செவ்வாய், 17 நவம்பர், 2015

சிங்கப்பூர் ஆக்குவோம் என்றவர்கள் மீண்டும் ஓய்வெடுக்க போய்விட்டார்கள்...

கழிவுநீர் கலக்காத கால்வாய் கட்டி, மழைநீரை சேகரித்தால் மட்டுமே, மழை வெள்ள பிரச்னைக்கு முடிவு கட்ட முடியும்' என, மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.ல் பக்கத்தில் வெளியிட்டு உள்ள தகவல் வருமாறு:தமிழகத்தில், 2005ல், 130 செ.மீ., மழை பெய்தது. அது, தமிழகத்தின் ஆண்டு சராசரியான, 95 செ.மீட்டரை விட, 36.1 சதவீதம் அதிகம். சென்னையில் மட்டும், 235 செ.மீ.,மழை பெய்தது. அப்போது மிகப் பெரிய பொருள் சேதமும், உயிர் சேதமும் ஏற்பட்டது. அது மட்டுமல்ல, அனைத்து மழைநீரும் கடலில் கலந்து விட்டது.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு:
இதையடுத்து, 'தமிழக நதிகளை இணைக்க வேண்டும்; தமிழகத்தில், அதிதிறன் நீர் வழிச்சாலை அமைக்க வேண்டும்' என, சென்னை கவர்னர் மாளிகையில், அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியிடம், அப்துல் கலாமும், அவரோடு நானும், அதிதிறன் நீர் வழிச்சாலை அமைப்பதன் தேவையை பற்றி ஆய்வறிக்கை சமர்ப்பித்தோம்.அடுத்த வந்த முதல்வர் ஜெயலலிதாவிடமும் இதை தொடர்ந்து வலியுறுத்தினோம். ஆனால், இதுவரை நதிகளை இணைக்க வில்லை, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்கவில்லை. அதிதிறன் நீர் வழிச்சாலையை உருவாக்கவில்லை.தற்போது, 10 ஆண்டுகள் கழித்து, 2015ல் பெய்த, 15 செ.மீ., மழைக்கு தாங்காத சென்னையும், மிதக்கும் கடலுாரும் தான், நம் ஆட்சி முறை நிர்வாகத்தின் அடையாளமாக திகழ்கிறது.


11 நாட்களில், சென்னை, கடலுார் உள்ளிட்ட, 20 மாவட்டங்களில் கனமழை பெய்து, தமிழகத்திற்கு நீரை அள்ளிக் கொடுத்திருக்கிறது. ஆனால், 'மழையால், இயல்பு வாழ்க்கை பாதிப்பு' என, செய்திகள் வருகின்றன.பத்து ஆண்டுகளில், தற்போது தான் அதிக பட்சமாக, சென்னையில், 15 செ.மீ., மழை பெய்துள்ளது. சென்னையில், 11 நாட்களில், சராசரியாக, 40 செ.மீ., மழை பெய்துள்ளது. தமிழகத்தில் சராசரி மழை அளவு, 95 செ.மீ.,ஆகும். ஆனால், 15 - 20 செ.மீ., சராசரி மழைக்கே நம் சாலைகள் தாங்கவில்லை; ஏரிகள் உடைகின்றன; வயல்வெளிகள் நாசமாகின்றன. ஏராளமான பொருள் சேதம், உயிர் சேதம்; வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து, மக்கள் தெருவுக்கு வந்துவிட்டனர். பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன. ஒன்றுமே இல்லாத இந்த குறைந்த மழைக்கு இத்தனை பாதிப்பா?

ஏன் இந்த நிலை என்றால், மழைநீரை சேகரித்து, ஏரிகளுக்கு கொண்டு செல்ல சரியான கட்டமைப்பு நம் மாநிலத்தில் இல்லை. ஏரிகள், குளங்கள், மக்களாலும், அரசாலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. நீர்நிலைகள் துார்வாரப்படவில்லை. இது ஒன்றும், 'ராக்கெட் சயின்ஸ்' இல்லை. ராக்கெட்டை கட்டமைக்க தெரிந்த, இந்தியாவிற்கு சாக்கடையை கட்டமைக்க முடியாதா; முடியும்.ஆனால், லஞ்சம், ஊழலற்ற, தைரியமான அரசியல் தலைமையால் மட்டும் தான் இது சாத்தியம். தண்ணீர் புரட்சி ஒன்று தான், தமிழகத்தை மலர்ச்சி பெற செய்யும்.

சிங்கப்பூரில் எப்படி? சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் ;மழைநீர் சேகரிப்பு எப்படி செயல்படுகிறது, வீட்டில் இருந்து மழைநீர் சேகரிக்கப்பட்டு, தெருவிலுள்ளகால்வாயில் எப்படி கலக்கிறது, அந்த கால்வாயில் இருந்து ஏரிகள், குளங்களில் நீர் எவ்வாறு கலக்கிறது என்பதை இங்குள்ளவர்கள் அறிய வேண்டும். கழிவுநீர் கலக்காத மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அங்கு எவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதையும் அறிய வேண்டும்.

இது, தமிழக உள்ளாட்சிகளில் செயல்படுத்த முடியாதது என்றில்லை. ஆனால், 'சிங்கப்பூர் ஆக்குவேன்' என்ற கோஷங்களை கேட்டு, கேட்டு ஓய்ந்து விட்டோம். உண்மையில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை, சிங்கப்பூர் போல் உருவாக்கி காட்டுவோர், இனி, கவுன்சிலராக, எம்.எல்.ஏ., - எம்.பி.,யாக வரட்டும். அதை மக்கள் உறுதி செய்தால் மட்டுமே, தமிழக தண்ணீர் பிரச்னைக்கு விடிவு காலம் பிறக்கும்.இவ்வாறு பொன்ராஜ் முகநுாலில் கூறிஉள்ளார்.

- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை: