புதன், 18 நவம்பர், 2015

ஐ எஸ் ஐ எஸ் பயங்கரவாதிகளுக்கு எங்கிருந்து பணம் வருகிறது?



  பாரிஸில் தங்கள் அமைப்புதான் 129 பேர் கொல்லப்பட்ட தாக்குதல்களை நடத்தியது என்று இஸ்லாமிய அரசு என்ற தீவிரவாத அமைப்பு கூறியிருக்கிறது.
இந்த ஐ.எஸ் அமைப்புக்கு எங்கிருந்து பணம் வருகிறது?
வெள்ளிக்கிழமை நடந்த பாரிஸ் தாக்குதல்களை அடுத்து மீண்டும் ஒருமுறை உலகின் கவனம் இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக் கொள்ளும்
ஐ.எஸ் அமைப்பின் மேல் வந்திருக்கிறது.
இந்த அமைப்பின் தீவிரவாதிகள் பாரிஸ் தாக்குதல்களைத் தாங்கள்தாம் செய்தோம் என்று கூறியிருக்கிறார்கள்.
உலகின் மிகப் பணக்கார தீவிரவாதக்குழுவாக இஸ்லாமிய அரசு குழு கருதப்படுகிறது.
இது இராக்கிலும், சிரியாவிலும் அது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலப்பரப்பில் ஒரு "கேலிஃபேட்" ( இஸ்லாமியப் புனித அரசு) ஆட்சியை நடத்துவதாக கூறிக்கொள்கிறது.
ஆனால் இந்த அமைப்புக்குப் பணம் எங்கிருந்து வருகிறது ?

1.நன்கொடைகள்

குறிப்பாக சௌதி அரேபியா மற்றும் கத்தார் போன்ற நாடுகளிலும் பிற நாடுகளிலும் உள்ள செல்வந்த தனி நபர்களும், இஸ்லாமிய தர்மஸ்தாபனங்களும்தான் இந்த அமைப்புக்கு முக்கிய கொடையாளிகளாக இருந்தனர்.

இந்த சுன்னி கொடையாளிகள் சிரியாவின் அதிபர் அசாத்தை பதவியிலிருந்து இறக்கவே இந்த பணத்தைத் தந்து வந்தனர். அசாத் இஸ்லாமின் அலாவைட் பிரிவைச் சேர்ந்தவர்.
ஆனால் இந்த வகையில் கிடைக்கும் பணம் இன்னும் சிரியாவுக்கும், இராக்குக்கும் செல்லும் வெளிநாட்டுப் போராளிகளின் பயணத்துக்கே உதவுகிறது; மற்றபடி இந்த அமைப்பு தனது நிதி ஆதாரங்களை வைத்தே பெரும்பாலும் செயல்படுகிறது.

2. எண்ணெய்


கடந்த 2014ல் மட்டும் ஐ.எஸ் வாரமொன்றுக்கு பல மிலியன் டாலர்கள் வரை சம்பாதித்திருக்கும் என்று அமெரிக்க நிதித்துறை கணிப்பிடுகிறது. மொத்தம் சுமார் 100 மிலியன் டாலர்கள் அது ஈட்டியிருக்கலாம் என்று அது கருதுகிறது. இந்த வருமானம் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பல பொருட்களை உள்ளூர் தரகர்களுக்கு விற்றதிலேயே அதற்குக் கிடைத்திருக்கும். இதை அந்த தரகர்கள் துருக்கி, இரான் அல்லது சிரியா அரசுக்குக் கடத்தி விற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஆனால் எண்ணெய் தொடர்பான கட்டமைப்பு நிலைகள்மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல்கள் இப்போது இது போன்ற வருவாயைக் குறைத்திருக்கும் என்று நம்பப்படுகிறது.

3.ஆட்கடத்தல்கள்

2014ம் ஆண்டில் ஆட்கடத்தல்கள் மட்டுமே இந்த அமைப்புக்கு சுமார் 20 மிலியன் டாலர்கள் பெற்றுத் தந்தன.
"உளவு அமைப்பு" என்று பெயரிடப்பட்ட ஐ.எஸ் அமைப்பின் ஒரு துறையே இந்த கடத்தல் வேலைகளைச் செய்வதற்காகவென்று இருக்கிறது என்று ஐ.எஸ். அமைப்பிலிருந்து வெளிவந்த ஒருவர் கூறுகிறார். அது சிரியாவின் எல்லைக்குள் வெளிநாட்டு செய்தியாளர்கள் கால் வைத்ததுமே அவர்களை இலக்கு வைக்கிறது.
இந்த ஆட்கடத்தல்கள் மூலம் பணம் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், ஐ.எஸ் அமைப்புக்கு இது ஒரு நல்ல பிரசாரக் கருவியாகவும் அமைகிறது.

 
இஸ்லாமிய அரசால் கடத்தப்பட்டவர்கள் : ( இடமிருந்து கடிகார சுழற்சி முறையில்) ஜேம்ஸ் ஃபோலி, அப்துல் ரஹ்மான் பீட்டர் கேஸிக்,ஆலன் ஹென்னிங்,கென்சி கொட்டோ, ஸ்டீவன் சோட்லோஃப்

4. கொள்ளை, சூறையாடல் மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல்

ஐ.எஸ் அமைப்பு, தனது முழுமையான அல்லது பகுதிக் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் வசிக்கும் பல லட்சக்கணக்கான மக்களை மிரட்டி, மாதமொன்றுக்கு பல மிலியன் டாலர்கள் சம்பாதிக்கிறது என்று அமெரிக்க நிதித்துறை கூறுகிறது.
அதன் கட்டுப்பாட்டுப் பகுதிகளின் மூலம் செல்பவர்கள், அல்லது அதில் ஏதாவது வேலை செய்பவர்கள், அல்லது அங்கு வசிப்பவர்களுக்கு "சேவைகள்" அல்லது "பாதுகாப்பு" வழங்குவது போன்றவை மூலம் இந்த மாதிரி பண வசூல் நடக்கிறது.
வங்கிகளைக் கொள்ளையடித்தல், சூறையாடல், புராதனப் பொருட்களை விற்றல் மற்றும் கால்நடைகள் மற்றும் பயிர்களைத் திருடுதல் அல்லது அவைகள் விற்கப்படுவதைக் கட்டுப்படுத்துவது போன்றவை மூலமாகவும் ஐ.எஸ் லாபமீட்டுகிறது.

5.மதச் சிறுபான்மையினர் மீது வரி

மதச் சிறுபான்மையினர் மீது "ஜிஸ்யா" என்ற சிறப்பு வரியை இந்த அமைப்பு விதித்து, அவர்களைக் கட்டாயமாகப் பணம் தரவைக்கிறது.
கடந்த ஆண்டு இராக்கிய நகரான மோசுல் நகரில் உள்ள பள்ளிவாசல்களில் ஒரு அறிவிப்பை ஐ.எஸ் வெளியிட்டது.
அந்த அறிவிப்பில், அனைத்து கிறித்தவர்களும் மதம் மாறவேண்டும், அல்லது ஜிஸியா என்ற சிறப்பு வரியைச் செலுத்த வேண்டும் அல்லது அவர்கள் அந்த நகரை விட்டு வெளியேறாமல் இருந்தால் அவர்களுக்கு மரண தண்டனை கிடைக்கும் என்று கூறியது.
"நாங்கள் அவர்களுக்கு மூன்று வழிகளை முன்வைக்கிறோம் - இஸ்லாத்துக்கு மாறுவது; திம்மா ஒப்பந்தம் ( அதாவது ஜிஸ்யா வரி கட்டுவது), இவை இரண்டில் ஒன்றைச் செய்ய மறுத்தால் அவர்களுக்கு எங்கள் கத்தி தவிர வேறொன்றும் கிடைக்காது" என்று அந்த அறிவிப்பு கூறியது.

6.அடிமை வியாபாரம்

கடத்தப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் அடிமைகளாக விற்றும் இஸ்லாமிய அரசு பணம் சம்பாதித்தது.

 
அடிமை வியாபரத்தில் பெண்கள் விற்பனை மூலம் இஸ்லாமிய அரசு பணம் சம்பாதித்தது
வட இராக்கில் சிஞ்சார் நகரை இஸ்லாமிய அரசு அமைப்பு கைப்பற்றியபோது, யாஸிதி மதச்சிறுபான்மையர் சமூகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் சிறுமிகளை அது சிறைப்பிடித்து, பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்தியது.
ஹன்னான் என்ற ஒரு யாஸிதி பெண் ஐ.எஸ் அமைப்பிலிருந்து தப்பியதாகக் கூறினார். பிபிசியிடம் பேசிய அவர், அவரையும் மேலும் 200 பெண்களையும், அடிமை சந்தைக்கு எடுத்துச் சென்று ஐ.எஸ் அமைப்பினர் , ஐ.எஸ் போராளிகள் தமக்குப் பிடித்தவர்களை வாங்கிக்கொள்ள வைத்ததாகக் கூறினார். bbc.tamil.com

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

இராக்கில் சதாம் இருக்கும் வரை எந்த அமைப்பும் உருவாக வில்லை.
இந்த அமைப்பு இஸ்லாமியர் போது எதிர் நாடு இஸ்ரேயல் தாக்குதல் நடத்தவில்லை. இதனை உருவாகியது யார் ? (அமெரிக்க இல்லையா ? )
இவர்கள் கொள்ளுவது அதிகமாக முஸ்லிம் மக்களை ...