![]() |
ராதா மனோகர் : எந்த போராட்டமாக இருந்தாலும் அவற்றில் முதல் வரிசையில் நிற்பவர்கள் பெரும்பாலும் சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்கள்தான்.
இயல்பிலேயே போராட்ட குணம் இருப்பதுவும் ஒரு காரணம்
இதுவரை சக மனிதர்களாகவே மதிக்க மறுக்கும் தலைவர்கள் அல்லது இயக்கங்கள் போராட்ட ஆள் சேர்ப்பு என்ற நோக்கத்திலாவது நம்மை அழைக்கிறார்கள் என்று அவர்களின் அழைப்பு கரத்தை பற்றுவது ஒரு மானிடவியல்பு சார்ந்த விடயம்!
இதுவரை நேருக்கு நேர் பார்க்கவே தயங்கிய மனிதர்கள் நேருக்கு நேர் பார்த்து அழைப்பது அவர்களின் உள்மனதை தொட்டிருப்பதில் வியப்பில்லை.
தமிழரசு கட்சியின் ஜாதி அரசியலை புரிந்து கொள்ள கொஞ்சம் பின்னோக்கி செல்வோம்
1960ஆம் ஆண்டு யாழ் கச்சேரிக்கு முன்பாக நடந்த சத்தியாகிரக போராட்டத்தின் போது ஒடுக்கப்பட்ட மக்களின் அமைப்புகள் ஒன்று சேர்ந்து செல்வநாயகம் நாகநாதனை சந்தித்து (20000) இருபதாயிரம் ரூபாயை போராட்ட நிதியாக கொடுத்தார்கள்.
அது மட்டுமல்ல.இந்த போராட்டத்தில் இணைந்து உயிரையும் கொடுக்க நாம் ஆயிரம் இளைஞர்கள் தயாராக இருக்கிறோம் என்றும் தெரிவித்தார்கள்
செல்வநாயகம் சந்தோஷமாக அந்த பணத்தை பெற்றுக்கொண்டு நன்றி , உங்கள் உதவி தேவைப்படும் போது சொல்லி அனுப்புகிறேன் என்று கூறி வழியனுப்பி வைத்தார்.
அன்று இலங்கை தமிழர்கள் எல்லோருக்கும் ஒரு கடவுளுக்கு நிகரான உயரத்தில் செல்வநாயகம் இருந்தார்.
மக்கள் உணர்ச்சி வசப்பட்டிருந்தார்கள்
செல்வநாயகம் என்ன சொன்னாலும் அதை கேட்க மக்கள் தயாராக இருந்தார்கள்
தேடிவந்த ஒடுக்கப்பட்ட மக்களின் அமைப்புக்களோடு அன்றே பேசி ஏன் உங்களுக்கு தனியாக ஒரு அமைப்பு தேவை? நீங்களும் நாங்களும் தமிழர்கள்தானே என்று கூறி அவர்களையும் தமிழரசு கட்சிக்குள் உள்வாங்கி ஒரு வேலை திட்டத்தை உருவாக்கி இருக்கலாம்
ஜாதிக்கு ஒரு முடிவு காட்டக்கூடிய ஒரு வாய்ப்பு அன்று தமிழரசு கட்சிக்கு கிடைத்தது
குறிப்பாக செல்வநாயகத்திற்கு கிடைத்தது
ஒடுக்கப்பட்ட மக்களின் காசை வாங்கிய செல்வநாயகம் ஒரு பேச்சுக்கு தானும் ஜாதி அடக்குமுறை பற்றி கேட்கவே இல்லை .
செல்வநாயகத்தின் அன்றைய அதே தந்திர நோக்கத்தில்தான் திரு , புஸ்பராசா திருமதி புஷ்பராணி போன்றவர்களையும் தமிழரசு கட்சி பயன்படுத்தியது.
திருமதி புஸ்பராணி அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்!
Vijaya Baskaran : புஸ்பராணி சிதம்பரி
ஒரு காலத்தில் பலரால் பேசப்பட்டவர். விடுதலை என்கிற பெயரால் சிறைக்குச் சென்றவர்.தமிழ்த் தேசியம் தமிழர் விடுதலை என்பதில் ஆர்வமாக செயற்பட்ட பெண். இவரது மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
இவரைப் பற்றி எல்லோரும் வியந்து பாராட்டியபோதும் எனக்கு இவரது போராட்டம் போராட்ட வாழ்க்கை தொடர்பாக ஒருவிதமான வெறுப்பே இருந்தது.
ஒடுக்குமுறைக்கு உட்பட்ட சமூகத்தில் பிறந்து தன் சமூக ஒடுக்கு முறைகளை மறந்து கடந்து தமிழ்த் தேசியத்துக்காக போராட்டம் நடத்தியவர்.இவரது சகோதரன் புஸ்பராசாவும் அவ்வாறே இயங்கினார்.தான் சார்ந்த சமூக ஒடுக்குமுறைகள் தொடர்பாக அக்கறை கொண்டவர்கள் அல்ல. அதற்காக போராடியவர்களும் அல்ல. அவரது அயலில் நடந்த மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் போராட்டம் தொடர்பாக இவர்கள் கவனத்தில் எடுக்கவும் இல்லை. கலந்து கொள்ளவும் இல்லை.
சிறை மீண்டு வந்த புஸ்பராசாவை கூட்டணி தன் அரசியலுக்கு வாக்கு சேகரிக்க பயன்படுத்தியது. ஒரு மேடையில் ஒடுக்கப்பட்ட சமூக விடுதலை தொடர்பாக கேள்வியை எழுப்பியபோது தான் சார்ந்த கட்சி தொடர்பாக பதிலளிக்க முடியாத புஸ்பராசா நானும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் என பதிலளித்தார்.
தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில் தமிழரசுக்கட்சி மற்றும் செல்வநாயகம் ஒதுங்கி நின்றார்கள். அமிர்தலிங்கம் பாராளுமன்றத்தில் கொச்சைப்படுத்திப் பேசினார். அப்படிப்பட்ட அயோக்கியர்களுக்காக வாக்கு சேகரிக்க சென்றவர் புஸ்பராணி.சாதியைப் பற்றி பின்னாளில் பேசியபோதும் தன்னை தமிழ்த் தேசியவாத சிந்தனைக்குள் ஒழித்தே வாழ்ந்தவர்.
ஆயுதங்கள் அழிவைத் தரும் என்றார். அந்த ஆயுதங்களே எமக்குப் பாதுகாப்பையும் விடுதலைக்கும் உதவியதை புஸ்பராணி அறிய மாட்டார்.தமிழ்த் தேசியம் என்ற வெள்ளாள சிந்தனைக்குள் அகப்பட்டு வெளியே வரமுடியாமல் அவரது வாழ்வு முடிந்துவிட்டது.
என்ன இருந்தாலும் வரலாற்றில் அவருக்கும் ஒரு பக்கம் உண்டு. அந்த வரலாற்றைக்கூட சாதீயம் மூடி மறைத்ததை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
அவர் வாழ்வும் ஒரு சரித்திரம்தான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக