புதன், 16 ஆகஸ்ட், 2017

பேய்களின் ஆட்சியில் – 71 வது சுதந்திர தினம் ...


ஆக்சிஜன் பற்றாக்குறையால் பாஜக ஆளும் உ.பி மாநிலத்தில் 70 குழந்தைகள் மரணமடைந்துள்ள நிலையில் பல குழந்தைகளின் உயிரை தன் சொந்த முயற்சியில் காப்பாற்றியவர் கஃபீல் கான். ஆனால் இப்போது அவர் யோகி அரசால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்//

மாண்புமிகு பாரதப் பிரதமர் திருவாளர் மோடி அவர்களின் உரையைப் புரிந்து கொள்வதிலும், அதில் அவர் உதிர்த்துள்ள பொய்களையும் உண்மைகளையும் இனம் பிரித்துப் பார்ப்பதிலும் சில பல சிக்கல் உண்டு. முதலில், நரகல் ஆற்றில் நீந்தும் திறமை வேண்டும்; அடுத்து, அக்காமாலாவை அசூயை இன்றிக் குடிக்கும் ஆற்றல் வேண்டும்; மேலும், உண்மைகளை அறிந்து வெடித்துப் போகாத இதயம் வேண்டும். மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள்; நாம் மாண்புமிகு பிரதமர் அவர்களின் சுதந்திர தின வாய்ப்போக்கில் ஒரு சில அம்சங்களை மாத்திரம் பிரித்து மேயப் போகிறோம்.
சவடால் 1 : உலகமே வியக்கும் வண்ணம் மிக குறைந்த காலத்தில் ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி வெற்றி பெற்றுள்ளது. உண்மை : பல்வேறு அரசாங்கங்களின் சுமார் 17 ஆண்டு கால முயற்சியின் பலனாகவே ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டது. அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி மாநில அரசுகளின் உரிமைகளைப் பறித்துள்ளதோடு, குழப்பமான வரிவிதிப்பு முறைகளையும் கொண்டுள்ளது. இதன் காரணமாக சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் மீளமுடியாத சிக்கலில் மாட்டியுள்ளனர். ஜி.எஸ்.டி முறையை முன்பு அறிமுகம் செய்த காங்கிரசின் ப.சிதம்பரமே, மோடி அரசால் அமல்படுத்தப்பட்ட வரிவிதிப்பு முறை ஜி.எஸ்.டியின் அடிப்படைக்கே முரணானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

சவடால் 2 : புதிய முறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் நெடுஞ்சாலைகள் இரு மடங்கு வேகத்தோடு நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. உண்மை : நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டுள்ள தரவுகளின் படி 2001 -ம் ஆண்டிலிருந்து பார்த்தால், 2012 – 13 காலப்பகுதியில் தான் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் அதிவேகத்துடன் நிர்மாணிக்கப்பட்டன.

சவடால் 3 : இரயில் பாதைகள் இருமடங்கு வேகத்துடன் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. உண்மை : இதுவும் பொய். 2009 – 10 கால கட்டத்தில் இருந்து இரயில்வே துறையால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளைக் கொண்டு பரிசீலித்தால், 2011 – 12 காலகட்டத்தில் தான் அதிகளவில் புதிய இரயில்வே பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சவடால் 4 : சுதந்திரத்திற்கு பின்னும் பல்லாண்டுகள் இருளில் மூழ்கியிருந்த 14,000 கிராமங்களுக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. உண்மை : இதில் பாதி உண்மையும் பாதி பொய்யும் உள்ளன. மின் இணைப்பு இல்லாத கிராமங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள 18,452 கிராமங்களில் 14,834 கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது சரி தான். ஆனால், நாடெங்கும் உள்ள வீடுகளில் நான்கில் ஒரு வீட்டுக்கு மின் இணைப்பு கிடையாது. அதாவது கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது – வீடுகளுக்கு முழுமையாக மின் இணைப்பு வழங்கப்படவில்லை. அதுவும், மின் வழங்கல் மற்றும் பகிர்மானம் தனியார்மயமாக்கப்பட்டுள்ளதால், தனியார் முதலாளிகளுக்குப் புதிய சந்தைகளைத் திறந்து விடும் நோக்கிலேயே புதிய கிராமங்கள் மின் இணைப்பு வலைப்பின்னலுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

சவடால் 5 : 29 கோடி பேருக்கு வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. உண்மை : ஆகஸ்டு 8 வரையிலான காலகட்டத்தில் 29.48 கோடி புதிய ஜன் தன் கணக்குகள் துவங்கப்பட்டது உண்மை தான். ஆனால், இதில் மூன்றில் ஒருபகுதி கணக்குதாரர்களுக்கு ஏற்கனவே வங்கிக் கணக்கு இருந்தது. மேலும், புதிதாக திறக்கப்பட்ட கோடிக்கணக்கான புதிய வங்கிக் கணக்குகளில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை வரை பணப்பரிமாற்றம் நடக்கவில்லை. பெருவாரியான மக்களை வங்கி வலைப்பின்னலுக்குள் இழுத்து அவர்களின் நிதிப் பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கும் நோக்கில் துவங்கப்பட்ட ஜன் தன் யோஜனாவை வளர்ச்சித் திட்டம் என பீற்றிக் கொள்ள ஏதுமில்லை என்பதே உண்மை.

சவடால் 6 : ஒன்பது கோடி விவசாயிகளுக்கு மண் ஆரோக்கிய அட்டை வழங்கப்பட்டுள்ளது. உண்மை : விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட 9.06 கோடி மண் ஆரோக்கிய அட்டையில் சுமார் 2.5 கோடி அட்டைகளில் தான் விவசாய மண்ணின் ஆரோக்கியம் குறித்த தகவல்கள் உள்ளன என்பதே உண்மை.

சவடால் 7 : சுமார் 2 கோடி ஏழைக் குடும்பங்கள் விறகடுப்பிலிருந்து எல்.பி.ஜி அடுப்புக்கு மாற்றப்பட்டுள்ளன. உண்மை : 2.5 கோடி புதிய சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டிருந்தாலும், மொத்த சமையல் எரிவாயு பயன்பாட்டுத் தரவுகளின் படி பார்த்தால் புதிதாக இணைப்பு வாங்கியவர்கள் பெரும்பாலும் எரிவாயு உருளைகளை வாங்கிப் பயன்படுத்தவே இல்லை.

சவடால் 8 : பணமதிப்பழிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து 3 லட்சம் கோடி கருப்புப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. உண்மை : 1.08.2017 அன்று பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அளிக்கப்பட்ட பதிலின் அடிப்படையில் கருப்புப் பணமாக இனங்காணப்பட்ட தொகையின் மதிப்பு 18.5 ஆயிரம் கோடி. இதே 2013 – 14 காலகட்டத்தில் நடந்த மன்மோகன் சிங் அரசில் அறிமுகம் செய்யப்பட்ட நேரடி வரிவிதிப்பின் விளைவாக கருப்புப் பணமாக இனங்காணப்பட்ட தொகையின் அளவு 90.4 ஆயிரம் கோடி. வழக்கமாக பிரதமர் ஆற்றும் சுதந்திர தின உரையை விட இம்முறை சுருக்கமான உரையாக அமைந்து விட்டதென ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. சுருக்கமான உரையிலேயே இத்தனை பொய்கள் என்றால், விரிவாக உரையாற்றியிருந்தால்? மேலும் பொய்களுக்கு : Fact check: From LPG subsidies to maternity leave, comparing Modi’s I-Day claims with the data Fact check: What Modi said about demonetisation in his I-Day speech and what the data shows

கருத்துகள் இல்லை: