![]() |
keral thiruvalluvarM Ponnusamy : எங்களுக்கு ‘திருவள்ளுவர்’ கடவுள்; ‘திருக்குறள்’ தான் வேதம்! 50 ஆண்டுகளாக வணங்கும் கேரள மக்கள்! கடந்த 50 ஆண்டுகளாக திருவள்ளுவரை ஞானகுருவாக கேரள மக்கள் போற்றி வணங்கி வருகின்றனர்.
இரண்டே அடியில் உலகையே அளந்த தெய்வப் புலவன் திருவள்ளுவருக்கு நிகரான மற்றொரு கவிஞரும், புலவரும் இந்த அகிலத்தில் இதுவரை பிறந்ததும் இல்லை; இனியும் பிறக்கப் போவதில்லை என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இதனை உணர்ந்ததன் காரணமாகவே, அவரது ஈடு இணையற்ற நூலான திருக்குறள், உலகம் முழுவதும் பெருவாரியாக மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு தமிழுக்கும், தமிழர்களுக்கும் அழியாப் புகழை கொடுத்துவிட்டு மறைந்த ஐயன் திருவள்ளுவரை, ஒரு பகுதி மக்கள் கடவுளாக வணங்குகின்றனர்.
ஆனால், இதில் விசித்திரமான விஷயம் என்னவென்றால், இதை செய்வது நமது அண்டை மாநிலமான கேரளாவில்தான்.
திருவள்ளுவரை தெய்வமாக ஏன் வணங்குகிறார்கள்? திருவள்ளுவர் அப்படி என்ன அவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டார்? இப்படி பல கேள்விகள் எழுகிறது அல்லவா.. அதற்கு விடையாகத்தான் இந்தக் கட்டுரை இருக்கிறது. வாருங்கள் பார்ப்போம்.
திருவள்ளுவர் ஞான மடத்தில் கூடியிருக்கும் மக்கள் உலகப் பொது மறையாகப் போற்றி வணங்கப்படும் திருக்குறளைத் தந்த திருவள்ளுவரை, ஞானகுருவாக ஏற்று, அவருக்கென்று ஆலயங்களை உருவாக்கி கேரள மக்கள் வணங்கி வருகிறார்கள்.
கேரளாவின் எர்ணாகுளம், கோட்டயம், பாலக்காடு, இடுக்கி ஆகிய மாவட்டங்களில் 'திருவள்ளுவர் ஞான மடம்' என்ற பெயரில் வழிபாட்டு அமைப்பை உருவாக்கி அவரை நாள்தோறும் வழிபட்டு வருகின்றனர் மலையாளம் பேசும் மக்கள்.
1975 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ‘திருவள்ளுவர் ஞான மடம்’ என்ற அமைப்பு, கடந்த சித்திரை 1 தமிழ்ப் புத்தாண்டு அன்று 50 ஆண்டுகளை நிறைவு செய்தது.
தமிழ்குடி வள்ளுவனை தெய்வமாக கொண்டிருக்கும் இம்மக்கள், திருக்குறள் சொல்லும் அறத்தின்பால் தங்கள் வாழ்க்கை முறைகளை அமைத்திருக்கின்றனர்.
தமிழ்நாட்டின் செஞ்சி பகுதியைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் தன்மானன், இந்த ஞானமடங்களின் ஆலோசகராகவும், 50ஆம் ஆண்டு விழாவின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருகிறார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் பேசிய அவர், “கடந்த 1975ஆம் ஆண்டு சித்திரை 1ஆம் தேதி இடுக்கி மாவட்டம் சேனாபதியில் பகவான் ஆதி திருவள்ளுவர் ஞானமடம் என்ற பெயரில் திருக்குறள் வாழ்வியல் அமைப்பை சிவானந்தர் தொடங்கி வைத்தார்.
எர்ணாகுளம் மாவட்டம் கோதமங்கலத்திலுள்ள பொதுப்பணித்துறை விருந்தினர் விடுதியில் நடைபெற்ற திருவள்ளுவர் ஞான மடத்தின் 50ஆவது ஆண்டு விழா
இந்த அமைப்பை பரவலாகக் கொண்டு சென்ற சேனாபதி ஐயப்பன், காஞ்னூர் கோபாலன் மாஸ்டர், துறவன்கரை குஞ்சுக்குட்டன், கிழக்கு மாறாடி சி.சி.கண்ணன் உள்ளிட்ட முன்னணியினருக்கும், மறைந்த சிவானந்தருக்கும், ஞானமட உறுப்பினர்களுக்கும், கேரள மக்களுக்கும், தமிழ்நாட்டிலுள்ள ஆர்வலர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த 50ஆவது ஆண்டு நிகழ்வினை ஏற்பாடு செய்தோம்.
சிவானந்தர் மறைந்து 5 ஆண்டுகள் ஆன பின்னரும்கூட, ‘பகவான் ஆதி திருவள்ளுவர் ஞானமடம்’ என்ற இந்த அமைப்பை தலைமுறை தலைமுறையாக சீரமைத்து வருகிறோம்.
திருவள்ளுவரை உலகறிய செய்வதே எங்களில் தலையாய நோக்கம். எந்த முறையில் ஞானமட வழிபாடுகளை சிவானந்தர் மேற்கொண்டாரோ அதே அடிப்படையில் வள்ளுவத்தின் வாழ்வியல் நெறியை கொண்டு செல்ல உறுதியெடுத்துள்ளோம்,” என்றார்.
சங்ககால தமிழ் பெயர்களை சூட்டிக்கொள்ளும் மக்கள்
எர்ணாகுளம் மாவட்டம் கோட்டப்படி ஊராட்சிக்கு உட்பட்ட குருவானப்பாறை வனப்பகுதிக்கு உட்பட்ட நிலத்தில் 'பகவான் ஆதி திருவள்ளுவர் ஞான மடம்' உருவாக்கப்பட்டு அப்பகுதியிலுள்ள 5-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
காட்டு யானைகள் வலசை செல்லும் இந்தப் பகுதியில், எந்தவித பயமும் இன்றி, வள்ளுவரை அவர்கள் வணங்கி வருவது அவர் மீது அம்மக்கள் வைத்திருக்கும் பக்தியையும், மரியாதையையுமே காட்டுகிறது.
இதுபற்றி கல்லூரி மாணவி மணிமேகலை கூறுகையில், “எர்ணாகுளம் மாவட்டம் கோதமங்கலம் அருகே உள்ள நெல்லிக்குழியில் வாழ்ந்து வருகிறோம்.
இன்று திருவள்ளுவர் ஞானமடத்தின் 50ஆவது ஆண்டு விழா தொடக்கத்திற்காக, குருவானப்பாறை ஞானமடத்திற்கு வழிபாட்டிற்காக வந்துள்ளோம்.
எனக்கு மணிமேகலை என்றும், என் தங்கைக்கு கண்ணகி என்றும் பெயர் சூட்டியவர் சிவானந்தர் ஆவார்.
பைமற்றம் ஞானமடத்தில் எங்கள் குடும்பம் உறுப்பினராக உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதே எங்களுக்கு ஒருவித பெருமைதான்.
அமைதி தவழும் வள்ளுவ அற வாழ்வை மேற்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறோம். முன்னேற்ற வாழ்விற்காக திருவள்ளுவரை குருவாகவும், திருக்குறளை வாழ்க்கை முறையாகவும் ஏற்று வாழ்ந்து வருகிறோம்,” என்றார்.
வள்ளுவரைப் புகழ்ந்து மலையாளத்தில் எழுதப்பட்ட பல்வேறு வழிபாட்டுப் பாடல்களை ஞானமட உறுப்பினர்கள் மெய்யுருகப் பாடுகின்றனர்.
வெளி மடத்தைச் சேர்ந்த முக்கியப் பிரதிநிதிகள் திருக்குறள் குறித்தும், வள்ளுவ வாழ்வியல் குறித்தும் உரையாற்றுகின்றனர். பிறகு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டு நிறைவு செய்யப்படுகிறது.
திருவள்ளுவருக்காக இடம் வழங்கிய மக்கள்
பாலக்காடு மாவட்டம் மண்ணார்க்காட்டைச் சேர்ந்த கண்ணன் கூறுகையில், “கடந்த 35 ஆண்டுகளாக திருவள்ளுவரை திருக்குறளை பிறருக்கு கற்பிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறேன்.
என்னுடைய முயற்சியால், மண்ணார்க்காடு பகுதியில் பத்மநாபபிள்ளை வழங்கிய இடத்தில் ஞானமடத்தை உருவாக்கியுள்ளோம். அதேபோன்று கோதமங்கலம் குருவானப்பாறையிலும் குட்டப்பன் மகன் வேலாயுதம் வழங்கிய இடத்தில்தான் ஞானமடம் உருவாக்கப்பட்டுள்ளது.
பகவான் ஆதி திருவள்ளுவர் ஞான மடத்தில் வழிபடும் ஊர் மக்கள் (ETV Bharat Tamil Nadu)
மறைந்த வேலாயுதத்தின் மனைவி கௌரியும் இந்த ஞானமடத்திற்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறார்.
கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் தனிநபர்கள் நன்கொடையாக வழங்கிய இடங்களில்தான் ஞானமடங்கள் செயல்பட்டு வருகின்றன.
பல்வேறு இடர்ப்பாடுகளுக்கு மத்தியில் ஞானமடங்களை நாங்கள் நடத்தி வருகிறோம். கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், பள்ளி-கல்லூரிகள் கூட மூடப்பட்டுக் கிடந்தன.
ஆனால் ஞானமடங்கள் மக்களுக்காக திறந்தேதான் இருந்தன. இது திருவள்ளுவரின் அருளாகும். .
இந்த 50ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாட பல ஞானமடங்களுக்குச் சென்று ஆய்வுகளை தன்மானன் மேற்கொண்டார்.
ஆனால், கடைசியில் இக்குருவானப்பாறை ஞானமடத்திற்குதான் அந்த வாய்ப்புக் கிடைத்தது. இதற்காக தன்மானனுக்கும், தமிழ்நாட்டிலிருந்து வந்த அனைவருக்கும் நன்றி,” என்றார்.
ஞானமடங்களைச் சார்ந்த குடும்பங்கள் அளிக்கும் நிதியுதவியில்தான் இவை அனைத்தும் நிர்வாகம் செய்யப்படுகின்றன.
ஒவ்வொரு ஞானமடமும் உருவாக்கப்பட்ட நாளையே அதன் ஆண்டு விழாவாக அவை கொண்டாடி மகிழ்கின்றன. ஆனால், அனைத்து ஞானமடங்களும் கொண்டாடும் ஒரு நாள் என்றால் அது சித்திரை முதல் தேதிதான்.
ஒவ்வொரு ஞானமடமும் அதன் நிதி வசதியைப் பொறுத்து சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ கட்டப்படுகிறது. இம்மடங்களில் வாரந்தோறும் திருக்குறள் ‘முற்றோதுதல்’ வகுப்பு குழந்தைகளுக்கு நடைபெற்று வருகிறது. மடத்தின் நெறியாளராக இருப்பவர் 'மடபதி' என்று அழைக்கப்படுகிறார்.
திருக்குறள் வழியில் தீர்வு
நெல்லுக்குழியைச் சேர்ந்த ரவி கூறுகையில், திருவள்ளுவரை குருவாகவும், திருக்குறளை மரபுவழி வாழ்க்கை சமயமாகவும் ஞானமடத்தை வழிபடும் கோவிலாகவும், அங்குள்ள மடபதியை வழிகாட்டியாகவும் ஏற்று வாழ்ந்து வருகிறேன்.
இந்த வாழ்க்கையை நான் உயிருள்ளவரை கடைப்பிடிப்பேன் என்கிறார். ரவியின் மனைவி ஷைமி கூறுகையில், ‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ எனும் ஒற்றை குறளை வைத்தே, என் வாழ்க்கையை நான் புரிந்து கொண்டேன் என்றார்.
காலையும் மாலையும் விளக்கேற்றி வள்ளுவரை வழிபடுவதுடன் திருக்குறளை ஓதி, அதனைப் பின்பற்றி வருகிறேன். எனது கணவர் தற்போது கேரள அரசின் போக்குவரத்துறையில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
பானிப்புரம் நெல்லிக்குழியில் வாழ்ந்து வருகிற நாங்கள் எந்த குடும்பச் சிக்கல் வந்தாலும் அதற்கு திருக்குறள் வழியில்தான் தீர்வு காண்கிறோம். ‘
திருக்குறளை’ வாழ்வியலாக ஏற்றதன் காரணமாகவே, எங்கள் குடும்பத்தில் மதுவுக்கும், இறைச்சிக்கும் இடமில்லை. வாழ்வாங்கு வாழ்வதற்கான வழிமுறைகள் திருக்குறளில்தான் உள்ளன' என்கிறார்.
தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும் முன்னுதாரணமாக வாழ்ந்து வரும் இக்கேரள மக்களின் வாழ்வில் சாதிக்கு மட்டுமல்ல.. தாலிக்கும், ஏகபோக சுரண்டல் வாழ்க்கைக்கும் ஒரு போதும் இடமில்லை.
அன்பை மட்டுமே தங்களின் ஆபரணமாகக் கொண்டு, பாகுபாடின்றி வாழ்ந்து வரும் இந்த மக்களின் வாழ்க்கை மிக அழகானது. நாம் எல்லோரும் பின்பற்றத்தக்கது என்றால் அது மிகையல்ல.
THIRUVALLUVAR TEMPLE IN KERALA 👇
கோட்டப்படி உள்ளாட்சியில் உள்ள குருவானப்பாறையில் வனப்பகுதிக்குட்பட்ட நிலத்தில் இருக்கும் 'பகவான் ஆதி திருவள்ளுவர் ஞான மடம்'
பதிவர்:- இரா. சிவக்குமார், 23.04.2025..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக