hindutamil.in : தமிழக சட்டமன்றத் தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் தலைவர்கள் அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் பொறுப்பாளர்களுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
திமுக உடனான அதிகாரபூர்வ தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் 29 தொகுதிகளைக் கேட்டதாகவும், திமுக தரப்பில் 23 தொகுதிகளை வழங்க முன்வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையைத் தீவிரப்படுத்தியுள்ளது. முன்னதாக, ஆட்சியில் பங்கு மற்றும் கூடுதல் தொகுதிகள் கோரிக்கையை காங்கிரஸ் எழுப்பியதால் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் திமுக - காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை நடக்குமா என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் இவ்விஷயத்தில் சோனியா நேரடியாக தலையிட்டதால் காங்கிரஸை நேற்று பேச்சுவார்த்தைக்கு அழைத்தது திமுக. அதன்படி, நேற்று காலை 11 மணி அளவில் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் காங்கிரஸ் பேச்சுவார்த்தைக் குழு அறிவாலயம் வந்
தது. திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், காங்கிரஸ் தனது முந்தைய பிடிவாதத்தில் இருந்து சற்றே இறங்கி வந்ததாகத் தெரிகிறது.
இதுகுறித்து திமுக, காங்கிரஸ் வட்டாரங்களில் விசாரித்த போது, “பேச்சுவார்த்தையின் போது கிரிஷ் சோடங்கர், ‘காங்கிரஸுக்கு தமிழகம் முழுவதும் வாக்கு வங்கி இருக்கிறது. புதிதாக கூட்டணிக்கு கட்சிகள் வந்துள்ளதால் பழைய கட்சிகளின் எண்ணிக்கையை குறைக்கப் போவதாக உங்கள் தலைவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து எங்கள் மேலிடம் ஆலோசித்து, 29 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் கேட்கும்படி தெரிவித்துள்ளது' என இறங்கி வந்தார்.
அதற்குப் பதிலளித்த டி.ஆர்.பாலு, 'நாங்கள் ஏற்கெனவே குறிப்பிட்டது போல, காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாது. 23 தொகுதிகள், ஒரு மக்களவை இடம் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களைத் தருகிறோம். அதேபோல், மாநிலங்களவை பதவிக்கான வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 5-ம் தேதியாகும். எனவே, தாமதிக்காமல் மார்ச் 3-ம் தேதிக்குள் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் யார் என்பதைச் சொல்லிவிடுங்கள். கூடுமானவரை தமிழகத்தில் இருந்து ஒருவரை தேர்வு செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்தார். அதற்கு காங்கிரஸ் குழுவினர், ‘எங்கள் கட்சி மேலிடத்துடன் ஆலோசித்து விட்டுச் சொல்கிறோம்' எனக் கூறிவிட்டுச் சென்றனர்’’ என்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது: திமுக -காங்கிரஸ் இடையிலான பேச்சுவார்த்தை சுமுகமாகச் செல்கிறது. எங்களுக்கு தேவையானதைக் கேட்டுள்ளோம், அவர்களும் பரிசீலிப்பதாகக் கூறியுள்ளனர். ஒரு மாநிலங்களவை இடம் தருவதாக முதல்வர் உறுதியளித்துள்ளார். எங்கள் கூட்டணி கொள்கை ரீதியானது. இதைச் சிதைக்க யாரும் முயற்சிக்க வேண்டாம்.
தவெக-வுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்துவதாக வெளியான தகவல் வெறும் வதந்தி. கிரிஷ் சோடங்கர் சொல்லாத கருத்தைச் சொன்னதாகக் கூறுவது கண்டிக்கத்தக்கது. எங்கள் மேலிடம் திமுக-வுடன் கூட்டணி தொடரவே அறிவுறுத்தியுள்ளது. இன்னும் 2 நாட்களில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆளுக்கு ஒண்ணு: இதேபோல், திமுக கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி, எஸ்டிபிஐ, மனிதநேய ஜனநாயகக் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை ஆகிய 5 கட்சிகளின் பிரதிநிதிகளும் தொகுதி பங்கீட்டுக் குழுவை நேற்று சந்தித்துப் பேசினர். அவர்களிடம் உதயசூரியன் சின்னத்தில் தலா ஒரு தொகுதியில் போட்டியிட திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதில், தவாக மட்டும் 2 தொகுதிகள் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக