தமிழ் மிரர் : ஈரானின் 2ஆவது கப்பல் திருகோணமலைக்கு செல்கிறது! பாதுகாப்பு ஏற்பாடு – ஜனாதிபதி அறிவிப்பு
-208 பணியாளர்கள் இலங்கை ஜனாதிபதியால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இலங்கையின் கடல் எல்லைக்கு அருகில் இயந்திரக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ஈரானிய கடற்படைக் கப்பல் தொடர்பில் மனிதநேய அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வியாழக்கிழமை (5) (இரவு) செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், ஈரானுக்கு சொந்தமான “Iris Bushehr” எனப்படும் கப்பலின் ஒரு என்ஜின் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து,
அந்தக் கப்பலை கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வராமல் திருகோணமலை துறைமுகத்திற்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
ஈரானியக் கப்பலை அதன் தலைநகரான கொழும்பின் பரபரப்பான துறைமுகத்திற்கு அருகில் நிறுத்த இலங்கை விரும்பவில்லை.
இதனால் அந்தக் கப்பல் வடகிழக்கு துறைமுகமான திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படும்.
இலங்கை கடற்படையின் ஒரு கப்பல், கொழும்புக்கு கொண்டு செல்ல 208 பணியாளர்களுடன் மீட்புப் பணியைத் தொடங்கியது.
இந்தக் குழுவில் 53 அதிகாரிகள், 84 கேடட் அதிகாரிகள், 48 மூத்த மாலுமிகள் மற்றும் 23 மாலுமிகள் உள்ளனர். 107 மீ நீளம் கொண்ட இந்தக் கப்பலில் பொதுவாக சுமார் 270 பேர் கொண்ட குழுவினர் இருப்பார்கள்.
208 பணியாளர்கள் மாற்றப்பட்ட பின்னரே, இலங்கைப் பணியாளர்களின் உதவியுடன் இந்தக் கப்பல் திருகோணமலைக்கு மாற்றப்படும்.
ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,
கப்பலில் உள்ள 208 பணியாளர்கள் அனைவரும் முதலில் கொழும்பு துறைமுகத்தில் கரைக்கு கொண்டு வரப்படுவார்கள். பின்னர் அவர்கள் மருத்துவ பரிசோதனைகளுக்குப் பின் வெலிசர கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, கப்பல் குறைந்தளவு பணியாளர்களுடன் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தரித்து நிறுத்தப்படும் எனவும் அவர் விளக்கமளித்தார்.
“இலங்கை நடுநிலை நாடு” – ஜனாதிபதி
இந்த விவகாரம் குறித்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, இலங்கை இறையாண்மை கொண்ட ஒரு நாடு என்றும் எந்த நாட்டிற்கும் சார்பாக செயல்படாத நடுநிலை கொள்கையை பின்பற்றும் நாடாக இருப்பதாகவும் வலியுறுத்தினார்.
“எங்கள் கடல் பிரதேசத்தில் இருந்து உதவி கோரப்பட்டது. அதை இராஜதந்திர ரீதியில் கையாள்ந்தோம். நாங்கள் அமைதியை விரும்பும் நாடு. அனைத்து நாடுகளுடனும் நட்புறவை பேணுகிறோம். மனிதநேய அடிப்படையில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது,” என அவர் தெரிவித்தார்.
தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன
ஈரானிய கப்பலில் 300 குழந்தைகள் உள்ளனர் என்ற தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவியமை குறித்து ஜனாதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.
“அந்த தகவல்கள் அனைத்தும் பொய்யானவை. அரசியல் நோக்கத்துடன் சிலர் தவறான தகவல்களை பரப்புகின்றனர். கப்பலில் சிறுவர்கள் உள்ளனர் என்று கூறுவது உண்மையல்ல,” எனவும் அவர் கூறினார்.
மனிதநேய நடவடிக்கை
இது எந்தவொரு போர் நடவடிக்கையுடனும் தொடர்புடைய உதவி அல்ல என்றும், மனித உயிர்களை காப்பாற்றும் நடவடிக்கை என்ற அடிப்படையில் தான் இலங்கை இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி விளக்கமளித்தார்.
மேலும், இலங்கையின் நிலம், கடல் மற்றும் வான்வெளி எந்தவொரு நாட்டுக்கும் சாதகமாகவோ அல்லது மற்றொரு நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் வகையிலோ பயன்படுத்த அனுமதிக்கப்படாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
சர்வதேச விதிமுறைகளின் அடிப்படையில் தீர்மானம்
இந்த நடவடிக்கை அனைத்தும் சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் கடல் சட்டங்களை பின்பற்றி இராஜதந்திர பேச்சுவார்த்தைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
திருகோணமலை துறைமுகத்தின் பாதுகாப்பு குறித்து எந்த அச்சமும் தேவையில்லை என்றும், அனைத்து நடவடிக்கைகளும் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றியே முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
உலக அமைதி நிலைநிறுத்தப்படுவதற்காக அனைத்து நாடுகளின் ஒத்துழைப்பும் அவசியம் என்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக