ஞாயிறு, 20 ஏப்ரல், 2025

துரை வைக்கோ மல்லை சத்யா மோதல்! உடையும் மதிமுக?

 Hindu Tamil  :  மதிமுக பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுடனான மோதல் காரணமாக, கட்சிப் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவித்துள்ளார்.
இன்று கூடும் மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2021 அக்டோபர் மாதம் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் வாக்கெடுப்பு அடிப்படையில் கட்சியின் தலைமை நிலையச் செயலாளராக துரை வைகோவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. பின்னர் அவர் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, மதிமுக இளைஞரணி செயலாளராக இருந்த கோவை ஈஸ்வரன், அவைத் தலைவராக இருந்த திருப்பூர் துரைசாமி ஆகியோர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தனர்.



இதன் தொடர்ச்சியாக, மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும், துரை வைகோவின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் தொடங்கியது. கடந்த 12-ம் தேதி மதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற தொழிலாளரணி பொதுக்குழுக் கூட்டத்தில், நிர்வாகிகள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி சிலர் வாக்குவாதம் செய்தனர். மல்லை சத்யா, துரை வைகோ இடையேயான மறைமுக மோதலே ஆதரவாளர்கள் மூலம் வெளிப்பட்டதாக அப்போது பேசப்பட்டது.

இதைத் தொடர்ந்து, திருச்சியில் நடைபெற்ற மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில், மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், தனது முகநூல் பக்கத்தில் ''மதிமுகவில் 32 ஆண்டுகள் உழைத்ததற்கு நம்பிக்கை துரோகி உள்ளிட்ட பல விருதுகளை எனக்குத் தந்துள்ளனர். வைகோவின் இதயத்தில் இருந்து நீக்க முடியாது" என மல்லை சத்யா குறிப்பிட்டிருந்தார். அதேநேரம், தீர்மானத்தை நிறைவேற்றக் கூடாது என வைகோவும் அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் கட்சியில் இருந்து விலகுவதாக நேற்று துரை வைகோ அறிக்கை வெளியிட்டார். அதில், "நான் தலைமை நிலையச் செயலாளர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அதை சகித்துக் கொள்ள முடியாமல் 4 ஆண்டுகளாக கட்சிக்கும், தலைமைக்கும் தீராத பெரும் பழியை சுமத்தி சுகம் காணும் ஒருவர் மத்தியில் கட்சியின் முதன்மைச் செயலாளர் என்ற பொறுப்பில் தொடர்ந்து பணியாற்ற விரும்பவில்லை. எனவே, முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவித்துக் கொள்கிறேன். வரும் 20-ம் தேதி (இன்று) நடைபெறும் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் பங்கேற்பேன். அதன் பிறகு முக்கிய முடிவுகள் மேற்கொள்ளும் கூட்டங்கள் எதிலும் கலந்து கொள்ள மாட்டேன். என்னால் கட்சிக்கோ, பொதுச் செயலாளர் வைகோவுக்கோ எள் முனை அளவுகூட சேதாரம் வந்து விடக்கூடாது. அதே நேரம், மதிமுகவின் முதல் தொண்டனாக இருந்து கட்சிக்காக உழைப்பேன். திருச்சி மக்களுக்காக கண்ணும் கருத்துமாக கடமையாற்றுவேன். எப்போதும்போல கட்சித் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் அரணாகவும், சுக துக்கங்களில் பங்கேற்கும் தோழனாகவும் இருப்பேன்" என தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து சென்னை அண்ணாநகரில் உள்ள இல்லத்தில் துரை வைகோவை சமாதானப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, கட்சித் தலைமை துரை வைகோவின் விலகல் கடிதத்தை ஏற்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, பொருளாளர் செந்திலதிபன், அவைத் தலைவர் அர்ஜுனராஜ், பூமிநாதன் எம்எல்ஏ உள்ளிட்டோர் துரை வைகோவுடன் பேசினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செந்திலதிபன், "இன்று நடைபெறும் கூட்டத்தில் நல்ல முடிவை பொதுச் செயலாளர் வைகோ அறிவிப்பார்" என தெரிவித்தார். உட்கட்சி மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று கூடும் பொதுக்குழுவில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: