சனி, 21 நவம்பர், 2015

லாலுவின் 26 வயது மகன் தேஜஸ்வி துணை முதல்வர் அடுத்த மகனும் அமைச்சர்..

பாட்னா: பீஹார் மாநில முதல்வராக, 5வது முறையாக, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் நேற்று பதவியேற்றார். அவருடன், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவின், இரு மகன்கள் உட்பட, 28 பேர், அமைச்சர்களாக பதவியேற்றனர். பீஹார் மாநிலத்தில், சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 243 தொகுதிகளில், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடம்பெற்ற, 'மெகா' கூட்டணி, 178 தொகுதிகளை கைப்பற்றியது. இதையடுத்து, தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில், நிதிஷ் குமார் தலைமையிலான புதிய அரசின் பதவியேற்பு விழா, கோலாகலமாக நேற்று நடைபெற்றது.
இதில், நிதிஷ் குமார், ஐந்தாவது முறையாக பீஹார் முதல்வராக பதவி ஏற்றார். அவருக்கு, கவர்னர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதையடுத்து, 28 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களில், தலா, 12 பேர், ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்; நான்கு பேர் காங்கிரசார். பீஹார் சட்டசபை தேர்தலில், முதன் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற, லாலு பிரசாத்தின் இரு மகன்களான தேஜஸ்வி, தேஜ் பிரதாப் ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றனர். இருவரில், 26 வயதான தேஜஸ்விக்கு, துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. நிதிஷ் அமைச்சரவையில், இம்முறை புதுமுகங்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளனர்; அத்துடன் நிதிஷ் மற்றும் லாலு கட்சிகளைச் சேர்ந்த இரு பெண்களுக்கும், அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

பதவியேற்பு விழாவில், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இமாச்சல் முதல்வர் வீர்பத்ர சிங், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் பிரதமர் தேவ கவுடா, காங்., துணைத் தலைவர் ராகுல், மார்க்சிஸ்ட் கம்யூ., பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூ., தேசிய செயலர் டி.ராஜா, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். அரசியல் சட்ட விதிகளின் படி, பீஹார் சட்டசபை மொத்த உறுப்பினர்களில், 15 சதவீதம் பேரை அமைச்சர்களாக நியமிக்கலாம். அதன்படி, 34 பேர் அமைச்சர்களாகலாம். ஆனால், 28 பேர் தான், அமைச்சர்களாக நேற்று பதவியேற்று உள்ளனர். 
கிரிக்கெட் - டூ - துணை முதல்வர் :
பீஹார் துணை முதல்வரான தேஜஸ்வி பிரசாத், 1989 நவ., 8ல், பாட்னாவில் பிறந்தார். லாலு - ரப்ரிதேவி தம்பதியின் ஒன்பது பிள்ளைகளில் (ஏழு மகள்கள், இரு மகன்கள்), இவர் தான் கடைக்குட்டி. டில்லியில் பள்ளி கல்வி முடித்த தேஜஸ்வி, கிரிக்கெட்டில் ஆர்வமுள்ளவர். ரஞ்சிக்கோப்பை போட்டிகளில், ஜார்க்கண்ட் அணிக்காக விளையாடியுள்ளார். 'ஆல் ரவுண்டரான' இவர், 'பிரிமியர்' தொடரில் டில்லி அணிக்கு தேர்வானார். 2008 - 12 வரைஅணியில் இருந்தும், ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 
ரசியல் அனுபவம்:
லாலுவின் அரசியல் வாரிசான தேஜஸ்வி, 2010 பீகார் சட்டசபை தேர்தல், 2014 லோக்சபா தேர்தலில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்காக பிரசாரம் செய்தார். நடந்து முடிந்த பீஹார் சட்டசபை தேர்தலில், ராக்கோபூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 
லாலுவின் மற்றொரு மகன் திணறல்:
லாலுவின் மற்றொரு மகனான தேஜ் பிரதாப், அமைச்சராக பதவிப் பிரமாணம் எடுத்த போது, கவர்னரின் உச்சரிப்பை திரும்பச் சொல்வதற்கு இரண்டு முறை தடுமாறினார்.ஆங்கிலத்தில், 'எதிர்பார்ப்பு' என்பதை, 'புறக்கணிப்பு' என, நேர்மாறாக உச்சரித்தார். அதைக் கவனித்த கவர்னர் மீண்டும் சரியாக உச்சரிக்கச் சொன்னார். அதே போல், 'எப்போது' என்பதை, 'அப்போது' எனக் கூறினார். கவர்னர், மீண்டும் அதை திருத்தி படிக்கச் சொன்னார். தேஜ் பிரதாப், 'பிளஸ் 2'க்கு நிகராக கருதப்படும், 'இன்டர்மீடியட்' வரை படித்துள்ளார். 
மக்களின் முதல்வர் :
பீஹார் மக்களின் இதயம் கவர்ந்த நிதிஷ் குமார், ஐந்தாவது முறையாக முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.கடந்த, 1951 மார்ச் 1ல், பாட்னா அருகேயுள்ள பக்டியாபூரில், வசதியான குடும்பத்தில் பிறந்த நிதிஷ் குமார், பீஹார் இன்ஜினியரிங் கல்லுாரியில் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் படித்தார். பின், அம்மாநில மின்வாரிய பணியில் சேர்ந்தார். 1973ல், மஞ்சுகுமாரி சின்ஹாவை மணந்தார்; பின், வேலையை உதறிவிட்டு அரசியலில் நுழைந்தார். நெருக்கடி நிலையை எதிர்த்து, ஜெயப்பிரகாஷ் நாராயண் நடத்திய போராட்டத்தால் கவரப்பட்டு தன்னை இணைத்துக் கொண்டார்.1985ல், பீகார் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, சுயேச்சை எம்.எல்.ஏ.,வாக தேர்வானார். 1987ல், 'யுவ லோக் தளம்' கட்சியின் தலைவரானார். 1989ல், பீஹார் ஜனதா தள பொதுச் செயலராக இருந்தார். 1989ல், பர்க் லோக்சபா தொகுதியில் இருந்து முதன்முறையாக எம்.பி.,யான அவர், 1999 வரை, அத்தொகுதி எம்.பி.,யாக பதவி வகித்தார். கடந்த, 1989 - 90ல், வி.பி.சிங் அமைச்சரவையில் விவசாயத்துறை அமைச்சராக இருந்தார். 1994 வரை, லாலு பிரசாத் யாதவுடன் இணைந்து அரசியல் செய்தார். 1994ல், ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடன் இணைந்து சமதா கட்சியை துவக்கினார். 1998 - 99 வரை, வாஜ்பாய் அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராக பணியாற்றினார்.இவரது காலத்தில் தான் ரயில்வே துறையில், 'இன்டெர்நெட் புக்கிங்' மற்றும் தட்கல் டிக்கெட் அறிமுகம் போன்ற சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. அரியலுார் ரயில் விபத்தின் சோகம் உணர்ந்து, தன் ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த லால் பகதுார் சாஸ்திரி போல், 1999ல் ஏற்பட்ட, 'கெய்சால்' ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்தார்.

கடந்த, 2000ம் ஆண்டில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி சார்பில் நிதிஷ் குமார் முதன் முறையாக முதல்வரானார். பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், ஏழு நாட்களில் பதவியை இழந்தார். லாலு பிரசாத் மெஜாரிட்டியை நிரூபித்தார்; அவரது மனைவி முதல்வரானார். பின், 2005ல், தே.ஜ., கூட்டணி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்தது; நிதிஷ் முதல்வரானார். 2010ல், மீண்டும் ஆட்சியை பிடித்து, 3வது முறையாக நிதிஷ் முதல்வரானார். இவரது ஆட்சிக்காலத்தில், பீஹாரில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நிறைவேற்றப்பட்டன. மோடி பகை:
கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், தே.ஜ., கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதையும் மீறி மோடி அறிவிக்கப்பட்டதால், பா.ஜ., உடனான, 17 ஆண்டுகால கூட்டணியை முறித்தார். தொடர்ந்து நடந்த லோக்சபா தேர்தலில், பீஹாரில் பா.ஜ., அமோக வெற்றி பெற்றது; ஐக்கிய ஜனதா தளம் தோல்வி அடைந்தது. இத்தோல்விக்கு பொறுப்பேற்ற நிதிஷ், 2014 மே 17ல், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.இடைப்பட்ட காலத்தில் ஜிதன்ராம் மஞ்சி முதல்வராக இருந்தார். மீண்டும், 2015 பிப்., 22ல் நதிஷ் முதல்வரானார். சட்டசபை தேர்தலில் லாலு பிரசாத் மற்றும் காங்கிரசுடன், 'மெகா' கூட்டணி அமைத்தார். பா.ஜ.,வுக்கு எதிரான இக்கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, ஐந்தாவது முறையாக பீஹார் முதல்வராகி உள்ளார்.  தினமலர்.com

கருத்துகள் இல்லை: