ஞாயிறு, 15 நவம்பர், 2015

1948-இல் 30 லட்சம் பட்ஜெட்...S.S.வாசனின் சந்திரலேகா ...725 நாட்கள் படப்பிடிப்பு..முறியடிக்கப்படாத சாதனைகள் '!


ஒரு தமிழ்ப்படத்தைத் தயாரிக்க ஆகும் மொத்த செலவு 2 லட்சம் ரூபாய் என்று இருந்த காலகட்டத்தில், 30 லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்டமாய் ஒரு படத்தைத் தயாரிக்க ஜெமினி எஸ்.எஸ்.வாசன் திட்டமிட்டார் என்றால் அவர் துணிச்சல் எப்படிப்பட்டதாக இருக்கும். படத்தை சிறப்பாக எடுத்தால், நிச்சயம் நன்றாக ஓடும் என்று அவர் உறுதியாக நம்பினார். தன் சொத்துக்களை எல்லாம் முதலீடு செய்தார். அம்மாவின் நகைகளை எல்லாம் வாங்கி விற்றார். பலரிடம் கடன் வாங்கினார். பத்து படங்களை தயாரிக்கப் போதுமான பணத்தையும், காலத்தையும் சந்திரலேகாவுக்காக செலவிட்டார்.


அவருடைய நம்பிக்கையும், கடும் உழைப்பும், வீண் போகவில்லை. 1948-ம் ஆண்டு ஏப்ரல் 9-ந் தேதி வெளிவந்த சந்திரலேகா மகத்தான வெற்றி பெற்றது. அக்காலக்கட்டத்தில், தமிழ்ப்படங்கள் 15 அல்லது 20 பிரிண்ட்கள் தான் போடப்படும். அவ்வளவு ஊர்களில் தான் படம் 'ரிலீஸ்' ஆகும். சந்திரலேகாவுக்கு 120 பிரிண்ட்கள் போடப்பட்டு, 120 ஊர்களில் 'ரிலீஸ்' ஆகியது.
'ஆங்கிலப் படங்களுக்கு நிகரான படம்' என்று பத்திரிகைகள் பாராட்டின. ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்தனர்.

ஆங்கிலப்படங்களில் 'பென்ஹர்' என்றால், பிரமாண்டமான ரதப் போட்டி நினைவுக்கு வரும். அதுபோல் சந்திரலேகா என்றால், அதில் வரும் முரசாட்டம் நம் கண்முன் தோன்றும்.

மேல்நாட்டில் சிசில்-பி-டெமிலிக்கு 'பத்துக்கட்டளைகள்' (டென் காமன் மெண்ட்ஸ்), ஜேம்ஸ் கேமரோனுக்கு 'டைட்டானிக்', ஸ்டீபன் ஸ்பெல்பர்க்குக்கு 'ஜூராசிக் பார்க்' என்பது போல், எஸ்.எஸ்.வாசனுக்கு 'சந்திரலேகா'.

'சந்திரலேகா'வில் நடனக்காட்சியில்  டி.ஆர்.ராஜகுமாரி.


அதிசயம்-அற்புதம்

சந்திரலேகாவைப் பார்க்காதவர்கள் தமிழ்நாட்டில் அநேகமாக இருக்க மாட்டார்கள்.

எம்.கே.ராதா, ரஞ்சன், டி.ஆர்.ராஜகுமாரி ஆகிய மூவரை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை. எல்லோருமே நன்கு நடித்தனர். குறிப்பாக டி.ஆர்.ராஜகுமாரி அவர் வாழ்நாளில் இவ்வளவு சிறப்பாக வேறு எந்தப்படத்திலும் நடிக்கவில்லை.

சந்திரலேகாவில் அமைந்த அதிசயங்களும் அற்புதங்களும் அநேகம்.

* 'சந்திரலேகா' என்ற கனமான பாத்திரத்தை டி.ஆர்.ராஜகுமாரி தாங்கி சிறப்பாக நடித்திருந்தார். தவிர தன் சொந்தக்குரலில் பாடியுள்ளார்.

* பிரமாண்டமான இந்த திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சுமார் இருபது வயது நிரம்பிய இளைஞர் எஸ்.ஆர்.ராஜேஸ்வர ராவ்.

வாசன் குரல்

* இந்தப் படத்தின் சர்க்கஸ் காட்சியில் வாசன் தன் சொந்தக் குரலிலேயே சந்திரலேகாவை மக்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார்.

'...கூடாரத்திலே அறுபதடி உயரம் கொண்ட கம்பத்தின் உச்சியிலே அந்தரமாய்த் தொங்கும் கயிற்று ஊஞ்சலிலே உலகத்திலே முதல் தடவையாக ஒரு பெண் அநாயாசமாக தாவிப் பறந்து விளையாடுகிறாள். இந்த அற்புத சாகசத்தை செய்யப் போகிறவர் எங்களது புதுபெண் திலகம் சந்திரலேகா'.

இப்படி சர்க்கஸ் கூடாரத்தின் உள்அமைந்த ஒலிபெருக்கியில் கணீரென்றும் ஒலிக்கும் குரல் எஸ்.எஸ்.வாசன் அவர்களுடையதே.

* இப்படத்தில் நடிகை வி.என்.ஜானகி (பிற்காலத்தில் எம்.ஜி.ஆரின் மனைவி) ஒரு ஜிப்சி பெண்ணாக நடித்துள்ளார்.

* பின்னாளில் நகைச்சுவை நட்சத்திரமாக விளங்கிய

டி.பி.முத்துலட்சுமி முதலில் தோன்றியது இந்தப்படத்தில்தான். முரசு நடன மாதுக்களில் ஒருவராக அவர் முரசு நடனக்காட்சியில் பங்கேற்றுள்ளார்.

'சந்திரலேகா'வில் 'ஜிப்சி' நடனம். நடுவில் இருப்பவர் வி.என்.ஜானகி.

















* பட உருவாக்கத்தில் உள்ளடங்கிய ஆச்சரியமான விவரங்கள்:

1)     கதை, திரைக்கதை, வசனம் ஆகியவை எழுதி முடிக்க எடுத்துக் கொண்டது 1,29,600 மணி நேரம்.

725 நாட்கள் படப்பிடிப்பு


2) படப்பிடிப்புக்காக எடுத்துக் கொண்ட நாட்கள் (ஒரு நாளைக்கு 12 மணி நேர வேலை என்ற கணக்கில்) 725 நாட்கள்.

3) நிகழ்விடங்களாக காட்சியில் காட்ட போடப்பட்ட செட்டுக்கள் கலை வேலைப்பாடுகளோடு தோற்றமளிக்க தேக்கு மரமும் ரோஸ்வுட் மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டது.

4) சாங்கன் முன் சந்திரலேகா நடனமாடும் அரண்மனை செட்டுக்கு மட்டும் ரூ.75 ஆயிரம் செலவழிக்கப்பட்டது. (எல்லா செலவீனங்களும் 1948-ம் ஆண்டின் கணக்குப்படி என்பதை நினைவில் கொள்ள வேண்டும்) ஆர்ட் டைரக்டர் ஏ.கே. சேகரின் தனித்தன்மையும், கை வண்ணமும் படம் முழுவதும் பரவிக்கிடந்தது.

'சந்திரலேகா'வில் இடம் பெற்ற பிரமாண்டமான முரசாட்டம்.


5)     படத்திற்காக பளு தூக்கிகள், உயர்ந்த பெரிய டிரம்ஸ், நூற்றுக்கணக்கான குதிரைகள், ஆயிரக்கணக்கான போர் வீரர்கள் என்று போர்க் காட்சிகள் மற்றும் நடனக் காட்சிகளுக்காக உபயோகப்படுத்தப்பட்டது. இது தவிர ஜெமினியைச் சார்ந்த 100 வாலிபர்களும், 500 பெண்களும் படத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தனர்.

முரசாட்டத்துக்கு 2 வருடம்

6) படத்தின் உயிர் மூச்சான முரசு நடனக்காட்சி ஒரு திரைப்பட அற்புதம். இதை சிருஷ்டிக்க ஜெமினி நிறுவனம் இரண்டு வருடங்கள் எடுத்துக் கொண்டது. முரசு நடனத்தை எந்த வகையில் சிறப்பாக உருவாக்குவது என்பது ஜெமினியின் கடுமையான பணியாகயிருந்தது. ஆர்ட் டைரக்டர் ஏ.கே.சேகர் தன் திறமையெல்லாம் கொட்டி எண்ணற்ற சித்திரங்கள் தீட்டிப்பார்த்தும் திருப்தியில்லை. ஜெமினியின் தயாரிப்புப் பிரிவில் தலைமையேற்றிருந்த கே.ராம்நாத் ஒரு அற்புதமான யோசனையை வெளியிட்டார். 'முதல் முதலாக நூறு சிறு பொம்மை முரசுகள் செய்து அவற்றை நாம் பல்வேறு வகைகளில் மாற்றி அமைத்து பலப்பல கோணங்களில் படம் பிடித்துப் பார்ப்போம். அதில் சிறந்ததைத் தேர்ந்தெடுத்தால் வேலை சுலபமாக முடிந்துவிடும்' என்று கூறினார். அவ்வகையில் முரசுக் காட்சி வடிவமைக்கப்பட்டு காட்சி படம் பிடிக்கப்பட்டது. இந்த ஒரு காட்சியை மட்டும் படம்பிடிக்க ஜெமினிக்கு நூறு நாட்கள் பிடித்தது!

7)     படப்பிடிப்புத் தளங்களில் போர் புரியும் காட்சிகளில் ரஞ்சனுக்கு காயங்கள் ஏற்பட்டது. எம்.கே.ராதா தன் சாமர்த்தியத்தால் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவமும் உண்டு.

8)     சர்க்கஸ் காட்சியை படம்பிடிக்க கமலா சர்க்கஸ், பரசுராம் லயன் சர்க்கஸ் என்ற இரண்டு சர்க்கஸ் கம்பெனிகளை ஜெமினி ஒரு மாத காலத்துக்கு ஒப்பந்தம் செய்து கொண்டது. மேலும் இச்சர்க்கஸ் கம்பெனியாளர்கள் மிருகங்கள் உள்பட அனைவரும் ஜெமினி ஸ்டூடியோவிலேயே தங்கிக் கொண்டனர். சர்க்கஸ் காரர்களுக்கும், சர்க்கஸ் மிருகங்களுக்கும் ஆகும் உணவுச் செலவையும் ஜெமினி ஸ்டூடியோவே ஏற்றிருந்தது. இதற்காக நாளன்றுக்கு இரண்டாயிரம் ரூபாய் செலவழிக்கப்பட்டது.

9)     புரடெக்ஷன் டைரக்டர் கே.ராம்நாத் தன் உயிரைபணையம் வைத்து மரத்தின் உச்சிக்கும், மாடியின் உச்சிக்கும் போய் கோணங்களை சரிபார்த்தார்.

10)     படத்தில் சந்திரலேகா பாரம்பரிய புடவையிலிருந்து, ஜிப்ஸி உடை, சர்க்கஸ் உடை என்று 19 உடைகளில் தோன்றினார். அக்கால திரை உலக அதிசயமிது.

11)     படப்பிடிப்பிற்குத் தகுதியான இடங்களை தேர்வு செய்வதற்காக, காரிலும் ரெயிலிலும் சுமார் 40 ஆயிரம் மைல்கள் பயணம் செய்யப்பட்டது.
இந்தியில் 'சந்திரலேகா'

இந்திப்பட விநியோகஸ்தர் தாராசந்த், படத்தின் பிரமாண்டத்தைக் கண்டு மலைத்துப் போனார். பின் தாராசந்த் யோசனையின் பேரில் சந்திரலேகாவை இந்தியில் மொழி மாற்றம் செய்ய வாசன் முடிவு செய்தார். இந்தியிலும் டி.ஆர்.ராஜகுமாரி, எம்.கே.ராதா, ரஞ்சன் ஆகியோர் நடித்தனர்.

குளோசப் காட்சிகளில் அவர்களை இந்தியில் பேசவைத்து பொருத்தமான பிறரது குரலை பதிவு செய்து 'டப்பிங்' முறையில் காட்சிகள் இணைக்கப்பட்டன.

தமிழ்ப் படத்திலிருந்த என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் காமெடிக் காட்சிகள் நீக்கப்பட்டு, இந்தி காமெடி நடிகர் ஆகாவை வைத்து, அக்காட்சிகள் மீண்டும் எடுக்கப்பட்டன.

பார்ப்பதற்கு அசல் இந்திப்படம் போல் இருந்ததே தவிர, 'டப்பிங்' படம் போல் தோன்றவில்லை.

விளம்பரம்

அதுவரை இந்திப்படங்களுக்கு போஸ்டர் மட்டுமே அடிக்கப்பட்டன. பேனர்கள், ‘கட்அவுட்'கள் வைக்கப்படுவதில்லை.

அக்காலத்தில் பேனர்கள் வரைவதில் பிரபலமாக இருந்த 'பாலு பிரதர்ஸ்' என்ற ஓவிய சகோதரர்களை வாசன் மும்பைக்கு அழைத்துச் சென்று, முக்கிய இடங்களில் எல்லாம் சந்திரலேகாவின் பிரமாண்டமான பேனர்களை அமைத்தார். இந்த பேனர்களைக் கண்ட மும்பை வாசிகள் மலைத்து போனார்கள்.

தவிர 'டைம்ஸ் ஆப் இந்தியா' போன்ற பிரபல நாளிதழ்களில் 'சந்திரலேகா' வின் முழுப்பக்க விளம்பரங்கள் தினமும் வெளியாயின.

'சந்திரலேகா'வில் எம்.கே.ராதா-ரஞ்சன் அனல் பறக்கும் கத்திச்சண்டை.

மும்பை நகரிலும், வடநாட்டின் இதர நகரங்களிலும் 'சந்திரலேகா' பற்றியே பேச்சு.

பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான சந்திரலேகா, மகத்தான வெற்றி பெற்றது. திரையிடப்பட்ட இடங்களில் எல்லாம் வசூல் மழை பொழிந்தது.

தமிழ் 'சந்திரலேகா' வெற்றிப் படம் என்றாலும், அதற்கான செலவு 30 லட்சம் என்பதாலும் கடனுக்கு நிறைய வட்டி செலுத்த வேண்டியிருந்ததாலும் படப்பிடிப்பு பல ஆண்டுகள் நீடித்ததாலும் பெரிய லாபம் இல்லை. ஆனால் இந்தி சந்திரலேகாவினால், வாசன் கோடிக்கணக்கில் லாபம் அடைந்தார்.

சந்திரலேகா ஆங்கில துணைத்தலைப்புகளுடன் (சப் டைட்டில்) மேல் நாடுகளில் திரையிடப்பட்டது.

முதன்முதலாக தமிழ் நாட்டில் இந்திப்படம் தயாரித்து, வடநாட்டில் பெறும் வெற்றி பெற்றவர் எஸ்.எஸ். வாசன்தான்.

இதற்கு அடுத்தபடி, எம்.கே.ராதா இரட்டை வேடத்தில் நடிக்க தமிழில் 'அபூர்வ சகோதரர்கள்' படத்தை எடுத்தார், எஸ்.எஸ்.வாசன். அந்தப் படமும் பெரும் வெற்றி பெற்றது. பிறகு அந்தப்படத்தை, 'நிஷான்' என்ற பெயரில் இந்தியில் எடுத்தார். இதில், எம்.கே.ராதாவுக்கு பதிலாக ரஞ்சன் கதாநாயகனாக நடித்தார். இந்தப்படமும் பிரமாண்ட வெற்றி பெற்றதுடன், ரஞ்சனுக்கு தொடர்ந்து இந்திப்படங்களில் நடிக்க மார்க்கெட்டை தேடித்தந்தது. dailythanthi.com

கருத்துகள் இல்லை: