செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

வானதி சீனிவாசன் ... தமிழக பா.ஜ.க-வின் ஊழல்கள் : பகுதி 1 – பெரிய வாய் அக்காவின் பெரிய ஊழல் கோப்பு!

வானதி சீனிவாசன், யாரும் சற்றும் எதிர்பாராத வண்ணம் இன்று தாங்கள் பல கோடிகளுக்கு அதிபதியாக இருக்கின்றீர்கள் என்ற உண்மை எத்தனை பேருக்கு தெரியும். – ஒரு பா.ஜ.க தொண்டர்.
தொலைக்காட்சி விவாதங்களில் அந்தக் கனிவான முகத்தை பார்க்காதவர் யாருமில்லை. எண்ணெய் தேய்த்து வாரிய சிகை, மைக்ரோ திருநீறு – நானோ பொட்டு, காட்டன் புடவை என்று பாரதிய கலாச்சாரத்தின் சர்வ லட்சணத்துடன், கொங்கு வழக்கில் ‘இனிய’ குரலில் வாதத்தை எடுத்துவைக்கும் பாங்கு….. அவர்தான் வானதி சீனிவாசன். தமிழக பாரதிய ஜனதாவின் பெண் முகம். தொண்டர்களுக்கு அவர் வானதி அக்கா. ஊடகங்களுக்கு கொள்கைகளை எடுத்தியம்பும் வானதி ‘மேடம்’.
இலக்கிய உலகில் நேர்மை, அறிவு, இலட்சியங்களின் இலக்கணங்களையும், அவ்விலக்கணங்களைப் பின்பற்றும் மேன் மக்கள் குறித்து எடுத்துச் சொல்லும் உரிமையைப் பெற்றிருப்பவர், எழுத்தாளர் திரு ஜெயமோகன்.  அவரது “அறம்” வரிசை சிறுகதைகள் – மனிதகுலத்தின் இலட்சிய மாந்தர்களைப் பற்றி படிப்போருக்கு நாமெல்லாம் என்றுமே ‘சாதா’தான் என்ற குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும் ‘பேரிலக்கியம்’.
வானதி அக்காவிற்கும் ஜெயமோகனின் அறத்திற்கும் என்ன தொடர்பு என்று கேட்பவர்கள் நுண் ரசனையற்ற முட்டாள்கள்! சென்ற 2014 பாராளுமன்றத் தேர்தலின் போது எழுத்தாளர் ஜெயமோகனும், ஜோ டி குரூஸும் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடியை ஆதரிக்கிறார்கள் என்று வானதி சீனிவாசன் தினமலரிடம் கூறியிருந்தார். அதே போன்று அறம் புகழ் ஜெயமோகனின் வெண்முரசு புத்தக வெளியீட்டு விழா சென்னை எழும்பூரில் நடந்த போது வானதியும் கலந்து கொண்டார்.

இந்த இலக்கிய வேள்வியில் ஐக்கியமாவதற்கு முன்பு அக்கா அன்று காலையில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு ‘அம்மா’ செல்லமாக தடை போட்டதால், சங்க பரிவாரம் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே செல்லமாக ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. அதில்தான் அக்கா ஆவேசமாக முழக்கம் போட்டுவிட்டு, மாலையில் அமைதியாக வெண்முரசு-வில் ஐக்கியமானார்.
சென்ற 2016 சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் அக்கா போட்டியிட்டார். அதே  கோவையில் “விஷ்ணுபுரம் வாசகர் வட்டம்” எனும் ஜெயமோகனின் ’தீவிரவாதப் படை’ ஒன்று இயங்கி வருகிறது. அந்த வட்டத்தில் முக்கியமான தாதாவாக திகழும் திருவாளர் அரங்கசாமி அவர்கள் அக்காவிற்காக ஒரு வார்டு கவுன்சிலரை விடவும் அதிகமாகப் பிரச்சாரம் செய்தார், வேலை செய்தார். காரணம் காந்திக்கு அடுத்த படியாக கோவையில் ஜனித்த ஒரு மகாத்மா, வானதி அக்காதான் என்பது அவரது கிட்னி முதல் ’அட்ரினல் கிளாண்ட்’ வரை உணர்ந்து கொண்ட ஒன்று.
எனினும் சர்க்கரை அதிகரிப்பினால் கிட்னி செயலிழந்து டயாலிசிஸ்  செய்ய வேண்டிய நிலைமை ஏற்படுவதும் உண்டுதான். ஒருவன் கொழுப்பெடுத்துத் திரிகிறான் என்பது மக்கள் வழக்கில் உண்டு. மருத்துவர ரீதியில் கொழுப்பினால் மாரடைப்பு வருவதும் உண்டு. இங்கோ எளிமையின் சின்னமாக மகாத்மாவாக, அறம் கோஷ்டியனரால் அக்காவாக போற்றப்படும் வானதி சீனிவாசனுக்கு ஊழல் கொழுப்பேறிய கதையைப் பார்க்க இருக்கிறோம்.
பா.ஜ.க மற்ற கட்சிகளில் இருந்து வேறுபட்டது (A party with a Difference) என்று பாஜகவினர் விளம்பரப்படுத்திக் கொள்கின்றனர். மற்ற கட்சிகள் எல்லாம், குடும்ப ஆதிக்கம், ஊழல், உட்கட்சி பூசல் போன்றவற்றால் அடையாளம் காணப்படும் போது, பா.ஜ.க அவற்றுக்கு எதிரான கட்சியாக, ஹிந்துப் பண்பாட்டை மீட்கும் கட்சியாக, தேசத்தின் வளர்ச்சிக்கான கட்சியாக அடையாளப்படுத்திக் கொள்கிறது.
மற்ற கட்சிகளில் இருந்து பா.ஜ.க வேறுபடுவது ஒரு விதத்தில் உண்மைதான். தி.மு.க-வின் ஊழலை அ.தி.மு.க-வும், அ.தி.மு.க-வின் ஊழலை தி.மு.க-வும் வெளியிடுவார்கள். ஆனானப்பட்ட காங்கிரசில் கூட கோஷ்டி மோதலில் வேட்டியை கிழித்துக் கொண்டாலும் அவர்களது ஊழலை எதிர்க்கட்சிகள்தான் அம்பலப்படுத்துவார்கள். ஆனால் பா.ஜ.க-வின் ஊழலை மட்டும் அவர்கள் கட்சியினரே ஆதாரத்துடன் அம்பலப்படுத்துகிறார்கள்.

திருச்செந்தூரில் 2003-ம் ஆண்டில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் வானதி சீனிவாசன் மற்றும் பாலசுப்பிரமணிய ஆதித்யன்.
வானதி சீனிவாசன் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் மின்விசிறியை தவணை முறையில் வாங்கி அதில் கடைசித் தவணை கட்ட முடியாத ஒரு எளிய நடுத்தர வர்க்க குடும்பத் தலைவியாக இருந்திருக்கிறார். அக்காவை கூட்டம் மற்றும் போராட்டங்களில் பேச அழைக்கும் பா.ஜ.கவினர் அவருக்கு போக்குவரத்து மற்றும் வழிச்செலவுக்கு பணம் கொடுத்து உதவி வந்துள்ளனர்.
ஆனால் இன்று அக்கா வானதி சீனிவாசன் சில பல கோடிகளுக்கு அதிபதி. இதை நாம் சொல்லவில்லை. இதைச் சொன்னது அதே பா.ஜ.க கட்சியைச் சேர்ந்தவரும், திருச்செந்தூரில் இருக்கும் முக்கிய பிரமுகருமான பாலசுப்பிரமணிய ஆதித்யன். இனி அவரே பேசுகிறார், கேளுங்கள்.
“கடந்த 2003 -ம் ஆண்டு நான் பாஜக தூத்துக்குடி மாவட்ட பொருளாளராகவும், திருச்செந்தூர் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளராகவும் இருந்த போது திருச்செந்தூரில் ஆர்பாட்டம் நிகழ்ச்சிக்கு பேச வந்து இருந்தீர்கள். வழிச் செலவு பணமும் தந்து சில நூறையும் தந்தோம்.
அப்போது நீங்கள் ஒரு நடுத்தர வாழ்வில் இருந்தீர்கள் என்பதை நன்கு அறிவேன்.
அது மட்டுமல்ல மையிலாப்பூரில் நம் கட்சி நிர்வாகிக்கு சொந்தமான வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடையில் ரூ 700 விலை உள்ள Sealing Fan 5 Installment க்கு வாங்கி அதில் 4 தவணை மட்டும் தாங்கள் கட்டிய விபரம் உட்பட அரசல் புரசலாக நம் பாஜகவினரே பல முறை பேசிக்கொண்டு இருந்துள்ளார்கள். இது கூட உங்களை சிறுமைப் படுத்த இங்கு குறிப்பிடவில்லை. உங்கள் பொருளாதார சூழலை சுட்டிக் காட்டவே விரும்புகிறேன் . ஒரு தவணை உங்களால் கட்ட முடியவில்லையாம்.
யாரும் சற்றும் எதிர்பாராத வண்ணம் இன்று தாங்கள் பல கோடிகளுக்கு அதிபதியாக இருக்கின்றீர்கள் என்ற உண்மை எத்தனை பேருக்கு தெரியும்.”
டந்த 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மைலாப்பூர் தெற்குத் தொகுதியில் போட்டியிட்டார் வானதி சீனிவாசன். அப்போது தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் அவரது சொத்து மதிப்புகள்:
அசையும் சொத்துக்கள் ரூ. 48,29,891 , அசையாச் சொத்துக்கள் ரூ. 68,80,000 , கடன் ரூ.  50,000. ஆக, மொத்த சொத்து மதிப்பு ரூ. 1,16,59,891.
2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட்டார் வானதி சீனிவாசன். அப்போது தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் அவரது சொத்து மதிப்புகள்:
அசையும் சொத்துக்கள் ரூ. 1,17,51,853, அசையாச் சொத்துக்கள் ரூ. 5,30,50,000, கடன் ரூ. 35,17,344. ஆக, மொத்த சொத்து மதிப்பு ரூ. 6,12,84,509.

வானதி அவரது கணவர் சீனிவாசனுடன்.
ஐந்தாண்டுகளில் அக்காவின் சொத்து மதிப்பு சுமார் ஐந்து மடங்கு அதாவது 525 சதவீதம் உயர்ந்துள்ளது. குறுகிய காலத்தில் இவ்வளவு பணமும் சொத்துக்களும் எப்படி வந்தன? அத்தனையும் தானும் தனது கணவர் சீனிவாசனும் வழக்குறைஞர் தொழில் செய்து சம்பாதித்தவை என்று வானதி சமாளிக்கக் கூடும்.
ஆனால், இந்தச் சொத்துக்கள் வானதி குடும்பத்தினர் ஊழல்களாலும், தங்களது அரசியல் சொல்வாக்கை பயன்படுத்தி முறைகேடாக சம்பாதித்தவை என்று அம்பலப்படுத்துகிறார்கள் பாலசுப்பிரமணிய ஆதித்யனும், பா.ஜ.க-வைச் சேர்ந்த அவரது நண்பர் சங்கரநாராயணனும். “சைலாக் சிஸ்டம்ஸ்” (Zylog Systems) என்ற நிறுவனத்தில், வானதி சீனிவாசன் திட்டமிட்டு அவரது தம்பி சிவகுமார் கந்தசாமியை களமிறக்கி நடத்திய வங்கி மோசடியை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அம்பலப்படுத்தியுள்ளார் பாலசுப்பிரமணிய ஆதித்யன். “சிஸ்டம்” சரியில்லை என்று பா.ஜ.க தனது கட்சிக்குள் சேர்க்க விரும்பும் ரஜினி சொல்லியிருந்தாலும் அவரது சிஸ்டத்தில் பாஜக-வின் இந்த “சிஸ்டமேடிக்” ஊழல் வராது.
சென்னையிலுள்ள சைலாக் சிஸ்டம்ஸ் (Zylog Systems) 1995 -ம் ஆண்டு துவங்கப்பட்ட மென்பொருள் நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் சட்ட ஆலோசகராக வானதியின் கணவர் சீனிவாசன் இருந்திருக்கிறார்.  வானதியின் தேர்தல் பிரமாணப் பத்திரத்தின் படி அந்நிறுவனத்தின் 20,000 பங்குகளையும் வைத்துள்ளார்.
சைலாக் சிஸ்டம்ஸ், ஜூலை 20, 2007 அன்று ஆரம்ப பொதுப் பங்கு விநியோகத்தின் (IPO) மூலம் முதலீடுகளை பெறுவதற்காக ரூ.10 முக மதிப்புள்ள 3,600,000 பங்குகளை வெளியிட்டது. வர்த்தகம் தொடங்கும் போது அதன் ஆரம்ப விலை ரூ. 350-ஆக நிர்ணயிக்கப்பட்டது. பங்குச் சந்தையில் பங்கு வர்த்தகம் செய்வதற்கு, யார் வசம் எவ்வளவு பங்குகள் உள்ளன, எத்தனை பங்குகள் சந்தையில் வெளியிடப்படுகின்றன போன்ற இதர விவரங்களை பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடம் (SEBI) கொடுக்க வேண்டும்.
சைலாக்கின் நிறுவனர்கள் தங்கள் வசமுள்ள பங்குகளைப் பற்றி பொய்யான மற்றும் தவறான தகவல்களை கொடுத்ததாகக் கண்டறிந்த செபி, இந்நிறுவனதையும், அதன் நிறுவனர்கள் சுதர்ஸன் வெங்கட்ராமன் மற்றும் ராமானுஜம் ஷேஷரத்தினம் ஆகியோரையும் பங்கு சந்தையிலிருந்து தடை செய்து 2012 -ம் ஆண்டு உத்தரவிட்டது. இதையடுத்து அந்நிறுவனத்தின் பங்குகள் அதல பாதாளத்திற்கு வீழ்ந்தன. இந்த காலத்தில் இந்நிறுவனத்தின் சட்ட ஆலோசகராக இருந்தவர் வானதியின் கணவர் சீனிவாசன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமின்றி, இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் வசூலித்த சேவை வரி சுமார் ரூ.3 கோடியை அரசிடம் செலுத்தாமல் மோசடி செய்துள்ளது. மேலும், 2012 -ம் ஆண்டு காலகட்டத்தில் தனது ஊழியர்களுக்கு பல மாதங்கள் ஊதியம் கொடுக்காமலும் இருந்துள்ளது. ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதியையும் (PF) அரசிடம் செலுத்தாமல் மோசடி செய்துள்ளது.

வானதியின் தம்பி சிவக்குமார் கந்தசாமி (வலது)
சைலாக் நிறுவனம் தனது தொழில் வர்த்தக நடவடிக்கைகளுக்காக 2009-2013 காலகட்டத்தில், யூனியன் வங்கி, பெடரல் வங்கி, ஆந்திரா வங்கி உள்ளிட்ட பல வங்கிகளில் பல நூறு கோடிகளை கடனாகப் பெற்றது. ஆனால், அவற்றை தொழில் வர்த்தகத்திற்கு பயன்படுத்தாமல், முறைகேடாக பல்வேறு சொத்துக்களை வாங்கிக் குவித்தனர் அதன் நிறுவனர்கள். அவற்றுள் சைலாக்கின் ஐரோப்பிய கிளை (Zylog systems Europe Ltd) வாங்கிய சொத்துக்களும் அடக்கம். அதாவது இந்திய வங்கிகளில் வாங்கிய கடனைக் கொண்டு வெளிநாட்டில் முறைகேடாக முதலீடுகளை செய்துள்ளனர். இந்த கால கட்டத்தில் ஐரோப்பிய கிளையின் இயக்குனராக வானதியின் தம்பி சிவக்குமார் கந்தசாமி இருந்துள்ளார்.
மேலும், வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் நிலுவைத் தொகையையும் கட்டாமல் ஏமாற்றி வந்துள்ளது இந்நிறுவனம். இதனால் 2013-ம் ஆண்டு அவ்வங்கிகள் சுமார் ரூ.740 கோடியை வராக்கடனாக அறிவித்தன. அத்துடன், மத்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் சேர்த்து அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. இந்திய பொதுத்துறை வங்கிகளை பட்டை நாமம் போட்டு ஏமாற்றிய கயவர்கள் பட்டியலில் மல்லையா மற்றும் இதர முதலாளிகள் மட்டுமல்ல, சைலாக் நிறுவனர்களான சுதர்ஸன் வெங்கட்ராமன் மற்றும் இராமானுஜம் ஷேஷரத்தினம் போன்ற ஆர்.எஸ்.எஸ்-காரர்களின்  நிறுவனங்களும் உள்ளன. ஆம், வானதியின் வர்க்கம் மேம்பட ‘வர்த்தக’ வசதி செய்து கொடுத்த சைலாக் நிறுவனத்தின் மூலவர்கள் சாட்சாத் ஸ்வயம் சேவகர்கள். இதன் விரிவான செய்திகளை இத்தொடரின் இரண்டாம் பாகத்தில் பார்க்கலாம்.
காங்கிரசைச் சேர்ந்த கஜநாதன் இந்த ஊழல் நடந்த போது சைலாக் நிறுவனத்தின் இயக்குனராக இருந்துள்ளார். இந்த பின்னணியில் தான் 2009-2013 காலகட்டத்தில் வங்கிகளில் கடன்களை வாங்கிக் குவித்துள்ளது சைலாக். கஜநாதன், வானதி மற்றும் அவரது கணவர் அனைவருமே காங்கிரஸ் கட்சியின் ஞானதேசிகனிடம், ஜூனியர் வழக்குரைஞர்களாக பயிற்சி பெற்றவர்கள் தான். ஆக இது திட்டமிட்ட முறையில் இந்திய வங்கிகளை ஏமாற்றி முறைகேடாக சொத்துக்களை வாங்கிய ஊழல்.

வானதி, அவரது கணவர் மற்றும் சைலாக் இயக்குநர்கள்.
தமிழகத்தில் கூட மாவட்ட அளவில் சட்டவிரோதமாகவும், சட்டப்பூர்வமாகவும் ‘தொழில்’ செய்யும் தி.மு.க – அ.தி.மு.க நபர்களிடையே ‘புரிந்துணர்வு’ இயல்பாக இருக்கும். ஆட்சியில் இருக்கும் கட்சிக்காரர், எதிர்க்கட்சிக்காரருக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுப்பது அப்புரிந்துணர்வின் தர்மமாகும். அதே விதி காங்கிரஸ் – பா.ஜ.க-விற்கும் உண்டு.
கடன் கொடுத்த வங்கிகள், கடன் தீர்ப்பாயத்திலும், உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தன. அதில் அதிகாரபூர்வ கடன் தீர்ப்பாளரை (Official Liquidator) நியமித்து சொத்துக்களை முடக்கி, அச்சொத்துக்களை ஏலம் விட்டு நிலுவையைக் கட்ட நவம்பர் 2014 -ல் தீர்ப்பளித்தது, சென்னை உயர் நீதிமன்றம்.
மோடி அரசு பதவியேற்ற பின் நவம்பர், 2014-ல் வானதியின் கணவர் சு. சீனிவாசன் மத்திய அரசின் துணை சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்படுகிறார். இதற்குப் பின் 2015 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த சைலாக் நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் வானதியின் தம்பி சிவக்குமார் கந்தசாமி சைலாக் தாய் நிறுவனத்தின் இயக்குனராக நியமிக்க பரிந்துரைக்கப் படுகிறார்.
மோடி அரசு, “என் நாடு, என் அரசு, என் குரல்” என்ற முழக்கத்துடன் அரசில் மக்கள் பங்கேற்கும் திட்டத்தை அறிவித்து ’என் அரசு’ (mygov.in) என்ற வலைத்தளத்தை நடத்தி வருகிறது. அந்த வலைத்தளத்தை பராமரிக்கும் ஒப்பந்தத்தை சைலாக் நிறுவனம் 2015 -ம் ஆண்டில் பெற்றது.
இப்போது எல்லாப் புள்ளிகளையும் இணைத்து பாருங்கள். தலை மோடி அரசு முதல் வால் வானதி வரை இந்த ஊழல் வரலாற்றில் முக்கியமான பாத்திரத்தை ஆற்றியுள்ளார்கள்.

சைலாக் நிறுவனத்தின் முறைகேடு வெளிவந்த பத்திரிகைச் செய்தி!
இதனிடையே சைலாக் நிறுவனத்தின் துணை நிறுவனமான சைலாக் சிஸ்டம்ஸ் இந்தியா நிறுவனம் 2009 -ம் ஆண்டு யூனியன் வங்கியிலிருந்து ரூ.61.5 கோடியை குறுகிய கால கடனாகப் பெற்றுள்ளது. இணைய சேவை வழங்கல் தொடர்பான வைஃபை (WiFi) திட்டத்தில் பொருட்களை வாங்க முதலீடு செய்வதற்கென்று இந்தக் கடன் பெறப்பட்டது. இந்தக் கடனை சைலாக் சிஸ்டம்ஸ் இந்தியா நிறுவனம் திருப்பி செலுத்தவில்லை.
அது மட்டுமல்ல, போலியான நிறுவனங்களை உருவாக்கியும், போலியான ரசீதுகளை உருவாக்கியும் பொருட்களை வாங்கியதாக கணக்குக் காட்டியது சைலாக் சிஸ்டம்ஸ் இந்தியா நிறுவனம். அப்படி உருவாக்கப்பட்ட பெயர்ப்பலகை நிறுவனங்களின் மூலம், வங்கியில் பெறப்பட்ட நிதியை வெளியேற்றி விட்டு, நட்டமடைந்து விட்டதாக ஏமாற்றியிருக்கிறார்கள். இதைக் கண்டறிந்த யூனியன் வங்கி, சைலாக் நிறுவனர்கள் மீது மத்திய புலனாய்வு அமைப்பிடம் (சி.பி.ஐ) புகார் அளித்தது. மோசடி மற்றும் குற்றச் சதி ஆகிய பிரிவுகளின் கீழ் ஜனவரி 30, 2017 அன்று முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
இவற்றை பாலசுப்பிரமணிய ஆதித்யன் அம்பலப்படுத்துவதன் அவசியமென்ன என்பதை பின்னர் பார்ப்போம். இவற்றை அம்பலப்படுத்திய உடன்  எட்செர்வ் சாஃப்ட் சிஸ்டம்ஸ் ஊழலில் தொடர்புடைய பா.ஜ.கவின் கே.டி ராகவன் தனது ஃபேஸ்புக் நட்பு பட்டியலில் இருந்து பாலசுப்பிரமணிய ஆதித்யனை விலக்கம் செய்கிறார், கண்டிக்கிறார். அதோடு கட்சிக்குள்ளும், வழக்கு தொடர்பாகவும் வானதிக்கு ஆதரவளிக்கிறார்.

வானதியின் ஊழலை அம்பலப்படுதும் பாலசுப்ரமணிய ஆதித்தன் மற்றும் சங்கர நாராயணன்
ஆனால் கே.டி.ராகவனது எட்செர்வ் சாஃப்ட் சிஸ்டம்ஸ் ஊழல் குறித்து ஒரு ஸ்கீரின் ஷாட் பதிவு போட்ட எஸ்.வி.சேகரை பேஸ்புக் நட்பு பட்டியலில் இருந்து ராகவனால் நீக்க முடியாது. ஏனெனில் அந்த அம்பி இந்த அம்பியை விட பெரிய அம்பி. பாலசுப்பிரமணியனோ திருச்செந்தூரில் வசிக்கும் ஒரு சூத்திரன் என்பதால் சார்வாள் உடனே ஆக்சன் எடுத்து விட்டார்.
இப்பேர்ப்பட்ட யோக்கியர்கள் தான் மோடியின் பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் போது  தொலைக்காட்சி விவாதங்களில் கருப்புப் பணத்தை மீட்பதற்கு நாட்டு மக்கள் தியாகம் செய்ய வேண்டும் என்று ஆணையிட்டார்கள். ஏடிஎம் வரிசையில் நின்று செத்த மக்களைக் கொச்சைப் படுத்தினார்கள். தொட்டதுக்கெல்லாம் திராவிட இயக்கம் தமிழகத்தை நாசமாக்கிவிட்டது என்று முதலைக் கண்ணீர் வடித்தார்கள்.
அரசின் ஒப்பந்தப்புள்ளி கோரல் அழைப்பிற்கு குறைவான தொகையை சமர்ப்பிக்கும் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்படும். இதில் என்ன விதிமீறல் அல்லது முறைகேடு இருக்கிறது. மேலும், ஒரு நிறுவனத்தின் நிறுவனர்கள் செய்த முறைகேடுகளுக்கு வானதியோ அல்லது பாஜகவோ எப்படி பொறுப்பாக முடியும் என்றும் சிலர் வாதிடக்கூடும். இது குறித்து அடுத்த பகுதியில் பார்ப்போம்.
மேலும், வானதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பாலசுப்பிரமணியனின் குற்றச்சாட்டிற்கு அளித்த பதில் பற்றியும், சைலாக் நிறுவனத்தின் நிறுவனர்களான சுதர்ஸன் வெங்கட்ராமன் மற்றும் ராமானுஜம் ஷேஷரத்தினம் ஆகியோரைப் பற்றியும் இனி பார்ப்போம்.
ரஜினி நடிக்கும் எந்திரன் – 2.0 படத்தை தயாரிக்கும் லைக்கா மொபைல் கம்பெனியின் ஊழல் குறித்து ஏற்கனவே எழுதியிருக்கிறோம். அந்தப் படத்தின் வசனகர்த்தா சாட்சாத் ஜெயமோகன் என்பதால் அவருக்கு இந்த கார்ப்பரேட் மோசடிகள் குறித்து அதிர்ச்சி ஏதும் இருக்காது. ஏனெனில் அந்தப்படத்தின் முன்னோட்ட விழாவிற்கு மும்பை சென்ற போதுதான் அவர் மோடியின் பணமதிப்பழிப்பு நடவடிக்கையை நேரடியாக ஆதரித்தார். அவரது அறமே எப்படி பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதல்ல, சம்பாதித்த பணத்தில் எப்படி இலக்கிய ரசனையாக வாழ்கிறார்கள் என்பதே!
ஆயினும் வானதி சீனிவாசனின் இந்த ஊழலை மறுப்பதற்கு அவரோ அவரது பக்தாள் கூட்டமோ கடப்பாறையை விழுங்க வேண்டியிருக்கும்.
(தொடரும்)
– வினவு புலனாய்வுக் குழு
(இந்த ஊழலின் ஆதாரங்கள் பல திரு பாலசுப்ரமணியன் ஆதித்யனால் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டவைதான். அவற்றை சரி பார்த்து, ஆராய்ந்து, வேறு சில தகவல்களை தேடிப் பெற்று தொகுத்து இங்கே தருகிறோம்.)
ஆதாரங்கள் :
  1. ஆர்.எஸ்.எஸ்-ன் குருஷேத்திரம் – ஜெயமோகனின் பிருந்தாவனம்
  2. BALASUBRAMANIA ADITYAN
  3. VANTHI SRINIVASAN(CRIMINAL & ASSET DECLARATION) – 2011
  4. COIMBATORE (SOUTH)VANATHI SRINIVASAN(CRIMINAL & ASSET DECLARATION)
  5. ZYLOG SYSTEMS LIMITED IPO (ZYLOG IPO) DETAIL
  6. SIVAKUMAR KANDASWAMY
  7. ZYLOG SYSTEMS EUROPE LIMITED
  8. ASSISTANT SOLICITORS GENERAL IN THE VARIOUS HIGH COURTS
  9. OUTCOME OF BOARD MEETING (AGM ON SEPT 28, 2015)
  10. http://mygov.in
  11. UNION BANK OF INDIA COMPLAINT ON ZYLOG INDIA AND CBI FIR
  12. BJP கே.டி. ராகவன் மறைக்கும் கருப்புப் பண ஊழல் – ஆதாரங்கள்
_____________

கருத்துகள் இல்லை: