புதன், 16 ஆகஸ்ட், 2017

தொழிலாளி முருகன் குடும்பத்தை நேரில் சந்தித்த கேரள முதல்வர்


மருத்துவ உதவி மறுக்கப்பட்டதால் மரணமடைந்த, தமிழக தொழிலாளி முருகனின் குடும்பத்தாரை, முதல்வர் பிணராயி விஜயன் இன்று சந்தித்தார்.முருகன் குடும்பத்தாருக்கு அவசியமான உதவிகளை அரசு வழங்கும் எனவும், அவர்களின் இழப்பிலும் துயரத்திலும் கேரள மக்கள் பங்குகொள்வதை தெரிவித்தார். முன்னதாக, மருத்துவமனைகள் அவசர சிகிச்சையளிக்காததால் உயிரிழந்த முருகன் உறவினர்களிடம் கேரள மக்களின் சார்பாக முதல்வர் பினராயி விஜயன் மன்னிப்புக் கோரியது குறிப்பிடத்தக்கது. மேலும் விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் உடனடியாக சிகிச்சையளிக்க தேவைப்பட்டால் புதிய சட்டம் இயற்றப்படும் என்றும் பினராயி விஜயன் அறிவித்திருந்தார்.
கேரள முதல்வர் பிணராயி விஜயன், திருநெல்வேலி தொழிலாளி முருகன் குடும்பத்தாரை சந்தித்த காணொளி டுவிட்டரின் கிடைக்கிறது.
தமிழகத்தைச் சேர்ந்த யார் பார்த்தாலும், அதற்காகவொரு தனி நெகிழ்ச்சியை உணர்வார்கள். முருகனின் மனைவியும் குழந்தைகளும் தங்களுக்கென அமைக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தபடி இழப்பீட்டைப் பெறும் காணொளிக் காட்சிதான் அது. அரசியல் சட்டப்படி நாங்கள் முல்வராகவும் அமைச்சராகவும் இருக்கலாம், ஆனால் நாம் ஒவ்வொருவரும் சுயமரியாதை கொண்ட மனிதர்கள் என உணர்த்தும் செயலாக அது அமைந்தது. அவர்கள் திட்டமிட்டு இதனைச் செய்திருக்க மாட்டார்கள். இடதுசாரி அரசியல் வலுவாக இருக்கும் கேரளத்தின் இயல்பான அரசியல் கலாச்சாரம் அது.
உன் காலில் நான் விழுந்தேன், என் காலில் நீ விழுந்தாய் என்ற விவாதங்கள் பரபரப்பாய் ஓடிக்கொண்டிருக்கும் தமிழகத்தில், இருக்கையின் நுனியில் ஒட்டிக்கொண்டிருந்தவர்களையும் பார்த்திருக்கிறோம். எளியோரை மறந்து அதிகாரத்திற்கு குடைபிடிப்போரையும் அவர் தோரணையையும் கண்டிருக்கிறோம்.
கேரளம் தன் இயல்பை பாதுகாத்துக்கொண்டு முன்னேற வாழ்த்துவோம்.  sinthan

கருத்துகள் இல்லை: