புதன், 18 நவம்பர், 2015

இதற்குமா புரட்சித் தலைவி இதய தெய்வம் அம்மா...நிவாரண உதவிகளை செய்வது ஒரு அரசின் கடமை..

ஜெயலலிதாவின் புகைப்படம் ஊடகங்களில் தெரிய வேண்டும் என்பதற்காக மெனக்கெட்டதைப் பார்த்த மக்கள் "எழவு வீட்டிலுமா இப்படி?" என்ற கேள்வியை எழுப்பவே செய்தனர்.
தமிழகம் வரலாறு காணாத பெருமழை வெள்ளத்தை சந்தித்துள்ளது... வட தமிழகத்தை புரட்டிப் போட்டிருப்பது பெரும் புயலும் அல்ல.. சுனாமியும் அல்ல.. வழக்கமான வடகிழக்கு பருவமழை தான்... இந்த பருவமழையைக் கூட எதிர்கொள்ள திராணியற்றதாகத்தான் தமிழக அரசு இருக்கிறது என்பது கடலூரிலேயே அம்பலப்பப்பட்டுப் போனது. 2004-ல் சுனாமி தமிழகத்தை தாக்கி ஆயிரக்கணக்கானோர் பலியாகிப் போகினர். அதனைத் தொடர்ந்து இத்தகைய இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள பேரிடர் ஆணையம் என்பது அமைக்கப்பட்டது. அவ்வளவுதான்.. அதன் கதி என்ன என்பது இப்போது வரை யாருக்கும் தெரியாது. ஒரு பருவமழையை, மழை வந்த பின்னர்தான் எதிர்கொள்ள வியூகம் வகுக்க வேண்டும் என காத்திருந்திருக்கிறது தமிழக அரசு.
புதுச்சேரியில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த நிலையில் கடலூருக்கு அருகே கரையைக் கடக்கப் போகிறது என்று வானிலை ஆய்வு மையம் கரடியாய் கத்திக் கொண்டிருந்தது. ஆனால் தமிழக அரசின் காதுகள் 'கேட்காதவையா'க இருந்துவிட்டன. கடலூரையே புரட்டிப் போட்டு சுனாமி, தானே புயலை விட கோரத்தாண்டவமாடிய நிலையில்தான் அதிகாரிகள் குழு போகிறது. அதன் பின்னரே அமைச்சர்கள் குழு போகிறது. அந்த அமைச்சர்களும் என்ன செய்யப் போகிறோம் என தெரியாமலேயே கடலூரில் முகாமிட்டு சில நாட்கள் கழித்தே ஒன்றியம் வாரியாக வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட செல்லும் கொடுமை நிகழ்ந்தது. 
அதிலும் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்திக்கும் போதெல்லாம், முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் ஊடகங்களில் தெரிய வேண்டும் என்பதற்காக மெனக்கெட்டதைப் பார்த்த மக்கள் "எழவு வீட்டிலுமா இப்படி?" என்ற கேள்வியை எழுப்பவே செய்தனர். 
வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டிய அதிகாரிகளும் கூட, அமைச்சர்களுக்கு சேவகம் செய்யத்தான் மெனக்கெட்டனரே தவிர, மக்களுக்கு உதவி செய்வதில் கிஞ்சித்தும் அக்கறை காட்டவில்லை. கடலூரில் எத்தனை பேர் உயிரிழந்தனர்? இழப்புகள் என்ன என்பது இன்னமும் உருப்படியாக வெளியானபாடில்லை. கடலூர் கதறிக் கொண்டிருக்கும்போதே சென்னையில் விடாத அடைமழை. ஒட்டுமொத்த சென்னை மாநகருமே வெள்ளத்தில் மூழ்கி ஸ்தம்பித்து போய் கிடக்கும் நிலையில் மீட்புப் பணிகளை பார்வையிட சென்ற அமைச்சர்கள், சென்னை மேயர் துரைசாமி உள்ளிட்டோர் அங்கும் 'அம்மா புராணம்' பாடியதை சகிக்கத்தான் முடியவில்லை... 
அமைச்சர் வேலுமணியும், சென்னை மேயர் துரைசாமியும் ஜெயலலிதாவின் புகழ் பாடுவதில் காட்டிய அக்கறையை ஜஸ்ட் கொஞ்சம், முன்னேற்பாடுகளில் செய்திருந்தாலே போதும்... ஆனால் எதுவுமே நடக்கவில்லை? வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்வது ஒரு அரசின் கடமை.. இதற்கு எதற்கு 'புரட்சித் தலைவி இதய தெய்வம் அம்மா' உத்தரவுப்படி இத்தனை பேருக்கு உணவுப் பொட்டலம் வழங்கினோம் என்ற தம்பட்டம்? 
அது மக்களின் வரிப்பணத்தில் வழங்கப்படுகிற நிவாரணம். அரசு கட்டாயம் இதைச் செய்தாக வேண்டும். இவர்கள் ஒன்றும் சொந்தப் பணத்தில் மக்களுக்கு பிச்சை போட்டுவிடவில்லை என்பதை நினைவில் கொண்டிருக்க வேண்டும். மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணப் பொருட்கள் பையில் கூட ஜெயலலிதா புராணம் பாடுகிற அளவுக்கு 'சுயதம்பட்டம்' வெறிபிடித்துக் கிடக்கிறது. 
 அத்தனை எதிர்க்கட்சிகளும் விமர்சனம் செய்த பின்னர் முதல்வர் ஜெயலலிதா, வேனில் போய் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டிருக்கிறார். இந்த மழைவெள்ளத்துக்கு நடுவே அனைத்து ஏரிகளும் நிரம்பி வெளியேறிவிட எதுவுமே செய்ய முடியாத கையாலாகத்தனத்துக்கு தள்ளப்படுகிறது மாநில அரசு. வெயில் உக்கிரமாக அடித்து மழை நீர் வற்றும்வரை எந்த ஒரு பகுதியில் இருந்தும் வெள்ள நீர் வடியவே வாய்ப்பில்லை, மக்கள் சகித்துக் கொண்டுதான் வாழ்ந்தாக வேண்டும் என்ற முடிவுக்கு தமிழக அரசு தள்ளிவிட்டிருக்கிறது. 
சரி மாநில அரசுதான் இப்படி எனில், தமிழகம் என்னவோ இலங்கைத் தீவின் ஒரு பகுதி போல டெல்லியில் இருக்கும் மத்திய அரசு இருக்கிறது. 
தமிழகமே தவியாய் தவிக்கிறது... பேரிடர் மீட்புக் குழு, நிவாரணங்களை பற்றியெல்லாம் பேசாமல் வாய்மூடி மவுனியாக இருக்கிறது மத்திய அரசு. 
இத்தனை பேரழிவை சந்தித்து கொண்டிருக்கிற தமிழகத்துக்கு ஆறுதலாக ஒரு மத்திய அமைச்சர் கூட வரவில்லையே? 
பருவமழை காலம் என்பது அரசுகளுக்குத் தெரியாதது அல்ல.. இத்தகைய பருவமழையை எதிர்கொள்வதற்காக ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு மழைநீர் வெளியேறும் கால்வாய்கள் பரமாரிக்கப்பட்டிருக்க வேண்டும். முகத்துவாரங்கள் சீரமைக்கப்பட்டிருக்க வேண்டும். இதுதான் பொதுப்பணித் துறையின் முதன்மை பணி. ஆனால் இந்த பணியை ஒரு துளியும் மேற்கொள்ளவில்லை.. 
இயற்கை மீது பழியைப் போட்டுவிட்டு தப்பிக்க பார்க்கிறார்கள். இப்போது ஏரிகள் நிரம்பி பலவீனமான கரைகள் உடைந்து வெள்ள நீரோடு கலந்து நிரந்தரமாக வீதிகளில் 'டேரா' போட்டிருக்கிறது. ஏரி ஆக்கிரமிப்புகளுக்கு பக்க பலமாக, உறுதுணையாக அரசுகள் இருக்கும் போது ஏரிகள் மீது இவர்களுக்கு என்ன அக்கறை வந்துவிடப் போகிறது?

Read more at: ://tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: