செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

புதிய சுதந்திர தின காவி உறுதி மொழியை புறக்கணித்த மேற்கு வங்கம் ...

பள்ளிகளில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் குறித்து மத்திய அரசு அனுப்பிய சுற்றறிக்கை உத்தரவை பின்பற்ற முடியாது என்று மேற்குவங்க மாநில அரசு மறுத்துள்ளது. இதற்கு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நாளை ஆகஸ்ட் 15ல் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சக இணை செயலாளர் மனீஷ் கார்க், அனைத்து மாநில அரசுகளுக்கும் நேற்று ஆகஸ்ட் 13ல் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில், இந்தியா சுதந்திர தின பவளவிழா ஆண்டுக்குள் அதாவது வருகிற 2022ம் ஆண்டுக்குள் புதிய இந்தியாவை படைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் கனவை நனவாக்கும் வகையில், ஆகஸ்டு 9 முதல் 30ம் தேதி வரை அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ‘சங்கல்ப்’ என்ற உறுதிமொழிய் ஏற்கும் நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும். அதில், நாட்டை தூய்மை ஆக்கவும், புதிய இந்தியாவை படைக்கவும், வறுமை, ஊழல், பயங்கரவாதம், வகுப்புவாதம், சாதிக்கொடுமை ஆகிய 5 பிரச்னைகளில் இருந்து நாட்டை விடுவிக்கவும் பாடுபடுவோம் என்று அனைத்து மாணவர்களும் உறுதிமொழி எடுக்க வேண்டும். என்று
கூறப்பட்டுள்ளது.
மேலும், அதில், சுதந்திர போராட்டம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி, ஓவிய போட்டி ஆகியவற்றை நடத்த வேண்டும். இதற்கான கேள்விகளை நரேந்திர மோடி செயலியில் (ஆப்) இருந்தோ அல்லது அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்தோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த சுற்றறிக்கைக்கு இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், மம்தா பானர்ஜி ஆட்சி நடத்தும் மேற்கு வங்க மாநில அரசு மட்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை பின்பற்ற வேண்டாம் என்றும், அதில் கூறியபடி சுதந்திர தின நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என்றும் மேற்கு வங்க மாநில பள்ளிக் கல்வித்துறை அம்மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கடிதம் எழுதி உள்ளது.
இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மேற்கு வங்க மாநில அரசின் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்து நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய அரசு பிறப்பித்த சுற்றறிக்கையின் நோக்கம், தேசபக்தி உணர்வை உருவாக்கவேண்டும் என்பதுதான். இது ஒரு அரசியல் கட்சியின் செயல் திட்டம் அல்ல. மதச்சார்பற்ற செயல் திட்டம். மத்திய அரசு கூறியபடி, நிறைய மாணவர்கள் ஆர்வத்துடன் ஓவியப்போட்டிகளில் பங்கேற்று வருகிறார்கள். இந்த நிலையில், மேற்கு வங்க மாநில அரசு எடுத்த முடிவு துரதிருஷ்டவசமானது. இது குறித்து நான் அம்மாநில அரசுடன் பேசுவேன். அவர்களுக்கு நல்லெண்ணம் உருவாகட்டும் என்று தெரிவித்தார்.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: