ஞாயிறு, 1 மார்ச், 2026

ஈரான் உச்சத்தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டார்? டொனால்ட் ட்ரம்ப் டுவீட்

 hirunews.lk  :  ஈரானின் உச்சத்தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சற்றுமுன் அறிவித்துள்ளார்.
தனது 'ட்ரூத்சோஷியல்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இதனை உறுதிப்படுத்தியுள்ள அவர், இது ஈரானிய மக்களுக்கும், ஈரானால் பாதிக்கப்பட்ட உலக நாடுகளுக்கும் கிடைத்த நீதி எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அதிநவீன உளவுத்துறை மற்றும் கண்காணிப்பு அமைப்புகளின் உதவியுடன், இஸ்ரேலுடன் இணைந்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கமேனியுடன் இருந்த மற்ற தலைவர்களும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.



ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC), இராணுவம் மற்றும் காவல்துறையினர் இனி போரிட விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ள ட்ரம்ப், அவர்கள் ஈரானிய தேசப்பற்றாளர்களுடன் இணைந்து அமைதியான முறையில் நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

"இப்போது இணைந்தால் அவர்களுக்கு மன்னிப்பு (Immunity) வழங்கப்படும், தாமதித்தால் மரணமே பரிசாகக் கிடைக்கும்" என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஒரே நாளில் ஈரானின் பல பகுதிகள் நிர்மூலமாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், மத்திய கிழக்கிலும் உலகிலும் அமைதியை நிலைநாட்டும் நோக்கம் நிறைவேறும் வரை, ஈரானின் இலக்குகள் மீதான குண்டுவீச்சுத் தாக்குதல்கள் இந்த வாரம் முழுவதும் தடையின்றித் தொடரும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஈரானிய மக்கள் தங்கள் நாட்டை மீட்டெடுப்பதற்கான மிகச்சிறந்த வாய்ப்பு இதுவெனவும் அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக இஸ்ரேலிய தரப்பு நம்புகிறது.

இந்தநிலையில் ஈரானின் அதிகாரப்பூர்வ மற்றும் அரச சார்பு ஊடகங்களான 'தாஸ்னிம்' (Tasnim) மற்றும் 'மெஹ்ர்' (Mehr) ஆகியவை இந்தச் செய்தியைத் திட்டவட்டமாக மறுத்துள்ளன.

ஒருவேளை கொமேனி கொல்லப்பட்டிருந்தால், நாட்டை வழிநடத்த ஈரானில் ஒரு 'நிர்வாகக் குழு' (Leadership Council) ஏற்கனவே தயாராக இருக்கலாம் என்று சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர

கருத்துகள் இல்லை: