் பாடலில், நாளை இன்னொன்றில், இன்னொன்றில் என்று இது தொடர்ந்து விடுமோ என்ற அச்சம் உங்களைப் பிடித்தாட்டுகிறது.
ஒருவேளை உங்களது அதிகார பலத்தைக் கொண்டு எங்களைத் தடை செய்வதில் நீங்கள் தற்காலிகமாக வெற்றி பெற்றுவிடலாம். ஆனால், மக்களுக்கு எதிராக நடந்துகொள்வதிலிருந்து உங்களை நீங்களே ஒரு போதும் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது. டாஸ்மாக் பார்களில் அ.தி.மு.க. வினரின் கொள்ளையை, மிடாசு சாராயக் கம்பெனியை, பி.ஆர்.பி. நடத்தும் கிரானைட் கொள்ளையை, வைகுந்தராஜனின் தாதுமணல் கொள்ளளையை. எதை உங்களால் நிறுத்த முடியும்? ஊழல், அதிகார முறைகேடுகளிலிருந்து உங்களைப் பிரிக்க முடியாது. பீனிக்ஸ் மாலிலிருந்து சசிகலாவை பிரிக்க முடியாது.
அது முடியாதவரை எங்களை ஒரு போதும் உங்களால் தடுக்க முடியாது. வினவு.com

கருத்துகள் இல்லை: