புதன், 16 ஆகஸ்ட், 2017

தமிழகத்தைப் பலியிடும் புரோக்கர் ஆட்சி !

காண்டிராக்ட் முதல் மணல் கொள்ளை வரை அனைத்திலும் அனைவருக்கும் பங்கு வழங்குவதன் மூலம், அ.தி.மு.க. வில் ”உட்கட்சி ஜனநாயகத்தை” எடப்பாடி உருவாக்கி வருவதாக கூறுகின்றன பத்திரிகைகள்.
சுயமரியாதையே இல்லாதவனோடு சண்டை போடுவது கடினம்” என்று ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பெரியார் கூறியிருப்பதாக நினைவு. இன்று அந்த நிலையில்தான் தமிழகம் இருக்கிறது.
ஊழல் வழக்கில் சிறை செல்லவேண்டிய நிலை ஏற்பட்டபோது, முதல்வர் நாற்காலியில் அமரவைப்பதற்குப் பொருத்தமான ஒரு ”உடல்” ஜெயலலிதாவுக்குத் தேவைப்பட்டது. ”அறிவோ, சொரணையோ, தன்மானமோ கடுகளவும் இல்லாத நபர்” என்று ஜெயா-சசி குற்றக்கும்பலால், தேடி அலசித் தெரிவு செய்யப்பட்ட ”உடல்” தான் பன்னீர்செல்வம்.
அந்த பன்னீருக்கு பல் முளைத்துவிட்டது என்று தெரிந்தவுடன், அரச பதவியில் அமர்த்துவதற்கு பன்னீரைவிடத் தாழ்ந்த அடிமை என்று எடப்பாடி தெரிவு செய்யப்பட்டார்.

ஜெயலலிதாவால் வாஜ்பாயி உள்ளிட்ட பலரும் அசிங்கப்பட்டிருந்த போதிலும், மோடி முதலான அனைவருக்கும் அவர் மீது ஒரு பிரமிப்பு இருந்தது. அதற்குக் காரணம் ஜெயலலிதாவும் தங்களைப் போன்ற ஒரு பார்ப்பன பாசிஸ்டு என்பது மட்டுமல்ல; அவர் தனது காலடியில் கிடத்தி வைத்திருந்த சுயமரியாதையற்ற பிண்டங்கள்!
அந்தச் சாதனைதான் சங்க பரிவாரத்தினரை மெய்சிலிர்ப்பில் ஆழ்த்தியது. ஜெயா செத்து, சின்னம்மாவும் உள்ளே போனபின், இந்த அடிமைப் பிண்டங்கள், மோடியின் காலைத் தமது தலையில் எடுத்து வைத்துக் கொண்டு விட்டன.
நீட், ஜி.எஸ்.டி., உதய், உணவுப் பாதுகாப்புச் சட்டம், வறட்சி நிவாரணம், கடலூர்  நாகை பெட்ரோ கெமிக்கல் மண்டலம்  ஆகிய அனைத்திலும் முழுமுற்றான சரணடைவு. காவிரித் தண்ணீர் பற்றி வழமையான வெற்று அறிக்கைகூட இல்லை. பல்கலைக் கழகத் துணை வேந்தர்களைத் தேர்ந்தெடுப்பது முதல் எய்ம்ஸ் மருத்துவமனையை எந்த ஊரில் வைக்கலாம் என்பது வரை அனைத்தும் டில்லியின் சித்தம். பா.ஜ.க. கை காட்டும் அனைவர் மீதும் குண்டர் சட்டம் பாய்கிறது.
தனக்குப் படியளக்கும் மூலதனமான பெண்ணை வாடிக்கையாளர்கள் எல்லை மீறித் துன்புறுத்தினால், தரகர்கள் கூட பவ்யமான முறையில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பதுண்டு.  அத்தரகர்களைக் காட்டிலும் கேடுகெட்ட ஒரு கும்பல், தமிழகத்தை வைத்துத் தொழில் செய்து கொண்டிருக்கிறது.
தினகரன், சுதாகரன், எடப்பாடி, பன்னீர் என்று அ.தி.மு.க.-வில் பல கோஷ்டிகள். இத்தகைய கோஷ்டித் தகராறுகளின் போது கட்சி உடைந்து ஆட்சி கவிழ்வதைத்தான் நாம் இதுகாறும் கண்டிருக்கிறோம். இங்கேயோ, எத்தனை கோஷ்டிகளாகப் பிரிந்து மோதிக்கொண்டாலும், மிச்சமுள்ள ஆட்சிக்காலத்தைக் காப்பாற்றிக் கொள்வதிலும், கொள்ளையைப் பங்கு போட்டுக் கொள்வதிலும் எல்லா அடிமைகளும் கவனமாக இருக்கிறார்கள்.
காண்டிராக்ட் முதல் மணல் கொள்ளை வரை அனைத்திலும் அனைவருக்கும் பங்கு வழங்குவதன் மூலம், அ.தி.மு.க. வில் ”உட்கட்சி ஜனநாயகத்தை” எடப்பாடி உருவாக்கி வருவதாக கூறுகின்றன பத்திரிகைகள்.  இந்திய நாடாளுமன்றச் சீரழிவின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் உருவாகிக் கொண்டிருக்கிறது.
18 -ஆம் நூற்றாண்டின் இறுதியில் பாளையக்காரர் ஆட்சியின் கீழ் தமிழகம் இருந்த நிலைமையை, இன்றைய சூழ்நிலை நினைவு படுத்துகிறது. பாரதிய ஜனதாக் கட்சிதான் நாம் எதிர் கொண்டிருக்கும் கிழக்கிந்தியக் கம்பெனி. ”உடம்பில் ஐரோப்பிய ரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்” என அன்றைக்கு சின்ன மருது வெளியிட்ட ”திருச்சி பிரகடனம்”தான் நினைவுக்கு வருகிறது.
இது சுயமரியாதையும் சொரணையுமற்ற தசைப்பிண்டங்களுடன், மானமுள்ள மனிதர்கள் நடத்த வேண்டிய போராட்டம். உடம்பில் அடிமை ரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள் ! வினவு

கருத்துகள் இல்லை: