செவ்வாய், 22 ஏப்ரல், 2025

சென்னையின் 6 முக்கிய சாலைகள் 4 வழிச்சாலைகளாக மாறுகிறது-மாநகராட்சியின் திட்டம்!

 tamil.samayam.com -Subramani :  சென்னை மாநகராட்சியும், பெருநகர வளர்ச்சிக் குழுமமும் இணைந்து காமராஜர் சாலை உட்பட ஆறு முக்கிய சாலைகளை நான்கு வழிச்சாலையாக மாற்றும் சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொண்டு வருகின்றன. இந்த விரிவாக்கம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சி (GCC) மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) ஆகியவை இணைந்து ஆறு முக்கியமான சாலைகளை நான்கு வழிச்சாலையாக மாற்றும் சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொண்டு வருகின்றன. இந்த விரிவாக்கம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



முக்கிய சாலை
சென்னையில் முக்கிய சாலைகளாக இருக்கும் காமராஜர் சாலை உட்பட காந்தி மண்டபம் சாலை, சர்தார் படேல் சாலை, புதிய ஆவடி சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை மற்றும் பேப்பர் மில்ஸ் சாலை ஆகிய இடங்களில் இந்த ஆய்வு நடக்கிறது.

இதுபோன்ற திட்டங்கள் முக்கியமானவை
ஆய்வின் அறிக்கை கிடைத்ததும், திட்டத்திற்கான முன்மொழிவு மற்றும் பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும் என்று மேயர் ஆர். பிரியா தெரிவித்துள்ளார். நகரமயமாக்கல் மற்றும் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக, இதுபோன்ற திட்டங்கள் முக்கியமானவை என்று அவர் கூறினார். ஜனவரி மாத இறுதியில் தொடங்கிய இந்த ஆய்வின் அறிக்கைகள் ஓரிரு வாரங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போக்குவரத்து நெரிசல் குறையும்
முக்கிய சாலைகளை விரிவாக்கம் செய்வதன் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியும்.
இது தொடர்பாக GCC தலைமைப் பொறியாளர் (பொது) கே. விஜயகுமார் கூறியதாவது:- முதன்மை திட்டத்தில், முக்கிய நகர சாலைகளின் அகலம் மறுபரிசீலனை செய்யப்படும். தனியார் நிலம் கையகப்படுத்தும் கணக்கெடுப்பு ஆய்வின்போது நடத்தப்படும். போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதே இதன் நோக்கம் என்று கூறினார்.

கல்வி நிறுவனங்கள் அதிகமாக உள்ளன
டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை மற்றும் காமராஜர் சாலை போன்ற சாலைகள் 20-25 மீட்டர் அகலம் கொண்டவை. இந்த சாலைகளை விரிவாக்கம் செய்வதால் எந்த பயனும் இல்லை என்று மக்கள் கூறுகிறார்கள். ஏனென்றால், இந்த சாலைகளில் வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள், மத வழிபாட்டு தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. இதுவே போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம்.

சாலை விரிவாக்கம் போக்குவரத்து நெரிசலை குறைக்காது
இது குறித்து நகர திட்டமிடல் நிபுணர் தயானந்த் கிருஷ்ணன் கூறுகையில், "சாலை விரிவாக்கம் போக்குவரத்து நெரிசலை குறைக்காது. ஏனென்றால், இந்த சாலைகள் ஏற்கனவே அதிக வளர்ச்சி அடைந்துள்ளன. நகர திட்டமிடுபவர்கள் மற்றும் GCC, கட்டிடங்களின் உயரத்தை கட்டுப்படுத்த வேண்டும். அப்போதுதான் நகரத்தை நிலையாக வைத்திருக்க முடியும். மேலும், சாலை விரிவாக்கம் செய்தால், ஏற்கனவே இருக்கும் கட்டிடங்களின் பார்க்கிங் இடம் பறிபோகும். இதனால், கட்டிட உரிமையாளர்கள் புதிதாக உருவாக்கப்பட்ட சாலையில் வாகனங்களை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும்" என்றார்.

கருத்துகள் இல்லை: