tamil.oneindia.com - Shyamsundar : சென்னை: தமிழக அரசியல் களம் இப்போது அனல் பறக்கும் 'கிளைமாக்ஸ்' காட்சியில் இருக்கிறது. "கொடுப்பதைப் பெற்றுக்கொள்வதா... அல்லது கேட்டதை வாங்குவதா?" என கடந்த சில நாட்களாக அறிவாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் இடையே நடந்த 'மைண்ட் கேம்' ஒருவழியாக இன்று அதிகாலை ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.
நேற்று இரவு வரை நீடித்த இழுபறி, நள்ளிரவுத் தாண்டியும் 'சஸ்பென்ஸ்' ரகமாகவே நகர்ந்தது. டெல்லியில் இருந்து வந்த 'அசைன்மென்ட்', சென்னையில் நடந்த ரகசியப் பேச்சுவார்த்தைகள் என அத்தனையும் முடிந்து, இன்று அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் அந்த 'சீல்' வைக்கப்பட்டிருக்கிறது.
tamil nadu assembly elections 2026 congress
நேற்று மாலை வரை காங்கிரஸ் தரப்பில் 35 முதல் 40 இடங்கள் வரை டிமாண்ட் வைக்கப்பட்டது. ஆனால், "கூட்டணியில் கட்சிகள் அதிகம், எங்களால் 25-க்கு மேல் நகர முடியாது" என்று கறார் காட்டியது அறிவாலயம். இதனால் பேச்சுவார்த்தையில் தொய்வு ஏற்பட்டு, "தனித்துப்போகலாமா?" என்கிற ரேஞ்சுக்கு சத்தியமூர்த்தி பவனில் முணுமுணுப்புகள் கேட்டன.
ஆனால், இன்று அதிகாலை 4 மணி அளவில் நடந்த 'பைனல் டச்' போன் பேச்சுவார்த்தையில், காங்கிரஸுக்கு 29 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 2 ராஜ்யசபா இடங்கள் என்ற பார்முலாவை முன்வைத்தது திமுக தலைமை. "சட்டமன்றத் தொகுதிகள் குறைந்தாலும், நாடாளுமன்ற மேலவையில் இரண்டு இடங்கள் உறுதி" என்ற கவர்ச்சிகரமான ஆஃபர் கை கொடுக்க, காங்கிரஸ் தரப்பு வேறு வழியின்றி 'தலையாட்டி' விட்டதாகத் தெரிகிறது.
ஏன் இந்த ரகசியம்?
முடிவு எடுக்கப்பட்டுவிட்டாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பை மதியத்திற்கு மேல் வெளியிடத் திட்டமிட்டுள்ளது திமுக. இதற்குக் காரணம், கூட்டணியில் உள்ள மற்ற சிறிய கட்சிகளின் 'ரியாக்ஷன்' எப்படி இருக்கும் என்பதை கணிப்பதுதான். குறிப்பாக, விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான இட ஒதுக்கீட்டைச் சீர் செய்த பிறகே, மெகா கூட்டணியின் முழு விவரத்தையும் வெளியிட முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளாராம்.
நேற்று அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேரில் சந்தித்துப் பேசியதுதான், இன்று அதிகாலை எட்டப்பட்ட உடன்பாட்டிற்கு முக்கிய பிள்ளையார் சுழியாக அமைந்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த ரகசிய ஆலோசனையின் முடிவில், திமுக தரப்பில் இறுதி செய்யப்பட்ட தொகுதிப் பங்கீடு விவரங்கள் அடங்கிய ரகசியக் கடிதம் (Note) ஒன்றை ப.சிதம்பரத்திடம் ஸ்டாலின் வழங்கியதாகத் தெரிகிறது. "கூட்டணி தர்மத்திற்காக நாங்கள் இறங்கி வரும் அதே வேளையில், காங்கிரஸும் யதார்த்தத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்" என்ற மெசேஜுடன், சோனியா காந்திக்கு அனுப்பப்பட்ட அந்தத் தூதுதான், 29 சட்டமன்ற இடங்கள் மற்றும் 2 ராஜ்யசபா இடங்கள் என்ற 'மேஜிக்' நம்பரில் வந்து முடிந்திருக்கிறது.
அறிவாலயத்தின் கணக்கு!
திமுக தரப்பில் 170+ இடங்களில் தாங்கள் போட்டியிட வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். அதனால் தான் காங்கிரஸை 30-க்குள் சுருக்கியுள்ளனர். அதேசமயம், கடந்த தேர்தலை விட கூடுதல் ராஜ்யசபா சீட் கொடுத்து தேசியத் தலைமையைத் திருப்திப்படுத்தியுள்ளனர்.
"மாலை 3 மணிக்கு மேல் அறிவாலயத்தில் இருந்து வரும் அந்த 'கூட்டணி அறிவிப்பு' தமிழக அரசியலில் அடுத்த சில நாட்களுக்கு விவாதப் பொருளாகும் என்பதில் சந்தேகமில்லை."
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக