செவ்வாய், 3 மார்ச், 2026

சங்கீதாவுக்கு எதிராக ஆபாச விமர்சனங்கள்.. விஜய் மவுனம்..ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம்

 மின்னம்பலம் - Mathi : விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ள சங்கீதாவை தவெக தொண்டர்கள் ஆபாசமாக இழிவுபடுத்தி வருவதை அவரது கணவரும் தவெக தலைவருமான விஜய் கண்டிக்காமல் மவுனமாக இருப்பதற்கு ஜனநாயக மாதர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாடு தலைவர் ஜி.பிரமிளா, பொதுச் செயலாளர் அ.ராதிகா ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: திரைப்பட நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி, பொது வாழ்வில் நேரடியாக செயல்பட்டு வருகிறார். இந்தச் சூழலில், விஜய்யின் இணையர் சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில், விஜயிடமிருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருப்பது ஒரு தனிப்பட்ட சட்ட நடைமுறை ஆகும்.



ஆபாச விமர்சனம்

அது இரு நபர்களுக்கும், நீதிமன்றத்திற்கும் உரிய விஷயமே தவிர, அதை சமூக வலைதளங்களில் இழிவுபடுத்தி, ஆபாசமாக விவாதிக்கும் உரிமை யாருக்கும் இல்லை.

ஆனால், விஜய்யின் பெயரைச் சொல்லிக் கொண்டு இயங்கும் அக் கட்சியின் தொண்டர்கள் சமூக வலைதளங்களில் சங்கீதாவை குறிவைத்து, ஆபாசமான, இழிவான ஆணாதிக்க சமூக வலைதள வன்முறை பதிவுகள், கேலிச்சித்திரங்கள் போன்றவற்றை தொடர்ந்து பரப்பி வருகின்றனர்.

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறை

இது கருத்துச் சுதந்திரமல்ல – பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறை. பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கை – பொது சொத்து அல்ல ஒரு பெண், தனது திருமண வாழ்க்கை தொடர்பாக நீதிமன்றத்தை நாடுவது, அப் பெண்ணை அவமதிக்கவோ, கேலி செய்யவோ, பாலியல் இழிவுக்கு உள்ளாக்கவோ யாருக்கும் உரிமை இல்லை. விவாகரத்து என்பது, அடிப்படை மனித உரிமை என்பதை மறந்து, பெண்களை இழிவுபடுத்தும் போக்கு, ஆழமான ஆணாதிக்க மனநிலையின் வெளிப்பாடாகும்.

விஜய் மவுனமாக இருப்பதா?

திரைப்பட நடிகராக இருப்பது ஒரு தனிப்பட்ட தொழில். ஆனால் அரசியல் கட்சி தொடங்கி, மக்களிடம் ஆதரவு கோரும்போது, அந்த நபர் பொது வாழ்வின் நெறிமுறைகளுக்கு உட்பட்டவராக மாறுகிறார். இந்த நிலையில், விஜய்யின் பெயரை பயன்படுத்தி பெண்களை இழிவுபடுத்துவது குறிப்பாக சங்கீதாவை ஆபாசப்படுத்தி பதிவுகள் பரவும்போது அதை கண்டிக்காமல் விஜய் மௌனம் காப்பது கண்டிக்கத்தக்கது. அந்த மௌனம், அந்த செயல்களுக்கு மறைமுக ஒப்புதலாகவே பார்க்கப்படும்.

மவுனமும் குற்றமும் சமம்

எனவே ரசிகர்கள் என்ற பெயரில் நடைபெறும் இந்த ஆணாதிக்க சமூக வலைதள வன்முறையை வெளிப்படையாகவும், தெளிவாகவும் கண்டிக்க வேண்டும். இது ஒரு அரசியல் கட்சி தலைவரின் அரசியல் – சமூக பொறுப்பு. இத்தகைய வலைதள வன்முறைக்கு மௌனம் காப்பதும் குற்றத்திற்குச் சமமானதாகும்.

சங்கீதா மீது சமூக வலைதளங்களில் மேற்கொள்ளப்படும் ஆணாதிக்க சமூக வலைதள வன்முறை, ஆபாச, இழிவான தாக்குதல்களை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடுமையாக கண்டிக்கிறது.

பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அரசியல்–பொழுதுபோக்கு விவாதமாக மாற்றும் போக்கை எதிர்க்கிறது. பொது வாழ்வில் இருப்பவர்கள், பெண்களை இழிவுபடுத்தும் செயல்களுக்கு எதிராக தெளிவான நிலைப்பாடு எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.

காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்

பெண்களின் மரியாதை, சமத்துவம், சுதந்திரம் ஆகியவை எந்த அரசியல் ஆதரவுக்கும், ரசிக மன நிலைக்கு பலியாக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. எனவே சமூக வலைதளங்களில் ஆபாச பதிவுகளை தடுத்து நிறுத்த காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவு நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்.

சங்கீதா மீது ஆபாச அவதூறு பரப்புபவர்கள் மீது தவெக கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக இந்த ஆபாச பிரச்சாரத்தை கண்டித்து எதிர்வினை ஆற்ற வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு ஜனநாயக மாதர் சங்கம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: