ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

பன்னீரின் மராட்டிய சனீஸ்வர பூஜை!

ஓ.பி.எஸ். நடத்திய மராட்டிய  சனீஸ்வர பூஜை!
துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பதவி ஏற்புக்காக டெல்லி சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் ஆகியோர் பாஜக-வின் முக்கிய பிரமுகர்களைச் சந்தித்துக்கொண்டிருக்க... இரு அணிகள் இணைப்பு என்ற பேச்சு சூடு பிடித்தது.
டெல்லியில் ஆகஸ்ட் 11ஆம் தேதி பிரதமரைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு குறித்து பிரதமரிடம் தமிழகத்தின் நிலையை வலியுறுத்தியதாக தெரிவித்தார். மேலும், தமிழக விவகாரங்களைக் கவனித்துவந்த வெங்கையா நாயுடுவையும் சந்தித்துப் பேசினார் எடப்பாடி.
இதேநேரம் ஓ.பன்னீர் தரப்பும் டெல்லியில் முகாமிட்டு தேர்தல் ஆணையம் உள்ளிட்ட சில இடங்களில் தங்கள் பணிகளைக் கவனித்தனர். ஆனால் ஓ.பி.எஸ்ஸுக்குப் பிரதமரைச் சந்திக்க உடனடியாக அனுமதி கிடைக்கவில்லை.

இந்த நிலையில் ஆகஸ்ட் 12ஆம் தேதி சனிக்கிழமை, திடீரென தன் சகாக்களான கே.பி.முனுசாமி, மைத்ரேயன், செம்மலை, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருடன் திடீரென மும்பைக்குப் பயணமானார் ஓ.பன்னீர். மராட்டிய மாநிலம் அகமதுநகர் மாவட்டத்திலுள்ள சனி ஷிங்னபூர் என்ற கோயிலுக்குதான் சென்றார் பன்னீர். அங்கே தன் குழுவினருடன் சிறப்பு பூஜை நடத்தினார்.
தமிழகத்தில் சனீஸ்வரருக்கு எப்படி திருநள்ளாறு கோயில் இருக்கிறதோ அதேபோல, மராட்டிய மாநிலத்தில் இருக்கும் மிக புகழ்பெற்ற சனீஸ்வரர் கோயில்தான் சனி ஷிங்னபூர் கோயில்.
இக்கோயில் அமைந்திருக்கும் கிராமத்தில் எந்த வீடுகளுக்கும் கதவுகள் கிடையாது; பூட்டுகள் கிடையாது. அவ்வூரில் அமைந்திருக்கும் யூகோ வங்கிக்குக்கூட கதவுகள் இல்லை என்கிறார்கள். அந்த அளவுக்கு சனீஸ்வரர் பாதுகாப்பார் என்ற நம்பிக்கை கொண்ட கிராமம் இது
அந்தக் கோயிலுக்குச் சென்று சனீஸ்வரரை வழிபட்டு சிறப்பு பூஜை நடத்தியிருக்கிறார்கள் ஓ.பன்னீர் குழுவினர். இந்த பூஜையை முடித்துவிட்டு பன்னீர் குழுவினர் மீண்டும் டெல்லி திரும்பி, சில முடிவுகளை மேற்கொண்டுவிட்டுதான் சென்னை திரும்புவார்கள் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேச்சாக இருக்கிறது.
இந்த நிலையில் டெல்லி வட்டாரத்தில் இருந்து கிடைக்கும் இன்னொரு தகவல் அதிமுக-வினரை மேலும் அதிர வைப்பதாக இருக்கிறது. அதிமுக-வின் ஓபிஎஸ், எடப்பாடி அணி என இரு தரப்புக்கும் நெருக்கமானவரான தொழிலதிபர் சேகர் ரெட்டி கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். கடந்த மே மாதம் அவருக்கு ஜாமீன் அளிக்கப்பட்டு நிபந்தனைப்படி டெல்லியில் தங்கி அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.
சேகர் ரெட்டி மூலமாக கிடைக்கப்பெற்ற தரவுகள் மூலம் அதிமுக-வின் இரு அணிகளிடமும் ‘டெல்லி’ வேறு வகையான மூவ்கள் சிலவற்றை நடத்திவருகிறது என்பதுதான் அந்தத் தகவல். மின்னமம்பலம்

கருத்துகள் இல்லை: