இரசியாவில் உள்ள அலாபினோ பகுதியில் கடந்த ஜூலை 29
முதல் சர்வதேச இராணுவ விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் இந்தியா உட்பட 19 நாடுகள் பங்கேற்றன. முதல் சுற்றுப்
போட்டிகளில் இந்திய இராணுவ டாங்கிகள் வெற்றி பெற்றன. ஆனால் கடந்த ஞாயிறு
அன்று நடைபெற்ற போட்டியில் பங்கேற்ற இந்திய இராணுவத்தின் டாங்கிகள்
போட்டியின் போதே பழுதாகி போட்டியில் தகுதியிழந்து வெளியேற்றப்பட்டன.
டில்லியில் அணிவகுக்கும் டி-90-பீஷ்மா ரக டாங்கிகள்
இரசியாவால் 2013ம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வரும் இப்போட்டிகளில்
கடந்த 3 ஆண்டுகளாக இந்திய இராணுவம் பங்கேற்று வருகிறது. இதற்கு முந்தைய
ஆண்டுகளில் இரசியா வழங்கிய T-90 ரக டாங்கிகளைக் கொண்டு இப்போட்டியில்
பங்கேற்றது இந்திய இராணுவம். இந்த ஆண்டு, இரசியாவிடமிருந்து உரிமம் பெற்று
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘T-90-பீஷ்மா’ என்ற டாங்கிகளைக் கொண்டு
போட்டியில் களம் இறங்கியிருக்கிறது.பந்தயத்தில் கலந்து ஓடிக் கொண்டிருக்கும் போதே பிரதான டாங்கியின், காற்றாடி இணைப்புப் பட்டை (ஃபேன் பெல்ட்) அறுந்தது. மாற்றுக்காக ஏற்பாடு செய்து கொண்டு செல்லப்பட்ட மற்றொரு டாங்கி உடனடியாகக் களமிறக்கப்பட்டது. அதுவும் பந்தயத்தில் கலந்து கொண்டு ஓடத் தொடங்கியது. இலக்கை அடைய வெறும் 2 கிமீ மட்டுமே இருந்த தருணத்தில் அதன் எஞ்சின் ஆயில் ஒழுக ஆரம்பித்தது. அதன் காரணமாக இந்திய டாங்கியால் பந்தய தூரத்தை நிறைவு செய்ய முடியவில்லை.
சர்வதேச பார்வையாளர்கள் மத்தியில் பெரும் தலைக்குனிவோடு இப்போட்டிகளிலிருந்து வெளியேறியது இந்திய இராணுவம். சிறிய நாடுகளான பெலாரஸ், கசகஸ்தான் போன்ற நாடுகளும் கூட அடுத்தகட்ட போட்டிக்கு இரசியா, சீனா ஆகிய நாடுகளுக்கு இணையாகத் தகுதி பெற்றுள்ளன.
சர்வதேச ரீதியில் இராணுவத் தளவாடங்களின் உறுதித் தன்மையைப் பரிசோதிக்கும் விளையாட்டுப் போட்டிகள் இவை. இப்போட்டிகளில், இரசிய தொழில்நுட்ப உதவியோடு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டாங்கிகள் தான் தற்போது ஓட்டத்தின் போதே பழுதடைந்துள்ளன.
கடந்த 2001-ம் ஆண்டு இரசியாவில் இருந்து அறுநூற்று ஐம்பத்தேழு T-90 ரக டாங்கிகள் ரூ. 8525 கோடி மதிப்பில் இறக்குமதி செய்யப்பட்டன. பின்னர் இந்த ரக டாங்கிகளை, இந்தியாவிலேயே தயாரிக்கும் உரிமத்தை இரசியாவிடமிருந்து பெற்றுக் கொண்டு, இங்கேயே தயாரிக்கத் தொடங்கியது இந்தியா. அப்படித் தயாரிக்கப்பட்ட டாங்கிகளில் ஒன்று தான் தற்போது போட்டியில் பங்கேற்று நடுவழியில் பழுதடைந்த ‘T-90 பீஷ்மா’ வகை டாங்கி.
சமீபத்தில் தான், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம், சொந்த நாட்டிலேயே தயாரான அர்ஜூன் மார்க் – II வகை டாங்கிகளை வாங்கிப் பயன்படுத்த இந்திய இராணுவம் மறுப்பது குறித்து தனது அதிருப்தியைத் தெரிவித்திருந்தது. கடந்த 2010ம் ஆண்டில் நடத்தப்பட்ட சோதனைப் போட்டியில் அர்ஜூன் மார்க்-II வகை டாங்கிகள் T-90 வகை டாங்கிகளை விட சிறப்பாகச் செயல்பட்டன என்றும் கூறியிருக்கிறது. ஆனால் இராணுவமோ இது அதிக எடை கொண்டதாய் இருக்கிறது என்று கூறி அதனை உபயோகிக்க முடியாது என மறுத்திருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கையில் இராணுவத்திற்கு பல இலட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும் சூழலிலும், போதுமான தோட்டாக்கள் இல்லை, போதுமான துப்பாக்கிகள் இல்லை, என்பது போன்ற செய்திகள் அவ்வப்போது கசிந்து கொண்டே இருக்கின்றன. இவ்வளவுக்கும் இந்தியா கடந்த 16 வருடங்களாக எந்த நாட்டுடனும் போரில் ஈடுபடவில்லை.(சொந்த நாட்டு மக்கள் மீது மட்டும் தான் போர் தொடுத்திருக்கிறது). அப்படியெனில், ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்படும் இலட்சக் கணக்கான கோடிகள் வேறு எங்கு தான் செல்கின்றன?
மற்றொருபுறம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம், இந்தியாவில் இராணுவத் தளவாடங்களைச் சொந்தத் தொழில்நுட்பத்தில் உருவாக்கும் திராணியற்றதாய் இருக்கிறது. இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால், அத்தகைய முயற்சியே எடுக்காமல் இருக்கிறது. வெளிநாடுகளிலிருந்து தொழில்நுட்பத்தை வாங்கி இங்கு தளவாடங்களைத் தயாரிப்பதையே பெருமையானதாகக் காட்டிக் கொண்டு வருகிறது. இராணுவத்தின் தேவையை ஒட்டி ஆராய்ச்சியில் ஈடுபட்டு, தளவாடங்களை வடிவமைப்பதோ, உருவாக்குவதோ செய்யப்படுவதில்லை.
பாதுகாப்பு ஆராச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனமாகட்டும் அல்லது இந்திய இராணுவம் ஆகட்டும், இராணுவத் தளவாடங்களை வாங்குவதிலோ, அதன் தரம் குறித்த விவரங்களை பொதுமக்களுக்கு அறியத் தருவதிலோ, வெளிப்படையாக இல்லை. ஒதுக்கப்படும் பல இலட்சம் கோடி நிதி யார் பையில் சென்று போய்ச் சேருகிறது என்பதும் ஏதாவது ஒரு சமயத்தில் மட்டுமே ஊழலாக அம்பலப்படுகிறது. மற்ற சமயங்களில் ஆயுத பேர ஊழல்கள் கமுக்கமாக நடைபெறுகின்றன.
நாட்டின் பாதுகாப்புக் காரணங்கள் கருதி இத்தகவல்களை பொதுமக்களுக்கு அறியத்தர முடியாது எனக் கூறுகின்றது அரசு. அப்படி இரகசியமாக வைக்கப்பட்ட சமாச்சாரங்கள் தான் சில மாதங்களுக்கு முன்பு ஹெலிகாப்டர் விபத்துகளாகவும், தற்போது இரசியாவில் டாங்கிகளின் பழுதாகவும் பல்லிளித்திருக்கின்றன. இராணுவத்திலும், பாதுகாப்புத்துறை ஆராய்ச்சியிலும், இலஞ்ச ஊழலுக்கு அடிகோலிடும் தனியார்மயம்தான் இதற்கு காரணமென்பதை தேசபக்தர்கள் ஒத்துக் கொள்வார்கள?
எல்லையிலே இராணுவ வீரர்கள் சாகும் போது நீங்கள் இங்கே சப்பாத்தி சாப்பிடலாமா? என்று கேட்கும் பா.ஜ.க ரோசக்காரர்களின் ஆட்சியில் போர்த் தளவாடங்களின் இலட்சணம் இதுதான். இந்த டாங்கிகளை வைத்துக் கொண்டு இவர்கள் கோழி கூட பிடிக்க முடியாது. ஒலிம்பிக்கில் மட்டுமல்ல, சாதரண டாங்கி போட்டியில் கூட இந்தியா தோற்பது இருக்கட்டும், பங்கேற்கவே முடியவில்லை எனும் போது………
வல்லரசுக் கனவு என்பது வெறும் கனவு மட்டும்தான் !
மேலும் படிக்க:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக