வியாழன், 17 ஆகஸ்ட், 2017

அம்மாவின் புகைப்படம் லீக் .. பார்த்தால் மக்கள் கதறி விடுவார்கள்

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் இருந்த நாள்கள் மர்மமானவை என்றும் அவரது மரணத்தின் காரணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றும் மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் பல்வேறு கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற கடந்த வருடம் செப்டம்பர் 22ஆம் தேதி முதல் டிசம்பர் 5ஆம் தேதி வரை நடந்தவற்றை விசாரணை செய்ய வேண்டும் என்றும் அப்போது அனைத்துமே சசிகலா கட்டுப்பாட்டில்தான் நடந்தன என்றும் ஓ.பன்னீர் அணியினர் இன்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதற்கிடையே சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெயானந்த் கடந்த ஏப்ரல் மாதமே தனது ஃபேஸ்புக்கில், ‘கொலைப் பழி சுமத்தியும் அம்மா அவர்களின் சிகிச்சை படத்தை வெளியிட வில்லை. பச்சை கவுன் உடையில் அம்மாவின் எதிரிகள் அதை பார்க்கக் கூடாது என்பதே காரணம். இது தியாகத் தலைவி சின்னம்மாவின் செயல்’ என்று பதிவிட்டிருந்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது ஜெயலலிதா சவப்பெட்டியில் இருப்பதைப் போல ஓ.பன்னீர் அணி பிரசாரம் செய்ததை அடுத்து ஜெயானந்த் இவ்வாறு பதிவிட்டிருந்தார்.

இதுபற்றிய சர்ச்சைகள் தொடர்ந்த நிலையில், ‘தேவைப்பட்டால் அந்தப் புகைப்படங்களை நானே வெளியிடுவேன்’ என்று சொல்லிவந்தார், இன்னமும் சொல்லிவருகிறார்.
இந்த நிலையில் திவாகரன் குடும்பத்தார் வசம் இருக்கும் அந்த புகைப்படங்களைப் பார்த்த அதிமுக முக்கியப் பிரமுகர் ஒருவரிடம் ஜெயலலிதா அப்புகைப்படத்தில் எப்படி இருக்கிறார் என்று விசாரித்தோம்.
“திவாகரனின் மகன் ஜெயானந்த் சொல்லியிருப்பது உண்மைதான். அந்தப் புகைப்படத்தை நான் பார்த்துக் கண் கலங்கிவிட்டேன். கம்பீரமாக பெண் சிங்கம் போல மெல்ல மெல்ல நடந்து வரும் அம்மா... காரின் முன் இருக்கையில் கம்பீரமாக அமர்ந்தே நாம் கண்டு பழக்கப்பட்டு விட்ட அம்மா... மருத்துவமனை படுக்கையில் சாய்ந்தபடி கால்களை நீட்டி அமர்ந்திருக்கிறார்.
அதாவது தலைப்பகுதிக்குப் பின்னால் தலையணைகள் போல வைக்கப்பட்டு உயர்ந்திருக்க... கால்களை நீட்டிக்கொண்டிருக்கிறார். கால்கள் நன்றாகத் தெரிகின்றன.
பச்சை வண்ண மருத்துவமனை உடையை அம்மா அணிந்திருக்கிறார். படியசீவிப் பழக்கப்பட்ட அம்மாவின் தலை முடிகள் ஆங்காங்கே அலைக்கழித்துப் பறக்கின்றன.
சாப்பிடும்போது உடையில் சிந்திவிடக் கூடாது என்பதற்காக ஒரு மேலங்கியை அணிந்திருக்கிறார் அம்மா. கூந்தல் கலைந்திருக்கிறது, முகம் களையிழந்திருக்கிறது. ஒருபக்கம் சசிகலாவும் இன்னொரு பக்கம் அப்போலோ நர்ஸும் அந்தப் புகைப்படத்தில் இருக்கிறார்கள். நர்ஸைப் பார்த்தபடி இருக்கிறார் அம்மா. அவரது உதட்டோரம் சாப்பாட்டுத் துணுக்கு ஒட்டிக்கொண்டிருக்கிறது.
இந்தப் புகைப்படத்தை மட்டும் பொதுமக்கள் பார்த்தால் அம்மாவை நினைத்துக் கதறி, கலங்கிவிடுவார்கள். அம்மாவின் உண்மை விசுவாசிகள் பார்த்தால் அவர்கள் அழுவதை யாரும் தடுக்க முடியாது. இந்தப் புகைப்படங்களை எல்லாம் யாரும் பார்க்கக் கூடாது என்று அம்மா தனக்கு உத்தரவிட்டிருப்பதாகவும், அதனால் அவற்றை எக்காரணத்தை முன்னிட்டும் வெளியிடக் கூடாது என்றும் சிறை சென்ற சசிகலா தனது குடும்பத்தினருக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
அதிமுகவில் நடக்கும் போட்டா போட்டிகளைப் பார்த்தால் சசிகலா குடும்பத்தினர் தங்களது தரப்பு நியாயத்தை வெளிப்படுத்த அம்மாவின் மருத்துவமனை புகைப்படங்களை விரைவில் வெளியிடுவார்கள் என்று தெரிகிறது’’ என்றார் அந்த அதிமுக பிரமுகர் கண்கள் கலங்கியபடி.

கருத்துகள் இல்லை: